Thursday, April 12, 2012

நந்தன வருஷ பலன்கள் - கன்னி

கன்னி:

"கன்னியான் ஏய்க்கப்படுவான்" என்பதற்கேற்ப யாரையும் எளிதில் நம்பி விடும் பழக்கம் உடையவர். அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை கடைபிடியுங்கள். நீங்கள் இந்து மதத்தில் பிறந்தவர் என்றால் பொதுவாக உங்களுக்கு முருகன், விஷணு, ஐயப்பன் சம்பந்தப்பட்ட பெயர்கள் அமைந்திருக்கும். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும்.

எப்படி இருக்கப் போகிறது இந்த நந்தன வருடம்:

இந்த "நந்தன” வருடத்தில் குரு பகவான், உங்களின் பாக்கியஸ்தானத்தில் ராசியில் சஞ்சரிக்கிறார். பொதுவாக குரு பகவான் பாக்கிய ராசியில் சஞ்சரிப்பது சிறப்பு என்பதே பொது விதி. அதுவே இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயம், அந்த குரு பகவான், சுக ஸ்தானம், களத்ர ஸ்தானம் என்கிற கேந்திர ஸ்தானங்களுக்கு அதிபதியாகி கேந்திராதிபத்ய தோஷம் பெற்றாலும் பாக்கியத்தையும் தருகிறார். இதனால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். இது "ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு' என்கிற விதியின்படி அமைகிறது. இன்பமாய் அனுபவியுங்கள்! இந்தக் காலகட்டத்தில் யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றில் ஈடுபட்டு மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வது நலம் பயக்கும். சில அன்பர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பிறரின் முகபாவனைகளைக் கண்டே அவர்களின் மனதை அறிந்துகொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அதேநேரம் இக்கட்டான சூழ்நிலைகளில் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்கவும். வேகத்துடன் விவேகத்தையும் கூட்டிக்கொண்டால் உங்கள் செயல்கள் அனைத்தும் திட்டமிட்டபடி குறிக்கோள்களை எட்டும். அதற்காகத்தான் "யோகா' பயிலுமாறு குறிப்பிட்டுள்ளோம்.

தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானால் ஏமாற்றங்களிலிருந்து தப்பிப்பீர்கள். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு வருங்காலத்தை வளமாக்கிக்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் திடீரென்று பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே தீரும். தீயவர்கள் உங்களை விட்டு தாமாகவே விலகி விடும் அதிசயம் நிகழும். அதேநேரம் இளைய சகோதரர்களுடனான உறவில் சில சலசலப்புகள் ஏற்படும். ஆனாலும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு அவற்றை சமாளிப்பீர்கள். சிலர் தற்போது வசிக்கும் வீட்டிலிருந்து பெரிய வீட்டிற்குக் குடிபெயர்வார்கள்.

இந்த ஆண்டு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானால் தொழிலில் அதிக முதலீடுகளைச் செய்வீர்கள். இதனால் வருமானம் குவியும். உங்கள் புகழும், கௌரவமும் உயரும். இது நாள் வரை தேவையற்ற வீண் பழி சுமந்த சில வாசகர்கள், அவற்றிலிருந்து விடுபடுவார்கள். உங்களின் முயற்சிகள் பல மடங்காக உயர்ந்து, அதற்கேற்ற வெற்றி கிடைக்கும். தனஸ்தானத்தில் இருக்கும் சனி பகவானால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்கள் துரிதமாக நடக்கும். குடும்பத்தில் அரங்கேறும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். உங்கள் பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலை தூக்க நேரலாம். கவனத்துடன் அதைத் தவிர்த்துக் கொள்ளவும். "நந்தன” ஆண்டு இறுதி வரை குரு பகவானின் பார்வையைப் பெற்று ஏழரை நாட்டு சனியின் கடைசி காலகட்டம் நடக்கத் தொடங்கும். இக்காலகட்டத்தில் சஞ்சரிக்கும் உச்சம் பெற்ற சனி பகவானால் உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும்; தன்னம்பிக்கை உயரும். உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும். வருமானம் நல்ல முறையில் வந்தாலும், சிலருக்கு குறுக்கு வழியில் செல்ல மனம் நினைக்கும். எனவே மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு நேர் வழியில் செல்லவும். இதன்மூலம் பல பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்கும். இதனால் மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். மேலும் அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டு செய்வீர்கள். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவராக உயர்வீர்கள். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். அதேசமயம் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்த பிறகே ஈடுபடவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் கொள்முதல் பொருட்களை விற்று நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நெருங்கியவர்களுக்கு அரிய உதவிகளைச் செய்து கௌரவம் அடைவீர்கள். உங்கள் சிந்தனையில் தெளிவு பிறக்கும். செயலில் வேகம் அதிகரிக்கும். புதிய நிலங்களை வாங்குவதற்குக் கடன் கிடைக்கும். உங்கள் கழனியில் வேலை செய்யத் திறமையான ஆட்கள் கிடைப்பார்கள். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆயினும் எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். சில நிறுவனங்களால் முந்தைய காலகட்டத்தில் நேரிட்ட மன வருத்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பது, முன்னேற்றத்திற்கு உதவும். ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள். பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பலம் பெறுவீர்கள். மற்றபடி அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு குழப்பங்களைத் தவிர்க்கவும். மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள். அதேநேரம் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.

பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். முடிந்தால் வியாழக்கிழமைகளில் 27 கருப்புக் கொண்டைக் கடலைகள் கட்டிய மாலைகள் இரண்டை குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் அணிவித்துப் பலன் பெறுங்கள்.

1 comment:

Rathinavel.C said...

Hello Ramakrishnan.
Your mobile is switched off for the last three days.Do u have any other number to contact you.

Thanks
Rathinavel.C