எதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும்?
கடந்த 6 வாரங்களாக என் மனதை உறுத்திக் கொண்ட, கொண்டுள்ள விஷயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த அனுபவம் கோவிலுக்கு செல்ல நினைப்பவர்களுக்கும், கோவிலில் பூஜை செய்பவர்களுக்கும் ஒரு நல்ல படிப்பினையாக அமையும்.
எது எப்படியோ நான் கோவிலுக்கு செல்ல போவதில்லை.
நாமும் ஜோதிடராக இருக்கிறோம் அனைவருக்கும் ஜோதிட ஆலோசனைகள் வழங்குகிறோம் ஆனால் நாம் கோவிலுக்கு செல்வதில்லை(அடிக்கடி). இதை எனது தாயாரும் பல ஆண்டுகளாக சொல்லி வந்தார். கடந்த 6 வாரங்களுக்கு முன் எனது தாயார் "டேய் ராம்! சனிக்கிழமை தோறும் நீ ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை போட்டு விட்டு வா! அப்பா சொல்லியிருக்கார்" என்றார். அதிலும் ஏகப்பட்ட நிபந்தனைகள். கோவில் வைணவ சம்பிரதாயத்தை பின்பற்ற வேண்டும் என்று. தாய் சொல்லை தட்டாத பிள்ளை நான். சரிம்மா என்றேன். அன்று ஆரம்பித்தது என் கிரஹசாரம். முதல் மூன்று வாரங்கள் என்னால் கோவிலுக்கு செல்ல முடியாத பணிச்சுமை.
சம்பவம் - 01:
இடம்: அம்பத்துர்ர் ஒரகடம் - ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்.
4வது வாரமும் வந்தது. முதல் நாளே அதாவது வெள்ளிகிழமையே வெற்றிலை வாங்கி வந்து விட்டேன். மறுநாள் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெற்றிலை மாலையை பயபக்தியுடன் கோர்த்து கொண்டு கோவிலுக்கு சென்றேன். அன்று புரட்டாசி சனிக்கிழமை. கோவிலில் நல்ல கூட்டம். கூட்டம் கலையும் வரை காத்திருந்தேன். 8.45க்கு மேல் மாலையை போட்டேன். எங்களது சம்பிரதாயத்தில்(திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர்கள்) பரிகார வெற்றிலைக்கு பாக்கு வைத்து மாலை கட்டுவதில்லை. சுசீந்திரம் ஸ்ரீ தாணுமாலையன் ஸ்வாமி கோவிலில் கூட இதைத்தான் கடைபிடிப்பதாக கேள்வி. மறு வாரமும் வந்தது இதே போல் கொண்டு சென்றேன். அங்கு பூஜை செய்பவர் எனது மாலையை தொட்டு பார்த்து பாக்கு வைக்கவில்லையா என்றார். நானும் இல்லை பரிகார வெற்றிலைக்கு பாக்கு வைத்து கட்டுவதில்லை என்றேன். உடனடியாக என்னை ஒரு மனிதனென்றும் பாராமல் எனது முகத்தில் அந்த மாலையை விசிறி எறிந்தார். என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. எனக்கு மோபம் ஒருபக்கம், சோகம் ஒருபக்கம். இல்லை ஸ்வாமி நான் போன வாரம் தங்கள் கோவிலில் மாலை போட்டேன். நீங்கள் அதை வாங்கி ஆஞ்சநேய ஸ்வாமிக்கு போட்டீர்கள் என்றேன். போடா நீ போன வாரம் கோவிலுக்கே வரவில்லை என்றார். எனக்கு மேலும் அந்த இடத்தினில் இருக்க பிடிக்கவில்லை.
சம்பவம் 2:
இடம்: திருத்தணி அருகில் நல்லாட்டூர் ஸ்ரீ வீர ஆஞ்சநேய ஸ்வாமி திருக்கோவில்.
அடுத்த வாரம் சரி வேறு கோவிலுக்கு செல்லலாம் என நினைத்து இந்த கோவிலுக்கு வந்தேன். அர்ச்சனை சீட்டு வாங்குங்கள் என்றார் அங்கு பூஜை செய்பவர். வாங்கினேன். அர்ச்சனை செய்யும்போது எனது குடும்பத்தின் பெயர்களை சொல்ல ஆரம்பித்தேன். அவரது முகம் கோண ஆரம்பித்தது. ஒரு அர்ச்சனை சீட்டுக்கு 10 பெயர்தான் என்றார். நான் 8வது நபரின் பெயரை சொல்லிக் கொண்டிருந்தேன். இல்லையே ஒரு குடும்பத்தில் இவ்வளவு நபர்கள் இருக்க முடியாதே என்றார். நான் கேட்டேன் உங்களுக்கு எப்படி தெரியும் எனது குடும்பத்தை பற்றி என்றேன். எனக்கு கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார். பொறுமையாக கேட்டு கொண்டு வெளியே வந்தேன்.
மிகவும் முக்கியமான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய, சொல்ல வேண்டிய குறிப்புகளை மனதில் பதிய வைத்தேன்.
கோவிலில் பூஜை செய்பவர் எப்படி இருக்க வேண்டும்?
மந்திரம் எப்படி சொல்ல வேண்டும்?
அவர் என்னவெல்லாம் செய்யக்கூடாது?
என்னவெல்லாம் செய்யலாம்?
போன்ற விஷயங்களை பல சொல்ல போகிறேன்...
இதை நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களை ஏமாற்றுபவர்களிடம் இருந்து பிழைத்துக் கொள்ளலாம்........
No comments:
Post a Comment