Sunday, March 30, 2014

ஜய வருடம் யாருக்கு எப்படி? - பாகம் ஒன்று

ஜய வருடம் யாருக்கு எப்படி?

ஜய என்றால் வடமொழியில் வெற்றி என்று பொருள். வெற்றிகளை அள்ளித் தரும் ஜய வருடம் தமிழ் வருடமான 60 வருடங்களில் 28-வது ஆண்டாக வருவது ஆகும். கலி பிறந்து 5115-வது வருடமாகும். சாலிவாகன ஆண்டு 1935-36-வது ஆண்டாகும்.  ஆங்கில வருடம் 2014-2015. பசலி 1423-1424 ஆகவும், கேரளாவில் அனுஷ்டிக்கப்படும் கொல்லம் ஆண்டு 1189-1190 ஆகவும் முகமதியர் ஆண்டான ஹிஜிரி ஆண்டு 1434-35 ஆகவும் வருகிறது. இதேபோன்று விக்ரம காப்தம் (வட இந்தியாவில் கணக்கிடப்படுவது) 2071-72  ஆகவும் வள்ளுவர் ஆண்டு 2045-2046 ஆகவும் வருகிறது.



நிகழும் மங்களகரமான 1189ம் ஆண்டு ஜய வருஷம் உத்தராயணம் சித்திரை மாதம் 1ம் தேதி 14.04.2014 திங்கட்கிழமையும் சுக்லபக்ஷம் சதுர்தசியும் ஹஸ்தம் நக்ஷத்ரமும் வியாகாத நாமயோகமும் வணஜீ நாமகரணமும் சித்தயோகமும் கூடிய சுபதினத்தில் உதயாதி காலை மணி 6.05க்கு  இராஜஸ மேஷ லக்னத்தில் கன்னியா ராசியில் சந்திரன் ஹோரையில் ஸ்ரீஜய வருஷம் பிறக்கிறது.



நவநாயகர்:
ஜய வருடத்திற்கு ராஜா- சந்திரன், மந்திரி- சந்திரன், சேனாதிபதி - சூரியன், அர்க்காதிபதி- சூரியன், ஸஸ்யாதிபதி-குரு, தான்யாதிபதி- செவ்வாய், ரஸாதிபதி-சனி, நீரஸாதிபதி-புதன், மேகாதிபதி- சூரியன் இந்த ஆண்டு தேவதை- சாத்தான், பசுநாயகர்-கோபாலன்.


கலிவெண்பா
ஜய வருடதன்னிலே செய் புவனங்கள் எல்லாம்
வியனுரவே பைங்கூழ் விளையும் - நயமுடனே
அக்கம் பெரிதா மளவில் சுகம் பெருகும்
வெக்குவார் மன்னரிறை மேல்.

என்பது இடைக்காடர் எழுதிய ஜய வருஷத்திய பலன் வெண்பா. இதன் பலன் உலகத்தில் எல்லா இடங்களிலும் சூறாவளி காற்றுடன் மற்றும் இடி மின்னலுடன் நல்ல மழையும், கடலில் குறைந்த அளவு மழையும் பொழியும். நஞ்சை புஞ்சைகளில் தானியங்கள் நன்கு விளைந்து அறுவடை சிறக்கும். கோச்சார ரீதியாக ஜெகத் உலக ஜாதகத்தில் ஏழரை சனி நடப்பதால் உலகில் பல இடங்களில் பிரளயம் ஏற்படும். நாடுகளுக்குள்  போர் அபாயம் ஏற்படும்.

ஆதாயம், விரயம்

இந்த  ஆண்டின் ஆதாயம் விரயம் எவ்வளவு என்று பார்த்தால் மேஷ விருச்சிக ராசியினருக்கு 05 ஆதாயம், 11 விரயமாகும்.  ரிஷபம், துலா ராசியினருக்கு 14 ஆதாயம் 02 விரயமாகும். மிதுனம், கன்னிராசியினருக்கு 02 ஆதாயம் 02 விரயமாகும். கடகராசியினருக்கு 02 ஆதாயம் 08 விரயமாகவும் தனுசு, மீன ராசியினருக்கு 08 ஆதாயம் 02 விரயமாகவும், மகரம், கும்ப ராசியினருக்கு 11 ஆதாயம் 04 விரயமாகவும் உள்ளது.

ஆதாயம் என்பது வரவு விரயம் என்பது செலவு என்று பொருள். மொத்தத்தில் 56 ஆதாயமும் 37 விரயமாகவும் வருவதால் நாட்டில் சேமிப்பு அதிகரிக்கும் என்று கூறலாம்.

நக்ஷத்ர கந்தாய பலன்கள்:
கந்தாய பலன்களின் அடிப்படையில் அஸ்வினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், ஸ்வாதி, விசாகம், மூலம், திருவோணம், சதயம், பூரட்டாதி, ரேவதிக்கு வருடம் முழுவதும் உத்தம பலன்களாகும். பரணி, பூரம், சித்திரை, அனுசம், பூராடம், உத்திரட்டாதிக்கு இரண்டாம் நான்கு மாதங்கள் (ஆவணி – கார்த்திகை வரை) மத்திம பலன்கள் ஆகும். ஏனைய மாதங்கள் உத்தம பலன்கள் ஆகும். உத்திராடத்திற்கு சித்திரை முதல் ஆடி வரை மத்திம பலன் ஏற்பட்டு பின் உத்தமமாகும். மிருகசீரிஷம், பூசம், ஹஸ்தம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களுக்கு வருடம் முழுவது சற்றேறக்குறைய மத்திம பலன்களே கிட்டும். இருப்பினும் அவிட்டம் முதல் நான்கு மாதங்கள் நன்றாக இருக்கும். ஹஸ்தம் இரண்டாம் நான்கு மாதங்கள் நன்று என அறியவும்.




இந்த ஆண்டில் வரும் பெயர்ச்சிகள்:

குரு ஜய ஆண்டு வைகாசி மாதம் 30ம் தேதி (13-06-2014) வெள்ளிக்கிழமை மாலை மணி 06:03க்கு புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். பின் கார்த்திகை மாதம் 17ம் தேதி (03-12-2014) புதன் கிழமை மாலை 05:10க்கு மகம் நட்சத்திரம் 1ம் பாதம் சிம்ம இராசிக்கு அதிசார பலம் பெற்று பெயர்ச்சி அடைகிறார். பின் மார்கழி மாதம் 07ம் தேதி (22-12-2014) திங்கள் கிழமை பகல் 12:19க்கு ஆயில்யம் 4ம் பாதம் கடக ராசிக்கு வக்ரம் அடைந்து பெயர்ச்சி அடைகிறார்.

சனி ஜய ஆண்டு மார்கழி மாதம் 01ம் தேதி (16-12-2014) செவ்வாய்கிழமை பகல் 02:17க்கு விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக இராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

ராகு ஆனி மாதம் 07ம் தேதி (21-06-2014) சனிக்கிழமை பகல் 11:18க்கு சித்திரை நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி இராசிக்கும், கேது பகவான் அதே நாள் அதே நேரத்தில் ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் மீனம் ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார்கள்.