Wednesday, April 24, 2013

மந்திர மாவது நீறு - தொடர் - பாகம் 1

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.


பொழிப்புரை
சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.

குறிப்புரை
திருநீறு மந்திரம் போல நினைத்ததைக் கொடுக்கும். நினைத்தவரைக் காக்கும். வானவர் - சிவலோகத்திலுள்ளவர். சிவமானவர். மேலது - திருமேனியில் பூசப்பட்டது. சுந்தரம் - அழகு; சிவப்பொலிவு. துதிக்கப்படுவது என்பதற்கு இத்திருப்பதிகமே சான்று. தந்திரம் - ஆகமம். சிவாகமத்தில் சிறப்பாகச் சொல்லப்படுவது. சமயத்திலுள்ளது - சிவசமயத்தில் அழியாத பொருளாவது பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள். பாசம் - பசுவின் கண் இருந்து பதியால் நீறாக்கப்பட்ட உண்மையை உணர்த்துவது. உள்ளது - சிவம். `ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின்` - ( திருக்குறள்) திருநீறே சிவம். துவர் - பவளம். பங்கன் - பாகன். திரு ஆலவாயான் - மதுரைத்தலத்தில் திருவாலவாய்க்கோயிலுள் எழுந்தருளியிருப்பவன். திருவாலவாயான் திருநீறு என்பது ஆறன்தொகையாதல் அறிவார்க்குத் திருநீறே சிவகதி தரும் என்னும் உண்மை இனிது புலப்படும். `கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை... பூசி மகிழ்வாரே யாமாகில்... சாரும் சிவகதி...` (திருமந்திரம்)

Friday, April 19, 2013

திருவையாறு சப்த ஸ்தானம் 27-04-2013

திருவையாறு சப்த ஸ்தானம் 27-04-2013

நாம் ஒவ்வொருவரும் பரமனைத் தேடி காசி முதல் இராமேஸ்வரம் வரை இமயம் முதல் குமரி வரை எத்தனையோ இடங்களுக்கு பயணம் செய்கிறோம். ஆனால் தன்னையே நம்பி வந்த ஒரு பக்தனுக்காக பரமன் ஏழு ஊர்களுக்கு செய்த பயணத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

அப்பர் பெருமானுக்கு கயிலைக் காட்சி கிடைத்து, "கண்டறியாதன கண்டேன்' என்று இறும்பூதி எய்திய தலம். காவிரியில் மூழ்கி ஐயாறப்பரை தரிசனம் செய்தால் காசி தரிசனத்தை விட புண்ணியம் அதிகம்.

இப்படி எத்தனையோ சிறப்புகள்கொண்ட ஊர் திருவையாறு. இங்கு ஐயாறப்பரை அனுதினமும் வழிபாடு செய்து வந்தார் சிலாதர் என்னும் முனிவர். ஆனாலும் அவருக்குப் பிள்ளைகள் இல்லை. ஐயாறப்பரை நோக்கி தவமிருக்க, ஈசனும் காட்சி தந்து "புத்திர காமேஷ்டி யாகம் செய்'' என்றார். யாகத்தின் பயனாய் முனிவருக்கு ஒரு பெட்டி கிடைத்தது. அந்தப் பெட்டியைத் திறக்க ஆயிரம் சூரியப் பிரகாசத்துடன் அற்புதமான ஒரு குழந்தை. அதற்கு செப்பேஸ்வரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் சிலாதர். ஆனாலும் அவனுக்கு ஆயுள் பதினாறுதான் என்பதை அறிந்து அதிர்ந்தார்.

ஆனால் செப்பேஸ்வரனோ "விதியை மதியால் வெல்கிறேன்' என்றபடி ஐயாறப்பர் சந்நிதி முன் உள்ள சூரிய புஷ்கரணியில் ஒற்றைக் காலில் நின்று பரமனை நினைத்து கடுந்தவம் புரிந்தான். அவனுடைய தவத்துக்கு இரங்கிய ஈசன் அம்பிகையுடன் காட்சி தந்தார். அவரிடம், 'பிறப்பு, இறப்பு இல்லா பெருவாழ்வு வேண்டும். கயிலையில் எப்போதும் தங்களுடன் இருக்க வேண்டும்'' என்று வரம் கேட்டான் செப்பேஸ்வரன். அவனுக்கு நந்திகேஸ்வரன் என்ற திருநாமம் சூட்டி சிவகணங்களுக்கு தலைவராக்கினார் ஈசன்.

