Thursday, April 12, 2012

நந்தன வருஷ பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்


குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவான பலன்களே.

இவை திசாபுத்தி பலன்களை பொறுத்து மாறுதலடையலாம்.


என்னுடைய அலைபேசி எண்: +91- 8220213194

என்னுடைய இமெயில்: ramjothidar@gmail.com

நந்தன வருஷ பலன்கள் - மீனம்

மீனம்:
உங்களைப் பற்றி:

நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் மீன இராசி வாசகர்களே, நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள். உழைப்புக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த நந்தன ஆண்டு:

இந்த ”நந்தன” ஆண்டில் குரு பகவானால் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பண வரவால் சந்தோஷம் அடைவீர்கள். நம்பிக்கையுடன் உங்கள் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். அதில் உங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். உங்கள் எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும்.
இந்த ஆண்டு உங்களின் தைரிய ஸ்தான ராசியில் சஞ்சரிக்கும் கேது பகவானால் சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புத்திசாலிகளின் நட்பைப் பெற்று பலனடைவீர்கள்.
பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானால் மன உறுதி உண்டாகும். கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பிறக்கும். ஏற்றுமதி - இறக்குமதி வியாபாரங்கள் சூடுபிடிக்கும். தூர தேசத்திலிருந்து மகிழ்ச்சி தரும் செய்திகளைக் கேட்பீர்கள். வெளிநாட்டுப் பயணங்களைச் செய்வீர்கள். சேமிப்பு விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களைப் பற்றி அவதூறாகப் பேசியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு உண்மை நிலையைப் புரிய வைத்து, நட்பைத் தக்க வைத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும்.
இந்த ஆண்டு முற்பாதியில் உங்களின் சப்தம ராசியில் வலம் வரும் சனி பகவான், பெற்றோர் மற்றும் நண்பர்கள் வழியில் ஏற்பட்ட மன வருத்தங்களை முற்றிலும் நீக்குவார். குறைந்த அளவு முதலீட்டிலும் அதிக லாபத்தை அள்ளுவீர்கள். எண்ணங்களுக்குத் தகுந்த செயல் வடிவம் கொடுப்பீர்கள். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது. உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், இக்கால கட்டத்தில் தீரும்.
பிற்பாதி முதல் ஆண்டு இறுதி வரை அஷ்டம சனி பகவானாக பவனி வருகிறார் சனி பகவான். இதனால் வீண் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். அலைச்சல்களுடன் நடந்த செயல்கள் நல்லபடியாக முடிவடையும். வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் கை வந்து சேரும். சென்ற இடத்திலெல்லாம் பிரச்சினையை சந்தித்தவர்கள்கூட இந்தக் காலகட்டத்தில் விரும்பி வரவேற்கப்படுவார்கள். சிலர் மனம் விரும்பிய வீட்டிற்குக் குடி பெயர்வார்கள். தக்க சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கௌரவக் குறைவு ஏற்படாமல் காக்கப்படுவீர்கள். களவு போயிருந்த பொருட்கள் திரும்பவும் கிடைக்கும். உறுதியின்றிச் செய்த வேலைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு அவை மளமளவென்று நடந்தேறும். "என்ன நடக்குமோ?' என்று பயந்த விஷயங்கள்கூட மகிழ்ச்சிகரமாக முடிவடையும். "வம்பில் மாட்டிக் கொண்டு விட்டோமே...' என்று தவித்த விவகாரங்களில் கடைசி தருணத்தில் தப்பித்துக் கொள்வீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்குமென்றாலும் அவர்களிடம், "மரியாதைக்குரிய தொலைவில்' இருந்து பழகுவது நல்லது. சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களையும், புதிய சந்தைகளையும் நாடிச் செல்வீர்கள். இந்த ஆண்டு முழுவதும் கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் சிரமங்கள் உண்டாகாது.
விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும். எனவே குறித்த காலத்தில் விதைத்து அறுவடை லாபத்தை அள்ளுங்கள். விளை பொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். அதேசமயம் கால்நடைகளால் பலன்கள் உண்டாகாது.
அரசியல்வாதிகள், தாங்கள் சார்ந்துள்ள கட்சியின் தொண்டர்களுக்கும், நெருங்கியவர்களுக்கும் மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் கெüரவம் உயரும். சமுதாயத்தில் அந்தஸ்து உண்டாகும். உங்களின் முயற்சிகள் உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.
கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். வருமானம் நன்றாக இருப்பதால் ரசிகர்களுக்காகச் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களால் நன்மை அடைவீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் அமைதி நிலவும். வெளியூர் மற்றும் வெளிநாட்டிலிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும். கணவரிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். கணவரின் உறவினர்களோடு வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
மாணவமணிகள் படிப்பில் வெற்றி வாகை சூடுவீர்கள். வாக்கு ஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சரிப்பதே அந்த வெற்றிக்குக் காரணம். மேலும் உங்கள் ஞாபக சக்தியும், அறிவாற்றலும் பெருகும். அதேநேரம் விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும். பெற்றோர்களின் ஆதரவுடன் உங்களின் எதிர்காலக் கல்வித் திட்டங்களைச் செவ்வனே நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

பரிகாரம் : பைரவரை வழிபட்டு வரவும். தேய்பிறை அஷ்டமி திதியை "பைரவாஷ்டமி' என்று கூறுவார்கள். அன்று பைரவரை வழிபட்டு வர சிறப்புகள் உண்டாகும்.

நந்தன வருஷ பலன்கள் - கும்பம்

கும்பம்:
உங்களைப் பற்றி:

எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாத கும்ப இராசி வாசகர்களே, நீங்கள் குடும்பபெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பவர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுபவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த நந்தன வருஷம்:

இந்த ”நந்தன” ஆண்டில் சஞ்சாரம் செய்யும் குரு பகவானால் உங்கள் சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். அவர்களுடன் சேர்ந்து இனிய பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள்.
அதேநேரம் ஆடம்பரக் கேளிக்கைகளுக்காக செலவு செய்வதைக் குறைத்துக் கொள்ளவும். சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம். "யா காவாராயினும் நா காக்க' என்ற வள்ளுவர் வாய் மொழியை எப்போதும் நினைவில் நிறுத்துதல் நலம் பயக்கும். மறைமுக எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி உங்களின் பதவியால் சில ஆதாயங்கள் கிடைத்து, மகிழ்ச்சி உண்டாகும். இதன் மூலம் பொதுநலக் காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள்.
இந்த ஆண்டு உங்களின் சுக ஸ்தான ராசியில் சஞ்சரிக்கும் கேது பகவானால் திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை, சில நேரங்களில் உருவாகலாம். எனவே உங்கள் காரியங்களில் கவனமாக இருக்கவும். மற்றபடி நேர்மையான எண்ணங்களால் உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்த நல்வாய்ப்பு உருவாகும். இதனால் மனதில் இருந்த காரணமில்லாத வருத்தங்களும், குழப்பங்களும் மறையும்.
தொழில் ஸ்தான ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவானால் உங்கள் பணிகளை விரைவில் செய்து முடிப்பீர்கள். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
உங்களின் எண்ணங்களும், செயல்களும் உங்களுக்கு வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தரும். கடினமாக உழைக்க வைக்கும் ராகு பகவான், அதற்கேற்ற பெரும் பலனைத் தருவதற்கும் தயங்க மாட்டார். அதேநேரம் ஓய்வெடுக்க முடியாமல் போவதால் உடலில் சோர்வு உண்டாகும். எனவே சரியான நேரத்தில் ஆகாரத்தை உட்கொண்டு உடல் வலிமையைத் தக்க வைத்துக் கொள்ளவும்.
இந்த ஆண்டு முற்பாதி வரை அஷ்டம ராசியில் சஞ்சரிக்கும் வக்ர கதி சனி பகவான், உங்களின் உடல் ஆரோக்யத்தில் சிறு பாதிப்புகளை ஏற்படுத்த முயல்வார். ஆயின் கவலைப்படத் தேவையில்லை. அந்த பாதிப்புகளில் இருந்து சனி பகவானே உங்களை விடுவிப்பார். இது ஒரு ஜோதிட விதி!
வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். தவிர்க்க இயலாத காரணங்களால் சகோதர, சகோதரிகளுக்குப் பணம் செலவழிப்பீர்கள். ஆயின் புதியவர்களின் நட்பால் கைப்பொருளை இழக்க நேரிடும் என்பதால் அதிக அறிமுகமில்லாதோரிடம் கவனமாக இருக்கவும்.
பிற்பாதி முதல் ஆண்டு இறுதி வரை உங்களின் பாக்ய ஸ்தான ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார் சனி பகவான். இதனால் சுக போக வசதிகளை அனுபவிப்பீர்கள். பயணங்களில் அதிர்ஷ்ட தேவதை தரிசனம் தருவாள். இதனால் பொருளாதார வளமும், சேமிப்பும் உயரும். அரசாங்க உதவிகளும் கிடைக்கும். உங்களின் ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாகப் பூர்த்தியடையும்.
உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் சிறப்பாக முடியும். எதிர்பார்த்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவாலும், நட்பாலும் அலுவலகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். சில முக்கியப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பீர்கள். மற்றபடி உங்கள் வேலைகளை முன் கூட்டியே யோசித்துச் செய்தால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
வியாபாரிகள் கூடுதல் எச்சரிக்கையுடன் வாணிபத்தில் ஈடுபடவும். எதையும் ஒரு முறைக்கு இரு முறை யோசித்துச் செயல்படுவது அவசியம். மற்றவர்களிடம் பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளவும். மற்றபடி வியாபாரத்தை சீரமைப்பதற்கு நீங்கள் சுயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும்.
விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். என்றாலும் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ள எடுக்கும் முயற்சிகளில் தடை ஏற்படும். அதனால் கொள்முதல் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்தவும். விவசாயக் கூலி வேலை செய்வோரோடு அனுசரித்துச் செல்லவும். அரசு மானியங்கள் உதவிக்கு வரும்; பழைய கடன்களும் வசூலாகும்.
அரசியல்வாதிகள், மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். எனினும் மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். இதனால் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் செல்லும். புதிய நட்புகளால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சக கலைஞர்களும், ரசிகர்களும் உங்களுக்கு நிறைவான ஆதரவு தருவார்கள். சுக ஸ்தானத்திலுள்ள கேது பகவானால் கடினமாக உழைத்து, உங்கள் முழுத் திறமையையும் வெளிக்கொணர்வீர்கள். வருமானமும் சீராகவே இருக்கும்.
பெண்மணிகள், மன நிம்மதியைக் காண்பீர்கள். தர்ம காரியங்களிலும், தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான ஆரம்பகட்ட வேலைகளைத் துவக்குவீர்கள். குடும்பத்தினருடன் சந்தோஷமாகப் பொழுதைக் கழிப்பீர்கள். கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகளை திருப்திகரமாக நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள்.
மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல் வலிமை பெற தக்க பயிற்சிகளில் ஈடுபடவும். வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் போடுங்கள். விளையாட்டுகளிலும் வெற்றிகளைப் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை படிப்படியாக உயரும்.
பரிகாரம்: சனிக் கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். "சனி அஷ்டகம்' பாராயணம் செய்யலாம். முடிந்தால் ஒருமுறை திருநள்ளாறு சென்று வரவும். "நள்ளாறா என நம் வினை நாசமே' என்கிறது தேவாரம். இதை மறவாதீர்கள்.

