வியாழ நோக்கம் என்றால் என்ன?
நமது நண்பர் ஒருவர் அவரது பெண்ணிற்கு திருமணத்திற்காக ஜாதகம் பார்க்க ஒரு ஜோதிடரிடம் சென்றிருக்கிறார். அந்த ஜோதிடர் நமது நண்பரிடம் ”உங்களது பெண்ணிற்கு இன்னும் வியாழ நோக்கம் வரவில்லை. எனவே வியாழ நோக்கம் வந்த பின் தான் திருமணம் நடக்கும். வியாழ நோக்கம் வருவதற்கு இன்னும் ஒரு வருடம் ஆகும். எனவே ஒரு வருடம் கழித்து திருமணம் செய்யுங்கள்” என்றிருக்கிறார். உடனடியாக அவர் எனக்கு மெயில் செய்திருந்தார். அவருக்காகவும், எனக்காகவும், நமது நண்பர்களுக்காகவும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
பதில்:
முதலில் ஒரு விஷயத்தில் நாம் தெளிவு பெறுவோம். ஜோதிடத்தில் குரு என்றாலும் வியாழன் என்றாலும் ஒன்றுதான்.
கோச்சாரப்படி வியாழன் ( குரு ) உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படுகிறது. இது ஆண்களுக்கு.
பெண்களுக்கு கோச்சாரப்படி வியாழன் ( குரு ) உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ அல்லது எட்டாம் இடத்தயோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படுகிறது.
சரி விஷயத்திற்கு வருவோம். எதற்காக வியாழ நோக்கம்? “குரு பார்க்க கோடி நன்மை” என்ற வாசகம் நமக்கு நன்றாக தெரியும். எனவே குரு பார்வை வரும் போது எந்த தடங்கலும் இல்லாமல் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
அது ஏன் ஒருவருடம்?
அதாவது குரு வருடத்திற்கு ஒரு முறை ராசி விட்டு ராசி இடம் பெயருவார். அதனால் அந்த ஜோதிடர் ஒரு வருடம் என சொல்லியிருக்கிறார்.
சரி குரு பார்த்தால் உடனே திருமணம் நடைபெற்று விடுமா? எனது பதில் அப்படி கிடையாது என்பதுதான். என்னுடைய விளக்கம், எனது பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும், புரியும். நாம் ராசியை எடுத்துக் கொள்ள மாட்டோம், லக்னத்தைதான் எடுப்போம். நமக்கு லக்னம்தான். சரி அப்படியே கோச்சாரப்படி லக்னத்தை குரு பார்த்தால் திருமணம் நடைபெற்று விடுமா? நடக்காது. இதற்காக வியாழகிழமை தோறும் தக்ஷிணாமூர்த்திக்கு மாலை போடுவது, விளக்கு ஏற்றுவது என பரிகாரங்களும் நிறைய உள்ளன. அது அவரவர் இஷ்டம். என் வரையில் திசாபுக்தி அனுகூலம், கிரகங்கள் வீற்றிருக்கும் இடம், கிரஹ பார்வை என நிறைய உள்ளன. அனைத்தையும் ஆராய்ந்து பார்த்துதான் சொல்ல இயலும். இதில் பார்த்தீர்கள் என்றால் தெரியும் இதில் கோச்சாரம் இடம் பெறவில்லையென்று. கோச்சாரம் வெறும் 20% பலன்களைத்தந்தால் அதிகம்.
நமது ஜாதக பலன்கள் எப்படி நடக்கும் என்று தெரியுமா? ஒருவரது ஜாதகத்தில் முக்கியமானவைகளாக நான் கருதுவது திசா புத்தி பலன்களைத்தான். மேலும் கோச்சாரப்படி பார்க்கும் போது லக்னத்தை உங்கள் ராசியாக்கி அதற்கு ராசிபலன் பாருங்கள். எனவே திருமணம் நடைபெறுவதற்கு உங்கள் திசா புக்தி உதவினால்தான் அது நடைபெறும். நல்லது. மேலும் நாம் பார்க்கும் வரன்களுக்கு குரு பார்வை இருந்தாலும் போதும். அதாவது மாப்பிள்ளை அல்லது பெண் இருவரில் ஒருவருக்கு அனுகூலமான திசை, குரு பார்வை இருந்தாலே, நடந்தாலே திருமணம் நடந்து விடும். கோச்சாரத்தை பார்ப்பதை விட்டு விட்டு அனைவரும் திசாபுக்தி பலன்களை பாருங்கள்.
உதாரணமாக ஸிம்ஹ ராசிக்காரர் ஒருவரை(திருமணமாகாதவர்) எடுத்துக் கொள்வோம். அவருக்கு இப்போது சரியான வியாழ நோக்கம் உள்ளது. ஆனால் அனுகூலமான திசை இல்லை என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு திருமணம் நடப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். ஜாதகம் இல்லாதவர்களுக்கு திசை கண்டுபிடிக்க முடியாது. அவர்களுக்கு பலன் சொவதும் கடினம்.
சரி இப்போது யார் யாருக்கு குரு பார்வை உள்ளது. கீழே உள்ள படத்தை பாருங்கள்.
வியாழனுக்கு 5, 7, 9ம் பார்வைகள் என மூன்று பார்வைகள் உண்டு. வியாழன் இருக்கும் இடம் ஒன்றாம் இடம் என் வைத்துக் கொண்டு Clockwiseஆக எண்ணினால் நமக்கு மேற்கண்ட படம் கிடைக்கும்.
மேற்கண்ட படம் படி
ஆண்கள் - மேஷம், மிதுனம், ஸிம்ஹம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்களுக்கு
பெண்கள் - மேஷம், மிதுனம், ஸிம்ஹம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு உள்ளது.
மேற்கண்ட இராசிக்காரர்களுக்கு திசா புக்தி அனுகூலமாக இருந்தால் நிச்சயம் திருமணம் விரைவில் தங்கு தடையின்றி நடக்கும்.
அனைவருக்கும் எமது ஆசிகள்.
குறிப்பு: யாம் எழுதிய முன்னோர்கள் வழிபாடு - குறிப்புகளுக்கு நிரம்ப கேள்விகள், பாராட்டுகள், விமர்சனங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன. அந்த கேள்விகளுக்குண்டான பதில்களை சீக்கிரம் பதிவு செய்கிறேன்.
தங்கள் ஊக்கத்திற்கு என் மனமார்ந்த நன்றி.
No comments:
Post a Comment