கயிலையில் சிவத்தொண்டு புரிவதையே சிந்தனையாகக் கொண்டு நந்திதேவர் கவலையின்றிருந்தார். ஆனால் தன்னைத் தவிர வேறு சிந்தனை இல்லாது இருக்கும் நந்திதேவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கவலை சிவனுக்கு ஏற்பட்டது. தன் வளர்ப்பு மகனுக்கு பெண் தேடி சிவபெருமான் உமையுடன் திருமழபாடி திருத்தலத்திற்கு வந்தார். அங்கிருந்த வசிஷ்ட முனிவரிடம் பேசி அவரது பேத்தியான சுயசாம்பிகையை திருநந்தி தேவருக்கு நிச்சயம் செய்தார். திருவையாற்றைச் சுற்றியுள்ள ஆறு ஊர்களில் இருந்து திருமணத்திற்குத் தேவையான பொருட்கள் திருமழபாடியில் குவிந்தன. ஒரு பங்குனி மாதம்,புனர்பூச நட்சத்திரத்தில் நந்தி தேவருக்கும், சுயசாம்பிகைக்கும் திருமணம் நடைபெற்றது. இதன்பின் திருமணத்திற்கு உதவி செய்த ஆறு ஊர் இறைவர்களுக்கும் நன்றி செலுத்தவும், திருநந்தி தேவரை மற்ற ஊர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவும் ஏற்பாடானது.

சித்திரை மாதம் முழு நிலவின் மறுநாள் ஐயாறப்பரும், அறம்வளர்த்த நாயகியும் பெரிய பல்லக்கிலும், புதுமணத் தம்பதிகளான நந்தியெம்பெருமாளும், சுயசாம்பிகையும் வெட்டிவேர் பல்லக்கிலும், திருவையாற்றில் இருந்து புறப்படுகிறார்கள். அன்று காலை கிழக்கு கோபுர வாசலில் நிகழும் இந்நிகழ்வுக்கு கோபுர தரிசனம் என்று பெயர். இதற்கு ஆயிரக் கணக்காண பக்தர்கள் கூடுவார்கள். காலை 6 மணிக்கு புறப்படும் பல்லக்கு திருப்பழனம் வந்து சேரும். ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊர்ப்பெருமானும், பெருமாட்டியும் இவர்களை எதிர்கொண்டழைத்து மரியாதை செய்து தங்கள் ஊர் பல்லக்கில் அடுத்த ஊருக்கு கூடவே செல்கிறார்கள்.

அதன்படி வருகிற 27.4.2013 காலை 6 மணிக்கு திருவையாறு கிழக்கு கோபுர வாசலில் இருந்து ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியின் பெரிய பல்லக்கும், நந்திதேவர்- சுயசாம்பிகையின் வெட்டிவேர் பல்லக்கும் புறப்படும்.

இரண்டு பல்லக்குகளும் மதியம் திருப்பழனம் (சுமார் 4 கி.மீ.) வந்து சேரும். திருப்பழனத்தில் இருந்து புறப்பட்டு மூன்று பல்லக்குகள் திருச்சோற்றுத்துறை (சுமார் 4 கி.மீ.) வந்து சேரும். திருச்சோற்றுத்துறையில் இருந்து 4 பல்லக்குகள் புறப்பட்டு திருவேதிக்குடி (சுமார் 4 கி.மீ.) வந்தடையும். திருச்சோற்றுத்துறை பல்லக்குடன் சேர்ந்து 5 பல்லக்குகள் திருக்கண்டியூர் (சுமார் 5 கி.மீ.) அடையும். அங்கிருந்து 6 பல்லக்குகள் புறப்பட்டு திருப்பூந்துருத்தி (சுமார் 3 கி.மீ.) அடையும். திருப்பூந்துருத்தியில் இருந்து 7 பல்லக்குகள் புறப்பட்டு இரவில் தில்லைஸ்தானம் (சுமார் 4 கி.மீ.) காவிரி ஆற்றை அடையும்.

இரவு தில்லைஸ்தானம் பல்லக்கு உட்பட 8 பல்லக்குகள் காவிரி ஆற்றங்கரையோரம் முகாம் இடும். மறுநாள் 28.4.2013 அன்று காலை முதல் ஒவ்வொரு பல்லக்காக புறப்பட்டு திருவையாறு (சுமார் 3 கி.மீ.) தேரடித் திடலை அடையும். அன்று மாலை தேரடித் திடலில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்த பிறகு பல்லக்குகள் திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் சிரம பரிகாரம் செய்துகொண்டு ஒவ்வொன்றாக சொந்த ஊர் திரும்பும்.