நந்தன வருஷ பலன்கள் - மகரம்

மகரம்:

உங்களைப் பற்றி:

எதிலும் வழக்கு போடும் மகர ராசிக்காரர்களே நீங்கள் எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசுபவர்கள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த நந்தன வருஷம்:


இந்த ”நந்தன” ஆண்டில் குரு பகவானால் தாயின் வழியில் நன்மைகள் உண்டாகும். உங்களை விட்டு விலகியிருந்த தாய் வழி உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, உங்கள் நன்மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். அதிகமான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். எந்த வயதினருக்கும் புதிதாக ஒரு கல்வியோ, கலையோ பயில வாய்ப்புண்டாகும். சிலருக்கு வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். செய்தொழிலில் வளர்ச்சி உண்டாகும். பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். அதேநேரம் உடல் நலத்தில் கவனமாக இருக்கவும். சரியான நேரத்தில் ஆகாரம் உட்கொண்டு, ஒவ்வாத உணவுகளைத் தவிர்த்தாலே போதும்; நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நண்பர்களிடம் கோபப்படாமல் நடந்துகொண்டு அவர்களின் உறவைத் தக்க வைத்துக் கொள்ளவும்; அது தக்க சமயத்தில் உதவும்.
இந்த ஆண்டு கேது பகவான், உங்களின் பூர்வபுண்ய, புத்திர, புத்தி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆரோக்யமான எண்ணங்கள் சிறகடித்துப் பறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்களின் மனதில் சிலரது போக்கினால் வருத்தங்கள் ஏற்பட்டாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் செயல்படுவீர்கள். எப்போதோ உங்களுக்கு உதவியவர்களுக்கு நீங்கள் மனமுவந்து உதவும் காலகட்டம் இது. சுதந்திரமாகச் சிந்தித்துத் தனித்துச் செயல்படுவீர்கள்.
லாப ஸ்தான ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவானால் உங்களைவிட்டு எதிரிகள் விலகுவார்கள்; புதிய உறவுகள் மலரும். அவர்கள் உங்கள் செயல்களுக்கு அரணாகத் திகழ்வார்கள். சிலர் புதிய திட்டங்களை நடைமுறைபடுத்துவார்கள். வருமானம் பெருகும். இதனால் புதிய சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள். அதேநேரம் எவரிடமும் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
இந்த ஆண்டு முற்பாதியில் பாக்யஸ்தான ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானால் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். அனைத்து விஷயங்களையும் நல்ல கண்ணோட்டத்துடன் காண்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் லாபம் குவியும். அந்த லாபத்தை எதிர்காலத்திற்காகச் சேமிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வீர்கள். தந்தை வழியில் சில அனுகூலங்களைக் காண்பீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் அடங்குவார்கள்.
ஆண்டின் பிற்பாதிக்குப் பிறகு உங்களின் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் சனி பகவான். இதனால் தொழிலில் ஏற்பட்ட இடையூறுகள் விலகும். எதிர்பாராத இடங்களிலிருந்து பண வரவு உண்டாகும். மனதில் அமைதி நிலவும். நிம்மதியாக உறங்குவீர்கள். உடல் உபாதைகள் முழுமையாகத் தீர்ந்துவிடும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. வெளியூரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும். ஆன்மீகச் சிந்தனையுடன் வாழ்க்கையை நடத்துவீர்கள்.
உத்யோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு கிடைக்கும். இதனால் ஊதியம் உயரும். மேலதிகாரிகள் உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடலில் இருந்த சோர்வும், மனதிலிருந்த குழப்பமும் மறையும். இதனால் உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சக ஊழியர்கள் உங்களிடம் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள். அலுவலகத்தில் சிறப்பான பயிற்சிகளைக் கற்றறிந்து வெற்றியடைவீர்கள்.
வியாபாரிகள், போட்டியாளர்களின் தடைக்கற்களைக் கடக்க சற்று போராட வேண்டியிருக்கும். கூட்டாளிகளை நம்பாமல் நீங்களே முன்னின்று செயல்பட்டால் வியாபாரத்தில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்கலாம். பண விஷயத்திலும் உஷாராக இருக்கவும். மற்றபடி சுகத்தை மறந்து கடினமாக உழைப்பீர்கள்.
விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். வங்கிகளிடமிருந்து கடன் கிடைக்கும். நீர் வரத்து நன்றாக இருப்பதால் விவசாயத்தில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். புதிய குத்தகைகளில் லாபம் கொட்டும். கழனிகளை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பு உயரும். பால் வியாபாரத்தாலும், கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும்.
அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப்படாமல் விவேகத்துடன் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மனங்களை வெல்லவும். மற்றபடி சமுதாயத்திற்குப் பயன்படும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிரிகளின் ரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்திப் புகழடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.
பெண்மணிகள், குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். நன்கு யோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்து சேமிப்புகளில் கவனம் செலுத்தவும். கடுமையான சொற்களை உதிர்க்காமல் நிதானமாகப் பேசவும்.
மாணவமணிகள், படிப்பில் ஏற்படும் இடையூறுகளைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். தெளிவான மனதுடன் படித்து நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். நண்பர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அதேசமயம் விளையாட்டுகளில் எதிர்பார்த்த வெற்றிகளைப் பெற முடியாமல் போகும்.

பரிகாரம்: "ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே! ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே' என்ற புனித மந்திரத்தை முடிந்த போதெல்லாம் கூறி, ஸ்ரீராதா கிருஷ்ணனை வழிபடுங்கள். இதுவொன்றே போதுமான பரிகாரம்.

