கேள்வி: இன்று நாம் பார்க்கப் போகும் தலைப்பு மிக முக்கியமான தலைப்பு. மஹாளய அமாவாஸ்யை நெருங்கி விட்டது. முன்னோர்களை வழிபடும் முறைகளையும், அமாவாஸ்யை முக்கியம் பற்றியும் பார்க்கப் போகிறோம்.
பதில்: முதலில் ஒன்றை தெளிவாக சொல்லி விடுகிறேன். இங்கு சொல்லப்படும் கருத்துக்கள் அனைத்தும் எனது தனிப்பட்ட கருத்துக்களே. இவையனைத்தும் ஆதாரபூர்வமாகவும் யதார்த்தமாகவும் ஆராய்ந்து பார்த்துதான் சொல்லப்படுகிறது. யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க ஜோதிடம் ஒன்றும் கடைச்சரக்கல்ல. அது புனிதமானது.
எதற்காக நமது கலாசாராத்தில் முன்னோர் வழிபாடு வந்ததென்றால் நான் இந்த பூமிக்கு வர முக்ய காரணம் அவர்கள்தான் அதனால்தான், நமது மதத்தில் முன்னோர் வழிபாடு. சரி விஷயத்திற்கு வருவோம். என்றெல்லாம் வணங்க வேண்டும், யாரெல்லாம் வணங்க வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
இதை நாம் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.
[1] தாய் தந்தை இருவரும் இருப்பவர்கள்
[2] தாய் அல்லது தந்தை யாராவது ஒருவர் இல்லாதவர்கள்
[3] தாய் வழி தந்தை வழி பாட்டி, தாத்தா இருப்பவர்கள் அல்லது இருவரில் ஒருவர் இருப்பவர்கள்
[4] தாய் தந்தை இருவருமே இல்லாதவர்கள் ஆனால் கல்யாணம் ஆகாதவர்கள்
[5] தாய் தந்தை இருவருமே இல்லாதவர்கள் ஆனால் கல்யாணம் ஆனவர்கள்
யார் என்றாலும் இந்த ஐந்திற்குள் அடங்கி விடுவார்கள் என நினைக்கிறேன்.
சரி தொடரலாம்..
தாய் தந்தை இருப்பவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களுக்கு தனியாக சொல்லப்படும்.
--------------------------------------------------------------------------------------
தாய் தந்தை இறந்தவர்களுக்கு மேற்கொண்டு சில நடைமுறைகளை சொல்ல போகிறேன்.
அதை கவனமுடன் படிப்பதோடு மட்டுமில்லாமல், நடைமுறையிலும் கொண்டு வருவது தங்களுடைய சந்ததிகளுக்கு நன்மை பயக்கும். முதலில் எத்துனை பேருக்கு தமது தாய் தந்தையர் இறந்த தேதி, நேரம் தெரியும். தெரியவில்லையென்றால் தெரிந்து கொண்டு படிக்க ஆரம்பியுங்கள். தெரிந்தவர்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நன்று. அவர்கள் இறந்த தேதிக்குண்டான திதி தெரியுமா? (திதி தெரியாதவர்களுக்கு: தங்கள் முன்னோர்கள் இறந்த தேதி கொடுத்தால் திதி கண்டுபிடித்து தரப்படும் - 1900 முதல் 2010 வரை - இலவச சேவை).
இப்போது தங்களுக்கு திதி கிடைத்திருக்கும்.
சரி, முன்னோர்களை வழிபட என்னென்ன முறைகள் உள்ளன?
அவர்கள் இறந்த திதி வருடா வருடம் வரும், அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணத்திற்கு கட்டாயம் கறுப்பு எள்தான் பயன்படுத்த வேண்டும். கட்டாயம் கீழ்க்கண்ட பெயர்களை சொல்லி செய்ய வேண்டும்.
தாய் வழி | தந்தை வழி |
உங்கள் தாயாரின் தகப்பனார் - தாயார் | உங்கள் தகப்பனாரின் தகப்பனார் - தாயார் |
உங்கள் தாயாரின் தாத்தா - பாட்டி | உங்கள் தகப்பனாரின் தாத்தா - பாட்டி |
உங்கள் தாயாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி | உங்கள் தகப்பானாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி |
மேற்கண்டவர்களுக்கு கட்டாயம் தர்ப்பணம் செய்தல் வேண்டும். மேலும் உங்கள் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் இறந்திருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் தகப்பனாருடன் பிறந்தவர்கள் இறந்திருந்து அவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம்.
கேள்வி: பெண்கள் செய்யலாமா?
பதில்: எனது பதில் தங்களுடன் சகோதரர்கள் பிறக்காத நிலையில் கட்டாயம் செய்யலாம்
கேள்வி: இதை ஆற்றங்கரையில்தான் செய்ய வேண்டுமா?
பதில்: எங்கு வேண்மானாலும் செய்யலாம். ஆற்றில், கடலில், அருவியில், கிணற்றடியில், நமது பூஜையறையில், ஹாலில் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். மனம் சுத்தமாயிருக்க வேண்டும்.