சிறந்த ராம பக்தராகிய தியாகராஜ சுவாமிகளும், புகழ் வாய்ந்த கர்நாடக சங்கீத வித்வானாகிய மகா வைத்தியநாத ஐயரும், தமிழ்க் களஞ்சியமாக விளங்கிய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரும், இன்னும் பல அறிஞர் பெருமக்களும் ஏழூர் வலம் வந்த பெரியவர்கள். அவர்கள் பெற்ற பிறவிப் பயனை நாமும் பெறலாமன்றோ!

ராஜாங்கபுரம் கும்பாபிஷேகம்

வயல்கள் சூழ்ந்த கிராமம். எந்த விதமான மாசு மருவின்றி காற்று. மக்களும்தான். அவரவர்கள் தங்களது சொந்த ஊரை விட்டு அயலூர்களில் இருந்தாலும் திருவிழா, கொடை விழா, கும்பாபிஷேகம் போன்ற விழாக்களை விட்டுக் கொடுக்காமல் வந்து நடத்திக் கொடுப்பது. இது தமிழக மண்ணில் கிராமங்களில் நாம் காணும் காட்சிகள்.

நாம் மேலே குறிப்பிட்டது மிக சமீபத்தில் நடந்த ராஜாங்கபுரம் கும்பாபிஷேகம் பற்றியதாகும். ராஜாங்கபுரம், மிக அழகிய மற்றும் பசுமையான ஊர். திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் தெந்திருப்பேரைக்கு அடுத்து அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றிலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இடம்.

பசுமையான ராஜாங்கபுரம் கிராமம்


அங்கிருக்கும் அம்மன் கோவிலுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் எங்கள் குடும்பம்தான் கும்பாபிஷேக வைபவங்களை நடத்தி வைத்தது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 15ம் திகதி ஸ்ரீமுத்தாரம்மன், ஸ்ரீசந்தண மாரியம்மன் தேவிகளுக்கு அஷ்டபந்தன நூதன ராஜகோபுர கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டியது. கிட்டத்தட்ட இரண்டு மாத ஓய்விற்குப் பின் நாங்கள் கலந்து கொண்ட முதல் வைபவம் இதுதான்.

எங்களுடைய சித்தப்பா அம்மன் அருள் ஸ்ரீகுருநாத ஜோஸ்யரவர்கள் மற்றும் இன்னொரு சித்தப்பா ஆன்மீகச்செம்மல் ஸ்ரீசுந்தராஜ அடிகளார் இணைந்து இந்த வைபவத்தை நடத்தினர். இதில் நாங்களும் கலந்து கொண்டது பாக்கியமே.

அம்மன் அருள் ஸ்ரீகுருநாதன் ஜோஸ்யர்
 13ம் திகதி இரவு - எங்களுடைய பயணம் தொடந்தது. இரவு சாப்பாட்டிற்குப் பின் நாங்கள் கோவிலுக்கு 10 மணிக்கு சென்றடைந்தோம்.

14ம் திகதி காலை 4.30 to 7 - எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்க ஸ்ரீமஹாகணபதி ஹோமம் நடந்தது.


மஹாகணபதி ஹோமம் ஆரம்பிக்கும் முன்

அக்னி ஸ்தாபனம் செய்யும் முன்


ஹோமம் நடைபெறும் போது


14ம் திகதி காலை 8.30 - 2.00 - வாஸ்து பூஜை, பலி, யஜமான வர்ணம், கும்பத்தில் தீர்த்தம் எடுத்தல்,  யாகசாலைப் பிரவேசம், ஆவாஹணம், அக்னி முகம், முதலாம் கால யாகசாலை பூஜை, முதலாம் கால பூர்ணாகுதி ஆகியவை நடந்தது.

வாஸ்து பூஜைக்காக ஸ்ரீகுருநாத ஜோஸ்யருடன் நாங்கள்
வாஸ்து பலி பூஜைக்கான பாணி பூஜை செய்யப்படுகிறது
கோபூஜை


14ம் திகதி மாலை 5.00 - 9.00 - காப்பு கட்டல், இரண்டாம் கால யாகசாலை பூஜை, அர்ச்சனை, சிறப்பு வேத கோஷம், திருமுறை பாராயணம், இரண்டாம் கால பூர்ணாகுதி நடந்தது.

ஸ்ரீசுடலையாண்டி அவர்களுக்கு காப்பு கட்டப்படுகிறது
அனைவரையும் தனது குரலால் வசியப்படுத்திய சிவனடியார் இலங்கேஸ்வரன்
14ம் திகதி இரவு 9.30க்கு மேல் - யந்திர ஸ்தாபணம், பிராண பிரதிஷ்டை ஆகியவை நல்லபடியாக முடிந்தது.