நந்தன வருஷ பலன்கள் - தனுசு

தனுசு:

உங்களைப் பற்றி:

எதிலும் அப்பாவியாக இருக்கும் தனுசு இராசி வாசகர்களே, நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டீர்கள். வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள் சாதுவானவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த நந்தன வருஷம்:


இந்த ”நந்தன” ஆண்டில் குரு பகவான் உங்களை எதிலும் நிதானமாகவும், அளவெடுத்துச் சிறப்பாகவும் செயல்பட வைப்பார். இதனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசி, காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடக்கும். பூர்வீக சொத்துக்கள், சிரமமில்லாமல் கை வந்து சேரும். ஆலயத் திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். வருமானம், எதிர்பார்ப்பிற்கும் அதிகமாகக் கிடைக்கும். அன்னப் பறவை போல நல்லது - கெட்டது இரண்டையும் பகுத்து ஆராய்ந்து செயல்படுவீர்கள். தேக ஆரோக்யம் சீராக இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து வரும் நல்ல செய்திகள் உங்களின் செவிகளைக் குளிர்விக்கும்; ஆதாயமும் நல்கும். ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானால் உங்களின் சுய முயற்சியின் அடிப்படையில் செயற்கரிய காரியங்களைச் செய்வீர்கள். உங்களால் சகோதர, சகோதரிகளுக்கும் நன்மை உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவீர்கள். உங்களின் கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும். சிலருக்கு "நூதன கிரஹப் பிரவேசம்' செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகளில் இருந்தும், வழக்குகளில் இருந்தும் "குற்றமற்றவர்' என்று நிரூபிக்கப்பட்டு விடுபடுவீர்கள்; அதற்கான இழப்பீடுகளும் கிடைக்கும். மற்றபடி அவ்வப்போது ஏற்படும் மனச் சோர்வை நீக்கிக் கொள்ள, "நம:சிவாய' என்ற ஐந்தெழுத்தை ஓதவும். இந்த ஆண்டு உங்களின் அயன, மோட்ச, விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் ராகு பகவான். இவர் உங்களுக்கு, சில சந்தர்ப்பங்களில் அவசர புத்தியைக் கொடுப்பார்; எதிர்பாராத விதத்தில் தீயவர்களின் தொடர்பும் ஏற்படும். இதற்காக அஞ்சத் தேவையில்லை. சிவபெருமான் துணையினால் தீமைகளிலிருந்தும் தீயவர்களிடமிருந்தும் எளிதில் மீளலாம். இதற்கான தெளிவை, "நம: சிவாய' ஜபம் தருவது நிச்சயம். இந்த ”நந்தன” ஆண்டு முதல் பாதி வரை உங்களின் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் நீங்கள் ஓய்வெடுக்காமல் உழைத்துக்கொண்டே இருப்பீர்கள். அதனால் நற்பலன்களும் உள்ளன. செய்தொழிலில் தினமும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். இந்த ராசி வாசகர்களில் சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். இந்த ஆண்டு பிற்பாதி உங்கள் லாபஸ்தான ராசியில் சஞ்சரிக்கிறார் சனி பகவான். இவர், உங்கள் உழைப்புக்கு மேல் இரு மடங்கு வருமானத்தைத் தருவார்; மற்றவர்களைத் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லும் அளவிற்கு உயர்வீர்கள். கல்வி, கேள்விகளில் அரிய சாதனைகள் புரிய வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். செல்வத்தோடு செல்வாக்கும் உயரும். எதிர்பாராத இடங்களிலிருந்து தக்க உதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உயரும். பேச்சில் வசீகரமும், நடையில் கம்பீரமும் ஏற்படும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை முறைப்படுத்திச் செய்வீர்கள்.
உத்யோகஸ்தர்கள், அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து, மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கு உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்வீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சக ஊழியர்களுக்கும் உதவி செய்வீர்கள்.
வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். கூட்டாளிகளை அரவணைத்துச் சென்று காரியங்களைச் செய்யவும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது கவனமாக இருக்கவும்; அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.
விவசாயிகளுக்கு மகசூல் அதிகரித்து லாபம் பெருகும். கால்நடைகளால் நல்ல வருமானம் கிடைக்கும். எனவே புதிய கால்நடைகளை வாங்குவீர்கள். புதிய முயற்சிகளிலும் ஈடுபடுவீர்கள். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். வழக்குகள் நிலுவையிலிருந்தால் அவை முடிவதில் தாமதம் ஏற்படும்.
அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த இது உகந்த ஆண்டாக அமைகிறது. தொண்டர்களை அரவணைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் அகலும்.
கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஆனாலும் உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.
பெண்மணிகள், குடும்பத்தில் அனுகூலமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். பெரியோரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு, குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டாலும் தப்பித்துக்கொள்வீர்கள்.
மாணவமணிகள், படிப்பில் சிறப்பான கவனம் செலுத்துவீர்கள். பாடங்களை முன்னதாகவே படித்து முடித்து, ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்; எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். விளையாட்டுகளில் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வீர்கள். பெற்றோர்கள் உங்களுக்குப் பக்க பலமாக இருப்பதால் முயற்சிகளைத் தீவிரப்படுத்தலாம்.
 
பரிகாரம்: "ஐந்திற்கு இரண்டு பழுதில்லை' என்றொரு பழமொழி உண்டு. "நம: சிவாய' என்ற ஐந்தெழுத்தே வேத ஸாரம். "சிவ' என்ற இரண்டெழுத்தும், ஐந்தெழுத்துக்கு நிகரான புண்ணிய பலன்களை ஐயமின்றித் தரும் என்பதையே இந்த முதுமொழி வலியுறுத்துகிறது. ""சிவ' என்னும் திருநாமத்தால் தீவினைகள் மாளும்'' என்று தமிழ் மறையான "திருமந்திரம்' உரைக்கின்றது. எப்போதும் சிவ நாமம் ஓதுங்கள்! இந்த எளிய பரிகாரம், பெறற்கரிய நற்பலன்களைப் பெற்றுத் தருவது உறுதி.

நந்தன வருஷ பலன்கள் - விருச்சிகம்

விருச்சிகம்:
உங்களைப் பற்றி:

எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ள விருச்சிகம் இராசி வாசகர்களே, நீங்கள் எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர்.துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த நந்தன வருஷம்:


இந்த ”நந்தன” ஆண்டில் உங்களின் சஷ்டம ராசியான ஆறாம் ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானால் சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். உடல் சோர்வு முற்றிலும் மறையும். வருமானம் சீராகவே இருக்கும் என்றாலும் பேராசைக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றவும். நண்பர்கள் போல் பழகும் விரோதிகளிடம் கவனமாக இருக்கவும். அவர்கள் உங்களுக்கு எதிராகச் சில சமயம் சதி வேலைகளில் ஈடுபடலாம். ஆனாலும் கலங்க வேண்டாம். துர்க்கையன்னையை தொடர்ந்து வழிபட்டால், எதிரிகள் உதிரிகளாகித் தொலைந்து போவார்கள். யாராக இருப்பினும் நன்கு யோசித்த பிறகே வாக்கு கொடுக்கவும். மற்றபடி கடன் தொல்லைகள் ஏற்படாது. தர்ம காரியங்களைச் செய்வீர்கள். தடங்கல்களைத் தாண்டி வெற்றியடைவதில் ஐயமேயில்லை. அனுகூலமில்லாத விஷயங்களையும் உங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளும் புத்தி சாதுர்யம் ஏற்படும். இந்த ஆண்டு களத்திர ஸ்தானத்தில் கேது பகவான் சஞ்சரிப்பதால் கடினமான சூழ்நிலைகளிலும் உங்களின் தனித் தன்மையை இழக்க மாட்டீர்கள். அடுத்தவர்கள் உங்களுக்கு அறிவுரை கூறும்படி நடந்து கொள்ளமாட்டீர்கள். அரசாங்கத் தொடர்புகள் உங்களுக்குச் சாதகமாகவே அமையும். நீண்ட தூரப் பயணங்களால் நன்மை உண்டாகும். கடுமையாக உழைத்துச் செய்யும் காரியங்களில் வெற்றிவாகை நிச்சயம். களத்ர ஸ்தானமான ஏழாம் ராசியில் சஞ்சரிக்கும் கேது பகவான், தார்மீகச் சிந்தனைகளை மேலோங்கச் செய்வார். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் உழைப்பு வீண் போகாது. இது நாள் வரை உடலில் இருந்த சோர்வும் அயர்ச்சியும் மறையும். தேக ஆரோக்யம் சீராக மாறும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். தாயார் வழியில் இருந்துவந்த மன ஸ்தாபங்கள் மறைந்து சுமுகமான உறவு உண்டாகும். குடும்பத்திலும், உற்றார் உறவினர்களிடமும் உங்கள் செல்வாக்கு உயரும். இந்த ”நந்தன” ஆண்டு முதல் பாதியில் லாப ஸ்தான ராசியில் சஞ்சரிக்கும் வகர சனி பகவானால் உங்கள் செயல்களைப் புதிய உத்வேகத்துடன் செய்து முடிக்க வழி பிறக்கும். திட்டங்களைச் சரியாகத் தீட்டி அவைகளைப் படிப்படியாக, வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள்; புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். உங்கள் நண்பர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். பெரியோர்களின் ஆதரவு எப்போதுமிருக்கும். ஓய்வு நேரத்தில் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழவும் சந்தர்ப்பங்கள் அமையும். எனினும்
ஆண்டின் பிற்பாதியிலிருந்து ஏழரை நாட்டு சனி ஆரம்பிக்கிறதே என்று சஞ்சலப்பட அவசியமில்லை. சனி பகவான் சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு சேவை செய்து புண்ணியம் ஈட்டும் வாய்ப்பையே வழங்குவார். இதனால் தன்னலம் பார்க்காமல் உழைத்துப் புகழடைவீர்கள். உங்கள் உடலுழைப்புக்கு மேல் பன்மடங்கு லாபம் கிடைக்கும். கல்வி, கேள்விகளிலும் சிறந்து விளங்குவீர்கள். உத்யோகஸ்தர்கள் பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலர், விரும்பிய வெளியூருக்கு மாற்றலாகிச் செல்வார்கள். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாகவே நடந்து கொண்டாலும் தொல்லைகள் கொடுக்க மாட்டார்கள்; ஆனால் சக ஊழியர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உரிய நேரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் வேலைகளைத் திட்டமிட்டு சரியாகச் செய்வது அவசியம். வியாபாரிகளுக்கு தொழிலில் இருந்த போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அரவணைத்துச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி, மனதில் உற்சாகம் தோன்றும். அதேநேரம் வெளியில் கொடுத்திருந்த பணம் திரும்பவும் உங்கள் கை வந்து சேருவதில் தாமதம் ஏற்படும் என்பதால் புதிதாக யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். விவசாய உபகரணங்களுக்குச் சற்று கூடுதலாகச் செலவு செய்ய நேரிடலாம். புதிய நிலங்கள் குத்தகைக்கு வந்து சேரும். அறுவடை விஷயங்களில் ஆழ்ந்து திட்டம் தீட்டி, நற்பயன் பெறுவீர்கள். உங்கள் "விலை நிர்ணயம்' துல்லியமாக அமையும். அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பயணங்களைச் செய்து, கட்சிப் பணிகளைத் தீவிரமாக ஆற்றி ஆதாயம் பார்ப்பீர்கள். கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்குப் பணம் செலவு செய்வீர்கள். சக கலைஞர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். பெண்மணிகள் கணவரின் பாராட்டுகளை எளிதில் அடைவீர்கள். புதிதாக ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். சுப காரியங்களில் கலந்து கொள்வீர்கள். உடல் நலத்தில் மட்டும் சற்று கவனமாகவே இருக்கவும். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களை வாங்க வழி வகையுண்டு. பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்களால் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். அவர்களிடம் அனாவசிய சண்டை சச்சரவுகளைத் தவிர்க்கவும். மற்றபடி உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும். தினமும் உடற்பயிற்சிகளைச் செய்தால் மேலும் உடல் வலிமை பெறலாம்.