கேள்வி: வெளிநாடுகளில் இருப்போர் என்ன செய்யலாம்?
பதில்: வீட்டில் செய்வது நல்லது.
கேள்வி: தர்ப்பணத்திற்கு தனியாக ஆட்களை வைத்துதான் செய்ய வேண்டுமா?
பதில்: அவசியம் இல்லை. தங்களுக்கு முறைகள் தெரிந்திருக்கும் பக்ஷத்தில் தாங்களே செய்து கொள்ளலாம். எனினும் கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது நல்லது.
கேள்வி: தர்ப்பணம் செய்யும் முறைகளை சொல்லுங்களேன்?
பதில்: முதலில் அவரவர்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு உண்டான திதி கண்டுபிடித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அந்த திதி ஒவ்வொரு வருஷமும் வரும் போதும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தாய் தந்தை இருவருமே இருப்பவர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாரம் கிடையாது. தாயோ தந்தையோ இல்லாதவர்கள், அல்லது இருவருமே இல்லாதவர்கள் தர்ப்பணம் செய்யலாம். நேற்று கொடுத்த டேபிளை மீண்டும் கொடுக்கிறேன்.
தாயார் இல்லாவிட்டால் தாயார் பெயர் | தந்தையார் இல்லாவிட்டால் தந்தை பெயர் |
உங்கள் தாயாரின் தகப்பனார் - தாயார் | உங்கள் தகப்பனாரின் தகப்பனார் - தாயார் |
உங்கள் தாயாரின் தாத்தா - பாட்டி | உங்கள் தகப்பனாரின் தாத்தா - பாட்டி |
உங்கள் தாயாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி | உங்கள் தகப்பானாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி |
நல்லது. மேற்சொன்னதில் சிலருக்கு 14 பெயர்களும் வரலாம். சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் நன்மையைத் தரும். பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கிடைத்தாலும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
நல்லது, தொடருகிறேன்.
தர்ப்பணம் அன்று விரதம்:
முதலில் தர்ப்பணம் செய்யும் நாள் அன்று காலை சாப்பிடக் கூடாது. மதியம் சாப்பிடலாம். கத்திரிக்காய், வாழைக்காய் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, மாமிசம் உண்ணுதல் கூடாது. மிளகு சேர்ப்பதும் நன்மையைத் தரும். புரிகிறதா? பச்சரிசி உண்ண வேண்டும். இரவு சாதம் சாப்பிடுதல் கூடாது. இட்லி, தோசை, சப்பாத்தி சாப்பிடலாம்.
தர்ப்பணம் செய்யும் முறைகள்:
முதலில் யாருக்கு திதியோ அவருக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். உதாரணமாக திதி உங்கள் தந்தையாருக்கு என்றால் முதலில் உங்கள் தந்தைக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். பின் தந்தை வழி டேபிளில் உள்ளவர்களுக்கு. பின் தாய் வழி டேபிளில் உள்ளவர்களுக்கு.
மந்திரம் வேண்டுவோர் - மெயில் செய்தால் அனுப்பித் தரப்படும்.(தேவைப்படுவோருக்கு மட்டும்)
கேள்வி: என்றெல்லாம் தர்ப்பணம் செய்யவேண்டும்:
பதில்: ஒரு வருடத்தில் தாய் தந்தையர் இறந்த திதிகளை தவிர என்றெல்லாம் தர்ப்பணம் செய்தல் வேண்டும் என்று கீழ்க்கண்ட டேபிளில் கொடுத்திருக்கிறேன்.
ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் 12 மாதங்கள் * 1 | 12 நாட்கள் |
ஒவ்வொரு கிரஹணத்தன்றும் (சூரிய சந்திர கிரஹண காலங்களில்) | 4 நாட்கள்*+ |
ஒவ்வொரு மாத அமாவாஸ்யையின் போதும் (12 மாதங்கள் * 1) | 12 நாட்கள் |
மொத்தம் | 28 நாட்கள் |
*+: சூரிய சந்திர கிரஹணங்களின் தர்ப்பண விதிமுறைகள் தனியாக உள்ளது. அதை கிரஹண காலங்களில் சொல்கிறேன். கிரஹண தேதிகள் பின் அறிவிக்கப்படும்.
இனி இவ்வருடத்திய தர்ப்பண தேதி விபரங்கள்:
தமிழ் மாதம் | ஆங்கிலம் | கிழமை | சிறப்பு |
புரட்டாசி - 21 | 07-10-2010 | வியாழன் | மஹாளய அமாவாஸ்யை |
ஐப்பசி - 01 | 18-10-2010 | திங்கள் | மாதப்பிறப்பு |
ஐப்பசி - 19 | 05-11-2010 | வெள்ளி | அமாவாஸ்யை |
கார்த்திகை - 01 | 17-11-2010 | புதன் | மாதப்பிறப்பு |
கார்த்திகை - 19 | 05-12-2010 | ஞாயிறு | அமாவாஸ்யை |
தொடரும்....
No comments:
Post a Comment