யந்திர ஸ்தாபனம் செய்யும் போது


15ம் திகதி காலை 4.30 - 7.30 - மூன்றாம் கால யாகசாலை பூஜை, அர்ச்சனை, சிறப்பு வேத கோஷம், திருமுறை பாராயணம், மூன்றாம் கால பூர்ணாகுதி, நாடிசந்தானம், தேவதைகளுக்கு உயிர் கொடுத்தல், பிரசன்னம் பார்த்தல் ஆகியன நடந்தது.


நாடி சந்தாணம் முடிந்தபின் பிரசன்னம் பார்க்கப்படுகிறது. மூன்று முறை பார்க்க வைத்த ஸ்ரீசிவனனைந்த பெருமாள் முன் எடுக்கப்பட்ட படம்

குடம் புறப்படுதல்


ஸ்ரீகன்னி விநாயகருக்கும் கும்பாபிஷேகம் ஆகிறது 15ம் திகதி காலை 9.05க்கு - கும்பம் எடுத்தல் நடந்தது. கும்பாபிஷேகம் சரியாக 10.03க்கு அம்பாளின் அருட்கொடையால் மிக நல்லபடியாக நடந்தது. ஸ்ரீகன்னி மூல கணபதி, ஸ்ரீநாராயணஸ்வாமி, ஸ்ரீமுத்தாரம்மன், ஸ்ரீசந்தணமாரியம்மன் ராஜகோபுரம், ஸ்ரீசிவனனைந்த பெருமாள், ஸ்ரீமாவடி சுடலை ஸ்வாமி ஆகியோருக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

மஹாஅபிஷேகம் சரியாக 11.15க்கு நடந்து மஹாதீபாராதனை சரியாக 12.20க்கு காண்பிக்கப்பட்டது. பின் பிரசாதம் வழங்கப்பட்டது.

குறிப்புகள்:

[1] அங்கிருக்கும் கிராம மக்களில் பலர் வெளியூரில் இருந்தாலும் அனைவரும் தவறாது கலந்து கொண்டனர்.

[2] புதிதாக அமைந்திருக்கும் ராஜகோபுரம் மக்களின் மனது போன்றே மிக அருமையாக அமைந்துள்ளதை நாம் காணலாம்.
[3] ராஜகோபுரத்தில் இருக்கும் சிலைகளானாலும் சரி, வரைந்திருக்கும் ஓவியமானாலும் சரி அனைத்தும் மிக அருமை. ஸ்ரீவில்லிபுத்தூர் சிற்பிக்கு எங்களின் பாராட்டுக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள்.
[4] ஊர் மக்களின் ஒத்துழைப்பு நன்றாக இருந்தது.
[5] குரும்பூர் நாதஸ்வர கோஷ்டியினர், ஸ்ரீவைகுண்டம் பாணிக்காரர்கள், நாகர்கோவில் ஜண்டை மேளம் குழுவினரின் பங்கும் அதிகம்.[6] அனைத்து தேவைதைகளுக்கும் பிரசன்னம் ஒரே முறையில் வர ஸ்ரீசிவனனைந்த பெருமாளுக்கு மட்டும் மூன்று முறை பார்க்க வேண்டி வந்தது.[7] கும்பாபிஷேகம் நடக்கும் போது 2 கருடர்கள் வட்டம் போட கூட்டம் ஆர்ப்பரித்தது.
[8] அம்பாளுக்கு நைவேத்யம் படைப்பதற்காகவே நாகர்கோவில் ஆசீரமம் கிராமத்திலிருந்து ஸ்ரீநாகராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு வந்திருந்து சிறப்பித்திருந்தார்கள்.


தோளில் துண்டு போட்டிருப்பவர் நாகராஜன் அவர்கள். அவருக்கு வல்லப்புறம் இருப்பவர் தர்மராஜன், இடப்புறம் முறையே ஆன்மீகச்செம்மல் ஸ்ரீசுந்தராஜ அடிகளார், ஸ்ரீபரமேஸ்வரன் அவர்கள்
[9] மொத்தம் ஐந்து ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 116 கும்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரே நேரத்தில் 5 வேத வி்ற்பன்னர்களால் பூர்ணாகுதி செய்யப்பட்டது. ஸ்ரீகுருநாதன் ஜோஸ்யர், ஸ்ரீசுந்தராஜ அடிகளார், பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர், ஸ்ரீரெங்கராஜ கோபால ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீதர்மராஜ அய்யர் ஆகியோர்களால் பூர்ணாகுதி நடத்தப்பெற்றது. ஸ்ரீசுடலையாண்டி, ஸ்ரீராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீமாரியப்பன் ஆகியோர்கள் இரண்டு நாட்களாக எங்களுக்கு உடன் இருந்து உதவிகள் செய்தார்கள்.
[10] நவகைலாய குருஸ்தலம் முறப்பநாட்டிலிருந்து வந்திருந்த சிவனடியார் சிவன் இலங்கேஸ்வரன் இரண்டு நாட்களாக திருமுறைகளை பாடிய விதம் காண்போரையும், கேட்டோரையும் மகிழ்வித்தது.
[11] பூக்கள் மொத்தமாக வாங்கப்பட்டு கோவிலில் வைத்து ஆட்களால் கட்டப்பட்டது. வவுச்சர் என்று சொல்லப்படும் மிகப் பெரிய மாலை பிரமிக்கதக்க வகையில் இருந்தது.
[12] சிலைகள் அனைத்தும் மிக அருமையாக இருந்தது.
[13] அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்ட விதம் மிகவும் நன்றாக இருந்தது.