பரிகாரம்: முடிந்த போதெல்லாம், அல்லது செவ்வாய் கிழமைகளில் மட்டுமாவது துர்க்கையம்மனை வழிபடவும். நவகிரகப் பிரதட்சிணம் செய்யுங்கள்; நன்மைகள் பெருகும். ஸ்ரீ துர்கா ஸகஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ துர்கா ஸூக்தம் சொல்வது நன்மையைத் தரும்.

நந்தன வருஷ பலன்கள் - துலாம்

துலாம்:

உங்களைப் பற்றி:

"துலாத்தான் எங்கும் உண்டு" என்பதற்கேற்ப எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடும் துலா இராசி வாசகர்களே, நீங்கள் தோல்வியைக்கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். எதிலும் முயற்சி செய்து வெற்றி காண வேண்டும் என்று விரும்புபவர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த புது வருஷம்:

இந்த ”நந்தன” ஆண்டில் உங்களின் அஷ்டம ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவானால் திட சிந்தனைகளுடன் உங்கள் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு நல்ல பல வழிகள் உதயமாகும். நிதி நெருக்கடிகள் ஏற்படாது. குடும்பத்திலும் வெளி வட்டாரத்திலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். எப்போதும் போல் சட்டத்தை மதித்து நடப்பீர்கள். இத்தன்மை, சில அன்பர்களுக்கு சாதகமான மேலிடத்துத் தொடர்புகளை உருவாக்கித் தரும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்கள் சார்ந்துள்ள துறையில் புகழின் உச்சியை நோக்கிப் படிப்படியாக முன்னேறுவீர்கள். அதேசமயம் கடினமாக உழைக்க வேண்டிய ஆண்டாக இது அமைகிறது. நண்பர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். உடலில் இருந்த நோய்கள் ஒவ்வொன்றாக மறையத் தொடங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இந்த ஆண்டு உங்களின் குடும்ப ஸ்தான ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவானால் எதையும் சிந்தித்து செயல்படுவீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்முறைகளை மாற்றிக் கொண்டு நன்மைகளைக் காண்பீர்கள். பந்தயங்கள், போட்டிகளிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். ஸ்பெகுலேஷன் போன்ற துறைகளின் மூலம் நல்ல வருமானம் வர, பிரகாசமான வாய்ப்புகள் தென்படுகின்றன. பெற்றோர் வழியில் நிலவி வந்த மனக் கஷ்டங்கள் தீர்ந்து, குடும்பத்தில் குதூகலம் நிறையும். உங்களின் அஷ்டம ராசியில் சஞ்சரிக்கும் கேது பகவானால் நீங்கள் பல தரப்பட்ட மனிதர்களையும் சந்திப்பீர்கள். இதன் மூலம் நீங்களும் பிரபலம் ஆவீர்கள். உங்களை நாடி வந்தவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அதேசமயம் உங்களின் பொருளாதாரத் திட்டங்களில் சிறிது தொய்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சில நேரங்களில் மனம் நொந்து போவீர்கள். இருப்பினும் பொருளாதார வீழ்ச்சி என்பது இல்லை. இந்த ”நந்தன” ஆண்டு விரய ஸ்தான ராசி மற்றும் ஸ்வய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவுகள் செய்ய நேரிடும். உங்களின் நண்பர்கள், உங்களுக்குத் தேவையானவற்றைத் தவிர்த்துத் தேவையற்ற விஷயங்களைப் பேச நேரிடலாம். அதனால் எவரையும் முன்னுதாரணமாகக் கொள்ளாமல், உங்களின் தனித் தன்மையை வெளிப்படுத்திச் செயலாற்றுங்கள். உங்களின் ஜன்ம ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவான், உங்களின் வாழ்க்கையில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவார். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளிநாட்டில் வசிக்கும் உங்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக உரையாடுவீர்கள். அதனால் சிற்சில ஆதாயங்களும் ஏற்படும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். அதேநேரம் சில சமயங்களில் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். இச்சமயங்களில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். எதிர்பாராத பதவி உயர்வால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போவீர்கள். வியாபாரிகளுக்கு முயற்சிகளுக்குத் தகுந்த லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடைகள் ஏற்பட்டாலும் இறுதியில் அனைத்துச் செயல்களிலும் வெற்றியடைவீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர, புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தினாலும் கடன் சுமை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்குக் கொள்முதல் லாபம் குறைவாகவே இருக்கும். செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வதன் மூலம் வருமான இழப்பை ஈடு செய்யவும். மேலும் இக்காலத்தில் நீர் வரத்தும் குறைவாக இருக்கும். அதனால் பாசன வசதிகளுக்காக, சேமிப்பைக் கரைக்க நேரிடும். அரசியல்வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு, உங்களை உற்சாகப்படுத்தும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். அவற்றை நேர்த்தியாகச் செய்து முடிப்பீர்கள். மக்களுக்கு நன்மை செய்வதற்கான உங்களின் முயற்சிகளை எதிர்கட்சியினரும் பாராட்டுவார்கள். புதிய பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் பண வரவு சீராகவே தொடரும். ரசிகர்களின் ஆதரவும் அமோகமாகவே இருக்கும். உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ராசியில் அமர்ந்துள்ள உச்சம் பெற்ற புத்தி ஸ்தானாதிபதியாகிய சனி பகவானால் உங்களின் கற்பனை சக்தி ஊற்றுபோல் பெருகும். இது வருமானமாகவும் மாறி பயன் தரும். உங்கள் செயல்களில் தனித் திறமையை வெளிப்படுத்தும் ஆண்டாக இது அமைகிறது. இதை முழுமையாகப் பயன்படுத்தி வெற்றி காணுங்கள். பெண்மணிகளுக்குக் கணவரின் அன்பும், பாசமும் அளவுக்கதிகமாகவே கிடைக்கும். ஆன்மீகச் சுற்றுலாவும், இன்பச் சுற்றுலாவும் சென்று மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிறையும். பிள்ளைகளாலும் சந்தோஷம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மாணவமணிகள் உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். உழைப்பு குறைந்தால் உயர்வும் குறையக்கூடும். ஆனால் பெற்றோர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். வெளி விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள்.