[14] மஹாஅபிஷேகம் நடைபெறும் நேரத்தில் ஆன்மீகச் செம்மல் ஸ்ரீசுந்தராஜ அடிகளார் ஆற்றிய குலதெய்வத்தின் பெருமை தலைப்பிலான உரை நிகழ்ந்தது. அது முடிந்தவுடன் நாங்கள் விஜய வருட புத்தாண்டு பலன்கள் உரை நிகழ்த்தினோம்.

ஆன்மீகச் செம்மலுடன்(வலதுபுறம் இருப்பவர்) ஸ்ரீரெங்கராஜ ஸ்வாமி


[15] எல்லாவற்றையும் விட கும்பாபிஷேகம் முடிந்த உடன் வந்த மழை அந்த அம்பாளே நேரடியாக வந்து அருளியது போல் இருந்தது என்றால் மிகையில்லை.

மேலும் படங்களுக்கு இங்கே சுட்டவும்

Thursday, April 18, 2013

ஸ்ரீராம நவமியன்று சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்

ஸ்ரீராமர் மந்திரம்
ஆபதாமபஹர்த்தாரம் தாதாரம் ஸர்வஸம்பதாம்
லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம்
ஆர்த்தா நாமார்த்தி ஹந்தாரம்
பீதானாம் பீதநாசனம்
த்விஷதாம் காலதண்டம் தம்
ராமச்சந்த்ரம் நமாம்யஹம்
ராமாய ராமபத்ராய ராமசந்த்ராய வேதஸே
ரகுநாதாய நாதாய ஸீதாய பதயே நம:ராம மந்திரம்
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்

இந்த மந்திரம் பதின்மூன்று எழுத்துக்களைக் கொண்டது. ராம த்ரயோதஸூக்ஷரி மந்திரம் எனப்படும். இந்த மந்திரத்தை ஸ்ரீ சமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் தொடர்ந்து கூறி ஸ்ரீராம பிரானின் தரிசனம் பெற்றார். இவர் க்ஷத்திரபதி சிவாஜி மன்னரின் குரு.

ஏகஸ்லோக ராமாயணம்
எல்லாவித காரிய சித்திகளும் பெறவும், மங்களம் உண்டாகவும் இந்த இராமாயண ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யவும்.

ஸ்ரீராமம் ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதாஹஸ்தகரம்
அங்குல்யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேய மாஸ்ரயம்
வைதேகி மனோகரம்
வானர தைன்ய சேவிதம்
சர்வ மங்கள கார்யானுகூலம்
சத்தம் ஸ்ரீராம சந்த்ர பாலய மாம்.


ஒரே சுலோகத்தில் சுந்தரகாண்டம்
யஸ்ய ஸ்ரீஹனுமான் அனுக்ரஹ பலாத் தீர்ணாம்புதிர் லீலயா
லங்கரம் ப்ராப்ய நிசாம்ய ராமதயிதாம் பங்க்த்வா வனம் ராக்ஷஸான்
அக்ஷõதீன் விநிஹத்ய வீக்ஷ?ய தசகம் தக்த்வா புரீம் தாம்புள:
தீரணாப்தி கபிபிர்யுதோ யமநமத்தம் தாமசந்த்ரம்பஜே
இதை தினமும் காலையிலும், மாலையிலும் கூறிவந்தால் சுந்தர காண்டத்தை முழுவதுமாகப் பாராயணம் செய்ததற்கு ஈடாகும்.
க்ருத வீர்ய சுதோ ராஜ சகஸ்ரபுஜ மண்டல:
அவதாரோ ஹரே சாக்ஷõத் பாவயேத் சகலம் மம
கார்த்த வீர்யாஜுனோ நாமா ராஜா பாஹு ஸகஸ்ரகவாத்
தஸ்ய ஸ்மரண மாத்ரேண நஷ்டத்ரவ்யம் ச லப்யதே
இழந்த செல்வம் மீண்டும் பெறவும், திருடு போன பொருள் தானாக வந்தடையவும், வரவேண்டிய பண பாக்கி வரும், கடன் தொல்லை தீரும்.