பரிகாரம்: பார்வதி தேவியை வழிபட்டுச் சிறப்படையுங்கள். முடிந்தவர்கள் தகுதியானவர்களிடம் தீட்சை பெற்று மந்திர ஜபம் செய்து வரவும். மற்றவர்கள், "அபிராமி அந்தாதி'யில் சில பாடல்களையாவது அன்றாடம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். மேலும் ராம நாம ஜெபம் செய்வதும் நன்மையைத் தரும்.

நந்தன வருஷ பலன்கள் - கன்னி

கன்னி:

"கன்னியான் ஏய்க்கப்படுவான்" என்பதற்கேற்ப யாரையும் எளிதில் நம்பி விடும் பழக்கம் உடையவர். அடுத்தவருக்கு செய்யும் உபதேசத்தில் பாதியளவாவது நீங்கள் அதை கடைபிடியுங்கள். நீங்கள் இந்து மதத்தில் பிறந்தவர் என்றால் பொதுவாக உங்களுக்கு முருகன், விஷணு, ஐயப்பன் சம்பந்தப்பட்ட பெயர்கள் அமைந்திருக்கும். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும்.

எப்படி இருக்கப் போகிறது இந்த நந்தன வருடம்:

இந்த "நந்தன” வருடத்தில் குரு பகவான், உங்களின் பாக்கியஸ்தானத்தில் ராசியில் சஞ்சரிக்கிறார். பொதுவாக குரு பகவான் பாக்கிய ராசியில் சஞ்சரிப்பது சிறப்பு என்பதே பொது விதி. அதுவே இதில் கவனிக்க வேண்டிய மிக முக்கிய விஷயம், அந்த குரு பகவான், சுக ஸ்தானம், களத்ர ஸ்தானம் என்கிற கேந்திர ஸ்தானங்களுக்கு அதிபதியாகி கேந்திராதிபத்ய தோஷம் பெற்றாலும் பாக்கியத்தையும் தருகிறார். இதனால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். இது "ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு' என்கிற விதியின்படி அமைகிறது. இன்பமாய் அனுபவியுங்கள்! இந்தக் காலகட்டத்தில் யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றில் ஈடுபட்டு மனதை உற்சாகமாக வைத்துக் கொள்வது நலம் பயக்கும். சில அன்பர்களுக்கு வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பிறரின் முகபாவனைகளைக் கண்டே அவர்களின் மனதை அறிந்துகொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். ஆன்மீகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அதேநேரம் இக்கட்டான சூழ்நிலைகளில் உணர்ச்சி வசப்படாமல் பொறுமை காக்கவும். வேகத்துடன் விவேகத்தையும் கூட்டிக்கொண்டால் உங்கள் செயல்கள் அனைத்தும் திட்டமிட்டபடி குறிக்கோள்களை எட்டும். அதற்காகத்தான் "யோகா' பயிலுமாறு குறிப்பிட்டுள்ளோம்.

தைரிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானால் ஏமாற்றங்களிலிருந்து தப்பிப்பீர்கள். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு வருங்காலத்தை வளமாக்கிக்கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் திடீரென்று பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை தானாகவே தீரும். தீயவர்கள் உங்களை விட்டு தாமாகவே விலகி விடும் அதிசயம் நிகழும். அதேநேரம் இளைய சகோதரர்களுடனான உறவில் சில சலசலப்புகள் ஏற்படும். ஆனாலும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு அவற்றை சமாளிப்பீர்கள். சிலர் தற்போது வசிக்கும் வீட்டிலிருந்து பெரிய வீட்டிற்குக் குடிபெயர்வார்கள்.

இந்த ஆண்டு பாக்ய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானால் தொழிலில் அதிக முதலீடுகளைச் செய்வீர்கள். இதனால் வருமானம் குவியும். உங்கள் புகழும், கௌரவமும் உயரும். இது நாள் வரை தேவையற்ற வீண் பழி சுமந்த சில வாசகர்கள், அவற்றிலிருந்து விடுபடுவார்கள். உங்களின் முயற்சிகள் பல மடங்காக உயர்ந்து, அதற்கேற்ற வெற்றி கிடைக்கும். தனஸ்தானத்தில் இருக்கும் சனி பகவானால் உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். திட்டமிட்ட செயல்கள் துரிதமாக நடக்கும். குடும்பத்தில் அரங்கேறும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். உங்கள் பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலை தூக்க நேரலாம். கவனத்துடன் அதைத் தவிர்த்துக் கொள்ளவும். "நந்தன” ஆண்டு இறுதி வரை குரு பகவானின் பார்வையைப் பெற்று ஏழரை நாட்டு சனியின் கடைசி காலகட்டம் நடக்கத் தொடங்கும். இக்காலகட்டத்தில் சஞ்சரிக்கும் உச்சம் பெற்ற சனி பகவானால் உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும்; தன்னம்பிக்கை உயரும். உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள். புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும். வருமானம் நல்ல முறையில் வந்தாலும், சிலருக்கு குறுக்கு வழியில் செல்ல மனம் நினைக்கும். எனவே மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டு நேர் வழியில் செல்லவும். இதன்மூலம் பல பிரச்சினைகளிலிருந்து தப்பிக்கலாம். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்கும். இதனால் மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். உங்கள் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். மேலும் அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் வேலைகளைச் சரியாகத் திட்டமிட்டு செய்வீர்கள். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவராக உயர்வீர்கள். வியாபாரிகள் பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். அதேசமயம் கூட்டாளிகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் நன்றாகச் சிந்தித்த பிறகே ஈடுபடவும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். இதனால் கொள்முதல் பொருட்களை விற்று நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நெருங்கியவர்களுக்கு அரிய உதவிகளைச் செய்து கௌரவம் அடைவீர்கள். உங்கள் சிந்தனையில் தெளிவு பிறக்கும். செயலில் வேகம் அதிகரிக்கும். புதிய நிலங்களை வாங்குவதற்குக் கடன் கிடைக்கும். உங்கள் கழனியில் வேலை செய்யத் திறமையான ஆட்கள் கிடைப்பார்கள். அரசியல்வாதிகளின் பெயரும், புகழும் வளரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்வீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆயினும் எவரையும் பகைத்துக்கொள்ளாமல் உங்களின் வேலைகளில் மட்டுமே கவனமாக இருக்கவும். கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். சில நிறுவனங்களால் முந்தைய காலகட்டத்தில் நேரிட்ட மன வருத்தங்களை ஒதுக்கி வைத்துவிட்டு உழைப்பது, முன்னேற்றத்திற்கு உதவும். ரசிகர்களை அரவணைத்துச் செல்வீர்கள். பெண்மணிகளுக்குக் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள் உங்களை அணுகிப் பயன் பெறுவார்கள். சேமிப்பில் நல்ல கவனம் செலுத்துவீர்கள். ஆலயங்களுக்குச் சென்று ஆன்மீக பலம் பெறுவீர்கள். மற்றபடி அனைவரிடமும் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு குழப்பங்களைத் தவிர்க்கவும். மாணவமணிகளுக்கு நினைவாற்றல் பெருகும். இதனால் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். உபரி நேரங்களில் மனதிற்குப் பிடித்த கேளிக்கைகளிலும், விளையாட்டுகளிலும் ஈடுபட்டு மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள். அதேநேரம் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.

பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வரவும். முடிந்தால் வியாழக்கிழமைகளில் 27 கருப்புக் கொண்டைக் கடலைகள் கட்டிய மாலைகள் இரண்டை குரு பகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் அணிவித்துப் பலன் பெறுங்கள்.

நந்தன வருஷ பலன்கள் - சிம்மம்

சிம்மம்:

"ஸிம்ஹத்தானோடு சிணுங்கேல்" என்பதற்கேற்ப உங்களிடம் யாராவது வம்பிழுத்தால் அவ்வளவுதான், உடனே சிங்கம் பிடரியை சிலுப்பி எழும்புவது போல எழுந்து விடுவீர்கள். முன் வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். நீங்கள் யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த நந்தன வருஷம்:

இந்த "நந்தன” ஆண்டு குரு பகவான் உங்களின் பாக்ய ஸ்தான ராசியிலும் தொழிற்ஸ்தானத்திலும் சஞ்சரிப்பது சிறப்பு. இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும், பேரப் பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும். உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடி வரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். செய்தொழிலை விரிவுபடுத்த பெரிய அளவில் கடன் வாங்குவீர்கள். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும். மன அழுத்தம் குறைந்து தெளிவாகச் சிந்திக்கும் காலமிது என்பதால் உங்களுடைய உள்ளம் தெளிவான வழிகளிலேயே இட்டுச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். வம்பு, வழக்குகளிலிருந்தும் விடுபட்டு புதிய மனிதனாக ஆவீர்கள். ஆன்மீகத்தில் புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தர்ம காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள். பொருளாதார வளம் சிறப்பாக இருப்பதால் புதிய வீடு, வாகனம், ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். உங்கள் சுக ஸ்தானத்தில் அமர்ந்த ராகு பகவான், உங்கள் தாய் வழியில் சில அனுகூலங்களை உண்டாக்குவார். நண்பர்களிடம் மன உறுதியுடன் தெளிவாகப் பேசுவீர்கள். உங்களைப் பற்றிப் புறம் பேசும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து நாசூக்காக விலகி விடுவீர்கள். கையிருப்புப் பொருட்களையும், பணத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். மேலும் குறுக்கு வழியில் எந்தச் செயலையும் செய்ய நினைக்க வேண்டாம். இந்த ஆண்டு தொழில் ஸ்தான ராசியில் கேது பகவான் சஞ்சரிப்பதால் உறுதியான எண்ணத்துடன் பணியாற்றுவீர்கள். நீங்கள் சார்ந்திருக்கும் துறையில் நன்றாகவே முன்னேறுவீர்கள். சிலருக்கு நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் சூழ்ச்சிகளில் சிக்கும் சூழல் ஏற்படலாம். ஆனாலும் முருகக் கடவுளின் அருளால் காப்பாற்றப்பட்டு விடுவீர்கள். அரசாங்கம் வாயிலாக சிறு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அவை விரைவில் மறைந்துவிடும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். இந்த "நந்தன” ஆண்டு உங்களின் தைரிய இளைய சகோதர ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார் சனி பகவான். இக்காலகட்டம், உங்களை கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வைப்பார் சனி பகவான். நெடு நாளைய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். நிலையான புகழும், பெருமையும் அடைவீர்கள். இதனால் நீங்கள் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். உங்கள் மன வலிமை அதிகரிக்கும். உங்கள் செயல்களில் சுறுசுறுப்பு கூடும். உங்களை நீங்களே அறிந்து கொண்டு சமுதாயத்திற்குப் பயன்படுவீர்கள். தெய்வ வழிபாட்டிற்குத் தக்க பலன் கிடைக்கும். உங்களின் காரியங்களைப் பொறுமையாகவும், அமைதியாகவும் செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்தைப் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கத் தொடங்கும். உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் தடை ஏற்படாது. சக ஊழியர்கள் உங்களிடம் பொறாமை கொள்ளலாம். எடுத்த காரியங்களில், சில சந்தர்பங்களில் கால தாமதம் ஏற்படலாம்; உடலில் சோர்வும், மனதில் தெளிவின்மையும்கூட உண்டாகலாம். ஆனால் இவற்றை மீறி கர்ம ஸ்தானத்தில் உள்ள கேது பகவான், உங்களுக்கு கெளரவமான பதவிகளை வழங்குவார். இதனால் உங்களுக்கு உறுதுணையாக இருந்து வந்த மேலதிகாரிகளின் ஆதரவு சற்று குறையக் கூடும். ஆனால் என்ன? உங்களின் கடமைகளை பதற்றப்படாமலும், நிதானத்துடனும் செய்தால் எந்தச் சரிவுக்கும் ஆளாகாமல் தப்பிக்கலாம். வியாபாரிகள் நல்ல பொருளாதார வளத்தைக் காண்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் மறையும். கூட்டாளிகளிடம் ஒற்றுமை உண்டாகும். வங்கிக் கடன்கள் சிக்கலின்றி கிடைக்கும். உங்கள் முயற்சியில் சுறுசுறுப்பு உண்டாகும். வாணிப வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். புதிய முதலீடுகளில் ஈடுபட்டு லாபத்தைக் காண்பீர்கள்.

விவசாயிகள் விளை பொருட்களால் லாபத்தை அள்ளுவீர்கள். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். அதேசமயம் வயல் வரப்புச் சண்டைகளில் ஈடுபட வேண்டாம். தன்னலம் பாராட்டாமல் அடுத்தவர்கள் வளம் பெற செயலாற்றுங்கள். அதனால் வளமடையப் போவதென்னவோ நீங்கள்தான்! இந்த ஆண்டு சக விவசாயிகள் மத்தியில் "முக்கியஸ்தர்' என்ற செல்வாக்குடன் வலம் வர வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

அரசியல்வாதிகளின் பதவிகளுக்கு நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். பண வரவும் நன்றாகவே இருக்கும்.

கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். உழைப்பை அதிகப்படுத்திக்கொண்டு, கர்வத்தை விட்டொழித்துத் திறந்த மனதுடன் இயங்கினால் புகழ் பெறலாம். மற்றபடி சக கலைஞர்களுடன் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் சில முடிவுக்கு வரும்.

பெண்மணிகள் குழந்தைகளால் சந்தோஷம் அடைவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாகவே இருக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தை குடும்பத்தினர் புகழ்வார்கள். புத்தாடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். விருந்து மற்றும் விழாக்களில் கலந்துகொண்டு உற்காசம் அடைவீர்கள். உடல் ஆரோக்யம் சீராக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள்.

மாணவமணிகள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவும் தொடர்ந்து நல்லவிதமாக இருக்கும். வெளி விளையாட்டுகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள்.

பரிகாரம் : முருகப் பெருமானை வழிபட்டு வரவும். கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது நலம் தரும். இயன்றவர்கள், "அறுபடை வீடுகள்' அனைத்தையுமே தரிசிக்கலாம். இல்லையேல் இயன்ற அளவு ஓரிரு தலங்களுக்காவது சென்று வரவும். அதுவும் முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்தில் முருகப் பெருமானை தரிசித்து உய்வு பெறலாம்.

நந்தன வருஷ பலன்கள் - கடகம்

கடகம்:

"Cancer is Sensitive" என்பதற்கேற்ப எதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடும் கடக இராசி வாசகர்களே! எளிதில் உணர்ச்சிவசப்படுபவ்ர் நீங்கள். உங்கள் கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். எந்த வேலையையும் முதல் முறையிலேயே முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீங்கள். கொஞ்சம் சந்தேகப்புத்தி(Detective Mind) உடையவர்கள் நீங்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த நந்தன ஆண்டு:

இந்த "நந்தன” ஆண்டு, உங்களின் தொழில் ஸ்தான ராசியிலும் லாபஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார் குரு பகவான். இவர் செல்வச் செழிப்போடு செல்வாக்கையும் உங்களுக்கு அள்ளித் தருவார். அனைத்துக் காரியங்களிலும் சராசரிக்கும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டுச் சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகளைப் பெறுவதற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். சொத்து விவகாரங்களில் நிலவிய வில்லங்கம் விலகும். சமுதாயத்தில் உயர்ந்த பதவிகளையும் பெறுவீர்கள்.
லாப ஸ்தானத்தில் குருவுடன் சேர்ந்து சஞ்சரிக்கும் கேது பகவான், உங்களை மூத்த சகோதர, சகோதரிகளுடன் இணைந்து செயல்பட வைப்பார். சிறிய முதலீட்டிலும் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் தொழில்களைத் தொடங்குவீர்கள். தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்கு ஆன்மீகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு, பலருக்குக் கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படாது. இந்த "நந்தன” ஆண்டு உங்களின் பூர்வபுண்ய ராசியில் ராகு பகவான் சஞ்சரிப்பதால், உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திறமைகள் பளிச்சிடும். குழந்தைகளை கண்டிப்புடன் வளர்ப்பீர்கள். அதேநேரம் அவர்களின் மகிழ்ச்சிக்காக சுற்றுலாவும் சென்று வருவீர்கள்.
பதற்றப்படாமல் உங்கள் செயல்களை செய்து முடிப்பீர்கள். ஒரு விஷயத்தில் கவனம் தேவை! உங்களின் நெருங்கிய நண்பர்களே உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம். இதனால் மனதில் குழப்பங்கள் சூழும். இதை முன்னெச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களின் சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் உங்களின் கருத்துக்களை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் அவற்றை எச்சரிக்கை உணர்வுடன் வெளிப்படுத்துங்கள். மற்றபடி கடினமான வேலைகளையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள். வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் ஏற்படாது. செய்தொழிலில் ஏற்படும் போட்டிகளை சாதுர்யத்துடன் எதிர் கொள்வீர்கள். தெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். என்றாலும் அதற்கேற்ற செலவுகளும் உண்டாகும். அதனால் அனாவசிய செலவுகளைத் தவிர்த்து, முக்கியமான செலவுகளை மட்டுமே செய்யவும். குரு பகவானின் கனிந்த பார்வையால் உங்களின் நடை, உடை, பாவனைகளில் அழகை உண்டாக்குவார். சிலருக்கு நூதன வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பாராத பயணங்களால் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

உத்யோகஸ்தர்கள் கடுமையாக உழைத்தாலும் அதில் மேலதிகாரிகள் குற்றம் காண வாய்ப்புண்டு. அதேசமயம் சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்பார்கள். இதனால் சமாளித்துவிடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூரில் சில காலம் தங்கிப் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும். அலுவலகத்திலிருந்து கடன் கிடைத்து வாகனம் வாங்கும் யோகமும் பலருக்கு அமையும்.

வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எந்தக் குறையும் ஏற்படாது. ஆனாலும் எதிலும் கவனமாக இருக்கவும். புதிய முதலீடுகளைக் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே செய்யவும். தேவைக்கேற்ற சரக்குகளை மட்டுமே வாங்கி விற்கவும். அதேசமயம் சந்தைகளில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயித்து லாபமடைய நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். வங்கிக் கடன்களும் கிடைக்கும். அதேநேரம் கால்நடைகளுக்கு சற்று கூடுதலாக செலவு செய்ய நேரிடும். மற்றபடி புழு, பூச்சிகளால் பயிர்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படாது. நீராதாரங்களையும் பெருக்கிக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள். கட்சி மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழுந்து, உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். அரசு அதிகாரிகளும் உங்கள் நேர்மையான ஆலோசனைகளை மதித்து நடப்பார்கள். அவர்களால் உங்களின் செல்வாக்கு தொண்டர்களிடம் உயர்ந்து காணப்படும். உங்களின் மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அதேசமயம் கட்சியில் முக்கியப் பிரமுகர் யாரிடமாவது மனக்கசப்பு ஏற்படலாம். அதனால் பிறருடன் பேசும்போது ஒரு முறைக்கு இரு முறை யோசித்துப் பேசவும்.

கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். சக கலைஞர்கள் நட்புடன் பழகுவார்கள். அவர்களால் உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ரசிகர் மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். அதேநேரம் சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் உங்கள் காரியங்களைச் செய்யவும்.

பெண்மணிகள் இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தேவையற்ற கவலைகள் சிலருக்குத் தோன்றலாம். மனதைக் கட்டுப்படுத்த யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை செய்தால், கவலைகள் தேவையற்றவை என்பது தன்னால் புரியும்.
மாணவமணிகள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படிக்கவும். உங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துத் தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். நீங்கள் நீங்களாகவே இருக்கப் பழகி உங்களின் முன்னேற்றத்திற்கு அடி கோலுங்கள். "உங்களை நீங்கள்தான் உயர்த்திக் கொள்ள வேண்டும்'' என்கிற கீதை வாக்கியத்தை மறவாமல் நடைபோடுங்கள்.

பரிகாரம் : தினசரி 108 முறையாவது "ராம' நாமத்தை ஜபிக்கவும். தமிழிலோ, வட மொழியிலோ "சுந்தர காண்டம்' பாராயணம் செய்வது அதிக நன்மை தரும்.

நந்தன வருஷ பலன்கள் - மிதுனம்

மிதுனம்:

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் மிதுன இராசி வாசகர்களே!நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர்.

எப்படி இருக்கப் போகிறது இந்த நந்தன வருஷம்:


இந்த "நந்தன” ஆண்டு, உங்களின் லாப ஸ்தான ராசியில் சஞ்சரித்து அயன சயன மோட்ச ஸ்தானத்திற்கு வரும் குரு பகவான். இதனால் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொது நலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். ஸ்தர ராசியில் வலுப்பெற்று சஞ்சரிக்கும் குரு பகவானால் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். "பங்குச் சந்தை' முதலீடு போன்ற இனங்கள் மூலம் திடீர் பண வரவு உண்டாகும். இந்த ஆண்டு அயன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான், உங்களின் ஆன்மீக நாட்டத்தை அதிகப்படுத்துவார். குல தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும். இவை ஒருபுறமிருக்க, இந்த ராசி நேயர்கள் பலருக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும். இதனால் உடலில் அவ்வப்போது சோர்வு உண்டாகும். ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரிப்பதால் தனித்து நின்று போட்டிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான காரியங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். உங்கள் நடையில் ஒரு மிடுக்கு உண்டாகும். அவ்வப்போது சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். வசிக்கும் வீட்டை பழுது பார்ப்பதற்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை சாதுர்யமாகச் சமாளிக்க சனி பகவான் உதவுவார். சிலர் புதிய இல்லங்களுக்கு மாறுவார்கள். உங்களின் பூர்வபுண்ய புத்திர ஸ்தானத்தில் உச்சம் பெற்று, சஞ்சரிக்கிறார் சனி பகவான். இதனால் உங்களுக்கு பேராற்றல் உண்டாகும். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். "சாமர்த்தியசாலி' என்று பெயர் எடுப்பீர்கள். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக நடந்து கொள்வார்கள். நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். இதனால் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள். உத்யோகஸ்தர்கள் இந்த ஆண்டு கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். இல்லையேல் கிடுக்கிப்பிடிதான்! எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும். இதற்குப் பயனும் உண்டு. உங்கள் உடல் உழைப்பிற்கு மேல் இரு மடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். லாப ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்; பயணங்களும் பலன் தரும்.
வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம்.
விவசாயிகளின் திறமைகள் வீண் போகாது; அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். புழு, பூச்சிகளின் பாதிப்பிலிருந்து பயிர்களைக் காப்பாற்ற செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளுக்கும் சிறு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தர மாட்டார்கள். உப தொழில்களிலும் கவனம் செலுத்துவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும். கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது. பெண்மணிகளுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களின் அறிவுரைப்படி நடந்துகொண்டு மேலும் சிறப்படையுங்கள்.

பரிகாரம்: சங்கட சதுர்த்தி தினங்களில் விநாயகரை வழிபடவும். முடிந்தபோதெல்லாம் ஔவையார் அருளிய "விநாயகர் அகவல்' துதியை பாராயணம் செய்யவும். இதனால் பல சங்கடங்கள் தவிடுபொடியாகும். இயன்றவர்கள், குடந்தைக்கு அருகிலுள்ள "திருவலஞ்சுழி' தலத்துக்குச் சென்று ஸ்வேத விநாயகரையும், சிவபெருமானையும் தரிசித்துவிட்டு வரவும். அதனால் கிடைக்கும் புண்ணிய பலன்களை எண்ணி மாளாது!

நந்தன வருஷ பலன்கள் - ரிஷபம்

ரிஷபம்:

"எருதொடு மாறேல்" என்ற கூற்றுப்படி - எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் ரிஷப இராசி நேயர்களே! பணப்புழக்கம் தங்களிடம் தட்டுப்பாடின்றி இருக்கும். உங்களது உழைப்பால் மற்றவர்களை வாழவைப்பீர்கள். யார் உங்களிடம் வாக்கு கொடுத்தாலும் அதன்படி அவர்கள் நடந்துகொள்ளாவிட்டால் உங்களுக்கு கோபம் வரும். ஏனென்றால் நீங்கள் தன்மானம் நிறைந்தவர்கள். எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர் மனம் புண்படாதபடி பேசுவதில் வல்லவர் நீங்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த நந்தன ஆண்டு:


இந்த "நந்தன” ஆண்டில் உங்களின் அயன, மோட்ச, விரய ஸ்தானத்தில் இருந்து சுய ஸ்தானத்திற்கு குரு பகவான் சஞ்சரிக்கிறார். இதனால் சற்று மந்தமான நிலை உண்டாகலாம். மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர் கொள்ளலாம். இந்த ராசி வாசகர்களில் சிலருக்கு தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் உங்களின் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமலும் போகும். அதேநேரம் வேறு பல "சாதகமான' நிலைமைகளும் கண் சிமிட்டுகின்றன. குரு பகவான், உங்களின் வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்புகளை வலுப்படுத்துவார். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்வீர்கள். உங்களின் ஆலோசனைகள் உங்கள் நண்பர்களுக்குப் பயன்படும். நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் நோய் போன்றவை உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடிருக்கவும். மது உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் உள்ளவர்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய வருடம் இது. இந்த ஆண்டு உங்களின் ஜன்ம ராசியில் சஞ்சரிக்கும் கேது பகவான் அயன மோட்ச விரைய ஸ்தானத்திற்கு இடம்பெயர்ந்து, உங்கள் மனதில் அவ்வப்போது தைரியமின்மையைத் தோற்றுவிப்பார். இதனால் அனைத்துச் செயல்களிலும் சந்தேகத்தோடு ஈடுபடுவீர்கள். மற்றபடி பெரும்பாலான ரிஷப ராசி நேயர்களுக்கு உடல் பொலிவடையும். உங்களை ஏமாற்ற நினைக்கும் நண்பர்களின் சூழ்ச்சிகளைப் புரிந்துகொள்வீர்கள். உங்களின் சப்தம ராசியில் சஞ்சரிக்கும் ராகு பகவான் உங்களுக்கு மனப் பக்குவத்தையும் தருவார். எனவே அதிகம் கவலைப்படத் தேவையில்லை. புதிய முயற்சிகளில் இறங்கி அனுபவம் பெறுவீர்கள். சிரமம் பார்க்காமல் சாகசங்களில் ஈடுபடுவீர்கள். இந்த ஆண்டு சனி பகவான் உங்களின் ரணருண ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். சிலர், குழந்தைகளை வெளி நாடுகளுக்கு அனுப்பிப் படிக்க வைப்பார்கள். உங்களின் முக்கியத் திட்டங்கள் நிறைவேறும் ஆண்டாக இது அமைகிறது. இதனால் உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி முன்னேற்றகரமான திருப்பங்கள் உண்டாகும். கடன்களைத் திருப்பி அடைத்து புதிய சேமிப்புகளிலும் ஈடுபடுவீர்கள். உடல் உபாதைகள் மறைந்து ஆரோக்யம் காண்பீர்கள். நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும்.
உத்யோகஸ்தர்களின் கோரிக்கைகளை மேலதிகாரிகள் உடனுக்குடன் பரிசீலிப்பார்கள். அலுவலகத்தில் அனுகூலமான சூழலைக் காண்பீர்கள். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். இடையூறுகளை ஒரு பொருட்டாகவே கருதமாட்டீர்கள். பண வரவில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் உழைப்புக்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் எந்தக் குறையும் ஏற்படாது. விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைத் திறன் பளிச்சிடும். வியாபாரிகளின் திட்டங்கள் அனைத்தும் நல்ல லாபத்தைக் கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் சிறப்புகள் உண்டாகும். விற்பனைப் பிரதிநிதிகளைப் பல சந்தைகளுக்கும் அனுப்பி உங்கள் விற்பனைக் களத்தைப் பரவலாக்குவீர்கள். ஆயினும் கூட்டாளிகளைக் கலந்தாலோசித்த பிறகே விரிவாக்கம் செய்யவும். மற்றபடி திறமையுடன் நீங்கள் செய்து வரும் வியாபாரத்தால் உங்கள் கௌரவமும், அந்தஸ்தும் உயரும். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் கொள்முதல் விற்பனை சீராக இருக்காது. இடைத்தரகர்கள் உங்களின் லாபத்தில் பங்கு போடக் காத்திருப்பார்கள். சிலர் போட்டிகளையும், வயல் வரப்புச் சண்டைகளையும் சந்திக்க நேரிடும். மற்றபடி சிலருக்குப் பழைய கடன்கள் வசூலாகும். குத்தகை பாக்கிகளைத் திருப்பிச் செலுத்த வாய்ப்புகள் உருவாகும். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச் செய்வீர்கள். எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்கள் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் சம்பந்தப்பட்டு மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் கடினமாக உழைத்தால்தான் துறையில் வெற்றி வாகை சூடலாம். மற்றபடி உங்கள் வேலைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். உங்கள் திறமைகளை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதேசமயம் உங்களின் வெளிவட்டாரப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனத்துடன் இருக்கவும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். பெண்மணிகள் நன்கு யோசித்த பிறகே பிறரின் வார்த்தைகளை நம்புவீர்கள். கணவரிடமும் குடும்பத்தாரிடமும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். உங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றவும். மாணவமணிகள் கடினமாக உழைத்துப் படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர் சென்று கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். மனக்குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். தீய நண்பர்களுடனான நட்பைத் துண்டிப்பீர்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு சாதனை செய்வீர்கள்.

பரிகாரம்: இந்த "நந்தன” வருடம், இன்ப துன்பங்களின் கலவையாகவே இருக்கப் போவதை எண்ணி எள்ளளவும் கவலைப்படத் தேவையில்லை. ஒரேயொரு பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்து வந்தால், துன்பங்கள் அனைத்தும், ஆலகால விஷமுண்டு ஞாலம் காத்த சிவபெருமானருளால் விலகும். அது, திருஞான சம்பந்தர் அருளிய "கோளறு திருப்பதிகத்தை' அன்றாடம் பாராயணம் செய்வதுதான்! இந்தத் துதியின் பெருமைகளை நீங்களே அனுபவத்தில் உணர்வீர்கள்.

நந்தன வருஷ பலன்கள் - மேஷம்

மேஷம்:

நண்பர்களையும் உறவினர்களையும் அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான முட்பாதைகளையும் மலர் பாதைகளாக மாற்றும் சக்தி கொண்டவர்களே, உங்களைப் பற்றி மதீப்பீடு செய்வது மிகவும் கடினம். மிகவும் மன உறுதி உடையவர். எடுத்த வேலையை சரியாக முடிக்கும், எடுத்த முடிவில் மாறாமல் இருக்கும், யாரையும் சாராமல் தனதுழைப்பால் முன்னேறும் மேஷ இராசி வாசகர்களே,

எப்படி இருக்கப் போகிறது இந்த நந்தன வருஷம்:

இந்த "நந்தன' வருடத்தில் உங்கள் ஜன்ம ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு சஞ்சரிக்கும் குரு பகவான், உங்களின் தேகத்தை பொலிவடையச் செய்வார். மனதில் தெளிவு பிறக்கும். அலைச்சல்கள் குறையும். தாமதமாக நடந்துகொண்டிருந்த செயல்கள் துரிதமாக நடக்கத் தொடங்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்துகொள்வீர்கள். பிள்ளைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்சினைகள் விலகும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும். அதனால் விட்டுக் கொடுத்துச் சென்று வழக்குகளை முடித்துக் கொள்ளவும். இந்த ஆண்டு முழுவதும் கேது பகவான் உங்களின் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திலும் பின் சுய ஸ்தானத்திலும் சஞ்சரிப்பதால், நீங்கள் பிடிவாதங்களைத் தளர்த்திக் கொண்டு அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்வீர்கள். தற்பெருமை பேசுபவர்கள்கூட உங்களின் பெருந்தன்மையை உணர்ந்து, பணிந்து போவார்கள். உங்கள் பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்திருக்கும். நியாயவாதி என்று பெயரெடுப்பீர்கள். இந்தக் காலகட்டத்தில் அஷ்டம ஸ்தானத்திலும் களத்திர ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் ராகு பகவான், புதியவர்களின் நட்பை ஏற்படுத்திக் கொடுப்பார். வெளியில் கொடுத்திருந்த கடன்கள் திரும்பவும் உங்கள் கை வந்து சேரும். சில தடைகள் ஏற்பட்டாலும் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி வாகை சூடும். இந்த ஆண்டு சனி பகவான் உங்களின் களத்திரஸ்தானத்தில் பலமாக சஞ்சரிப்பதால் உங்களின் கவலைகள் படிப்படியாகக் குறையும். புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். ஒரு சிலருக்கு வழக்கொன்றில் வழங்கப்படும் சாதகமான தீர்ப்பினால் வருமானம் பெருகும். தடைபட்டிருந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும். உங்களின் களத்ர ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள். உடல் ஆரோக்யம் சிறப்படையும். அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு இந்த "நந்தன' ஆண்டில் பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் மரியாதை உயரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அதேநேரம் எவரைப் பற்றியும் புறம் பேசாமல், சக ஊழியர்களின் நட்பைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகவும், கோபப்படாமலும் நடந்துகொண்டால் நல்ல லாபங்களை அள்ளலாம். மற்றபடி கடுமையான போட்டிகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டாளிகள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். அதேசமயம் புதிய முதலீடுகளில் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு பயிர் உற்பத்தி நன்றாக இருக்கும். பழைய குத்தகை பாக்கிகள் வசூலாகும். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு செலவு செய்வீர்கள். பாசன வசதிகளில் கவனம் செலுத்துவீர்கள். கால்நடைகளுக்கு சிறிது செலவு செய்ய வேண்டியிருக்கும். சக விவசாயிகளிடம் வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதே சமயம் நண்பர்கள் போல் பழகும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பொதுவாகவே பிறரிடம் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிப் பரப்பும் அவதூறுகள் குறித்துக் கவலைப்பட வேண்டாம். மற்றபடி உங்களின் பணியாற்றும் திறன் கண்டு கட்சி மேலிடம் உங்களுக்குப் புதிய பதவிகளை அளிக்கும். இதனால் பொறுப்புகள் கூடும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். ரசிகர்களின் ஆதரவோடு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும். பெண்மணிகளுக்குக் கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். பண வரவு சீராக இருக்கும். உடல் ஆரோக்யம் சிறப்பாக அமையும். ஆன்மீகச் சுற்றுலா சென்று வரும் ஆண்டாக இது அமையும். எங்கும், எப்போதும் பேசும் நேரத்தில் நிதானம் தேவை. மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்து மனதை ஒருநிலைப்படுத்துவீர்கள்.

பரிகாரம் : திருவேங்கடமுடையானையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.  இதனால் நன்மைகள் அதிகரிக்கும். இயன்றவர்கள், "திருச்செந்தூர்” சென்று முருகனை ஒரு முறை தரிசித்துவிட்டு வரவும்.