Tuesday, April 9, 2013

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 14 - மீனம் ராசி பலன்கள்

மீனம்:

கடும்சொற்களால் உங்களை காயப்படுத்துபவர்களைக் கூட அரவனைக்கும் மீன ராசி அன்பர்களே எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் உங்கள் பொறுப்புகளை  நீங்கள் தட்டிக் கழிக்க மாட்டீர்கள். முடிந்தவரை அனைவருக்கும் நன்மைகள் செய்வதற்கு பாடுபடுவீர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:

கிரகநிலை:

இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு தனஸ்தானத்தில் கேதுவும், ராசிக்கு தைரியஸ்தானத்தில் குருவும், அஷ்டமஸ்தானத்தில் சனி  ராகுவும் இருக்கிறார்கள். சுகஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.


உங்கள் செயல்களால் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் பயனடைவீர்கள். நண்பர்களுக்காகவும், கூட்டாளிகளுக்காகவும் சில தியாகங்களைச்  செய்வீர்கள். உங்களின் இனிமையான பேச்சினால் பகைவரையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். சகோதர, சகோதரிகள் உங்கள் எண்ணங்களுக்கு மதிப்பு  கொடுத்து நடந்துகொள்வார்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரை சந்தித்து அவர்கள் மூலம் செய்தொழிலை விரிவுபடுத்திக்கொள்வீர்கள். கடினமான  செயல்களையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள்.  குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி முடிப்பீர்கள். வருமானம் நன்றாக  இருப்பதால் புதிய வீடு, வாகனம் வாங்க முற்படுவீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம்  கண்டிப்புடன் நடந்துகொள்வீர்கள். இதனால் அவர்களின் மனக்கசப்புகளுக்கு ஆளாக நேரிடலாம். எனவே எச்சரிக்கையுடன் இருக்கவும். மேலும்  எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தர வேண்டாம். சமுதாயத்தால் அங்கீகரிக்கப்படுவீர்கள். பெற்றோர் வகையில் இணக்கமான சூழ்நிலை  காணப்படும். அவர்களின் நீண்ட நாளைய உடல் உபாதைகள் மறைந்து மருத்துவச் செலவுகள் குறையும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும்.  வெளிநாட்டுத் தொடர்புகளால் நன்மை உண்டாகும். வருமானம் படிப்படியாக உயரும். உபரி வருமானங்களுக்கு வழி பிறக்கும். புதிய சேமிப்புத்  திட்டங்களில் இணைவீர்கள். ஆனால் மற்றவர்களை எளிதாக நம்பிவிட வேண்டாம். எவருக்கும் அனாவசியமாக வாக்கு கொடுக்க வேண்டாம். மற்றபடி  குடும்பத்தில் நிம்மதி நிலவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று வாதிடாமல் சமயத்துக்குத்  தகுந்தவாறு விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். மேலும் வழக்குகளில் ஓரளவுக்குத்தான் நன்மைகளை எதிர்பார்க்க முடியும். எனவே விட்டுக்கொடுத்து  சமரசமாக நடந்துகொள்ளவும். மற்றபடி திட்டமிடாது நீங்கள் செய்யும் காரியங்களிலும் சுலபமாக வெற்றி பெறுவீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலக  வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடிப்பீர்கள். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறைந்து சகஜமான சூழ்நிலையைக்  காண்பீர்கள். வருமானம் நன்றாக இருந்தாலும் கடினமாக உழைக்க வேண்டி வரும்.  சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். தேவையில்லாத சில  அலைச்சல்கள் உண்டானாலும் உங்கள் வேலைகள் அனைத்தும் சாதகமாகவே முடியும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள்  மறையும். கூட்டாளிகளால் நன்மைகளைப் பெறுவீர்கள். வியாபாரிகளிடையே உங்களின் செல்வாக்கு உயரும். மற்றபடி அரசாங்க விவகாரங்களில்  எச்சரிக்கையுடன் இருக்கவும். கணக்கு வழக்குகளை சரியாக எழுதி வைத்துக்கொள்ளவும். மறதி காரணமாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாமல்  பார்த்துக்கொள்ளவும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் அமோகமாக இருக்கும். உங்களின் திறமைகள் வீண் போகாது. கருப்பு நிறப் பயிர்களால்  லாபம் கிடைக்கும். சக விவசாயிகளுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். உங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தர  மாட்டார்கள். அதனால் நீண்ட கால முதலீடுகளில் ஈடுபட்டு லாபம் பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையும். எதிர்கட்சியினரும்  உங்களுக்கு ஆதரவு தருவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். இதனால் புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொண்டர்களின்  எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். உட்கட்சிப் பூசலில் சிக்கிக்கொள்ளாமல் தப்பித்துக் கொள்வீர்கள். கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை  முடித்துக் கொடுத்த பின்னரே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவக் கூடிய நிலையில் இருப்பதால் அவர்களை  முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்களின் படைப்புகளை புதிய வடிவத்தில் தருவீர்கள். புதிய கலைப் பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.
பெண்மணிகளுக்கு கணவருடன் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். பிள்ளைகள் வழியில்  சந்தோஷம் உண்டாகும். மற்றபடி உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சண்டை, சச்சரவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.
மாணவமணிகள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியாமல் போகலாம். எனவே கடினமாக படித்து மனப்பாடம் செய்து முன்னேற முயற்சி  செய்யவும். பெற்றோரிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.

QXFPGVK5J5XZ

பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று நவகிரகங்களை வலம் வந்து வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை  வணங்கவும். காக்கைக்கு அன்னமிடவும். ஏழை எளியோர்க்கு உதவவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி கோளறு பதிகம் பாராயணம் செய்யவும்.

மலர் பரிகாரம்: வியாழகிழமைதோறும் உங்களால் முடிந்த அளவு அருகம்புல்லை மாலையாகக் கட்டி விணாயகருக்கு சாத்தவும். முடிந்தவர்கள்  தேங்காய் மாலை சாத்தலாம். 

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 13 - கும்பம் ராசி பலன்கள்

கும்பம்:

கடுமையான சூழ்நிலைகளைக் கூட சமயோசிதமாக கையாண்டு மற்றவர்களை ஆச்சர்யத்துடன் பார்க்க வைக்கும் கும்ப ராசி வாசகர்களே நீங்கள் புது  தொழில்நுட்பங்களை கற்பதில் ஆர்வம் உடையவர்கள். எதிலும் போட்டிகள் இருந்தாலும் பொறாமை கொள்ள மாட்டீர்கள். பொறுப்புகளை சரியாக  நிறைவேற்றுவீர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:

கிரகநிலை:

இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு தைரியஸ்தானத்தில் கேதுவும், ராசிக்கு சுகஸ்தானத்தில் குருவும், பாக்கியஸ்தானத்தில் சனி ராகுவும்  இருக்கிறார்கள். பஞ்சமபூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.


நீங்கள் எதையும் எதிர்கொள்ளும் துணிவையும் தைரியத்தையும் பெறுவீர்கள். முடிவெடுக்காமல் இருந்த விஷயத்தில் ஒரு சுமுகமான முடிவைக்  காண்பீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தோரின் பார்வை உங்கள் மீது படும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உடலில் ஏற்பட்ட  உபாதைகள் நீங்கி மிடுக்குடன் நடப்பீர்கள். உங்களை உதாசீனம் செய்த உற்றார், உறவினர்கள்  உங்களுக்கு உதவ முன் வருவார்கள். மற்றவர்களுக்கு  கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றி விடுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பல புராதன ஆலயங்களுக்கு சென்று  வழிபாடு  செய்வீர்கள்.  புதிய உறவு முறைகள் ஏற்பட்டு மனதில் மகிழ்ச்சி நிறையும். கர்வத்தினால் எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். வம்பு  வழக்குகளில் விட்டுக்கொடுத்து சமரசமாக முடித்துக் கொள்ளவும்.  உங்கள் செய்தொழிலை விரிவு படுத்த எந்தக் குறுக்கு வழியையும் நாட வேண்டாம்.
சிறிய கௌரவப் பிரச்னைக்காக நண்பர்களுடன் மனக்கசப்புகள் உண்டாகும். பயணங்கள் ஓரளவு நன்மையே தரும் என்பதால் அனாவசியப்  பயணங்களைத் தவிர்க்கவும். மற்றபடி செய்தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் உண்டாகும். மேலும் செய்தொழிலை வேறு ஊருக்கு மாற்றுவீர்கள்.  வங்கிகளிடமிருந்து தேவையான நேரத்தில் தேவையான கடன் கிடைக்கும். உங்கள் உடல் உழைப்பு அதிகரிக்கும். முக்கியமான காரியங்களை தனித்து  நின்றே செயல்படுத்தவும். நண்பர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி பெற்றோர் பெருமைப் படத் தக்க வகையில்  குடும்பத்தில் உங்கள் அணுகுமுறை இருக்கும். குடும்பத்தாருடன் விருந்து, கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். சகோதர, சகோதரிகளிடம்  விட்டுக் கொடுத்துப் பழகவும். அவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு மாட்டிக் கொள்ள நேரிடலாம். அசையாச்சொத்துக்களை நல்ல  விலைக்கு விற்று லாபமடையும் ஆண்டாக இது அமைகிறது. உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.  எனவே  பொறுப்புகளை உணர்ந்து சிறப்பாகப் பணியாற்றவும். அலுவலகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் தேவைக்கேற்ப ஒத்துழைப்பு  தருவார்கள். அவசரப்படாமல் நிதானத்துடன் செயல்படுங்கள். வியாபாரிகளுக்கு வியாபாரம் விறுவிறுப்பாக நடக்கும். வருமானம் நல்லபடியாக வரத்  தொடங்கும். ஆனாலும் பழைய பாக்கிகளை சிரமத்துடன் வசூலிப்பீர்கள். மற்றபடி புதிய முயற்சிகள் பலனளிக்கும். மொத்த விலைக்கு பொருட்களை  வாங்கும்போது அவற்றுக்கு சிறிது கூடுதல் பணம் கொடுக்க நேரிடும். எனவே சூழ்நிலைக்குத் தகுந்தவாறு விலையைக் கூட்டியோ குறைத்தோ  பொருட்களை விற்பனை செய்யவும். விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களையும், ஊடு பயிர்களையும் பயிரிட்டு நலம் பெறுங்கள். கால்நடைகளை  வைத்திருப்போர் நல்ல பலன்களை அடைவீர்கள். விவசாய உபகரணங்களை வாங்கி பயிர் விளைச்சலை இரட்டிப்பாக்கிக் கொள்வீர்கள். புதிய  குத்தகைகளை நன்றாக யோசித்து எடுக்கவும். வங்கிக் கடன்கள் பெற தாமதமாகும் என்பதால் பொறுமையுடன் இருந்து கடன்களைப் பெற்று  எதிர்காலத்திற்கு வித்திடவும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். அரசியல்வாதிகள் தொண்டர்களின் ஆதரவுடன் செயற்கரிய செயல்களைச்  செய்வீர்கள்.  எதிரிகளால் கஷ்டங்கள் உண்டாகாது என்றாலும் அவர்களின் மீது ஒரு கண் வைத்திருக்கவும். கட்சித் தலைமையிடம் நல்ல பெயரைக்  காப்பாற்றிக் கொள்ளவும். சச்சரவுகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் தானாகவே  கிடைக்கும். அவற்றை முடித்துக் கொடுத்து நற் பெயர் வாங்குவீர்கள்.  மற்றபடி உங்கள் செயல்களை சீரிய முறையில் திட்டமிட்டுச் செய்யவும்.  எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இன்று எது முக்கியமோ அதை செய்ய முற்படுங்கள். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை  அதிகரிக்கும். ஆனாலும் உற்றார், உறவினர்கள் அனுகூலமான இருக்க மாட்டார்கள. அனாவசியப் பேச்சுகளைத் தவிர்க்கவும். தெய்வ வழிபாட்டில்  மனதைச் செலுத்தி நிம்மதி அடையுங்கள். புதிய வாகனங்கள் வாங்கும் எண்ணத்தைத் தவிர்க்கவும். மாணவமணிகள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.  கடுமையாக முயற்சி செய்து எல்லா தடைகளையும் உடைத்து வெற்றிவாகை சூடுவீர்கள். எதையும் சிந்தித்து செயல்படுத்துவீர்கள். விளையாட்டில்  வெற்றி பெறுவீர்கள்.


பரிகாரம் : சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி மாலை வேளையில் ஸ்ரீலலிதா ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யவும்.


மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து  வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக  மூன்னேற்றம் ஏற்படும்.

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 12 - மகரம் ராசி பலன்கள்


மகரம்:

எதிலும் போராட்ட குணத்துடன் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்கும் மகர ராசி அன்பர்களே நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள். கடுமையான உழைப்பின்  மூலம் அனைத்து காரியங்களிலும் வாகை சூடுவீர்கள். உங்கள் மனசாட்சிக்கு விரோதமான க்காரியங்களை செய்ய மாட்டீர்கள்.


எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:

கிரகநிலை:

இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு சுகஸ்தானத்தில் கேதுவும், ராசிக்கு பஞ்சமபூர்வ புண்ணிய இடத்தில் குருவும், தொழில்ஸ்தானத்தில்  சனி ராகுவும் இருக்கிறார்கள். கள்த்திர சப்தமஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.


உங்களின் செய்தொழிலில் எதிர்பாராத லாபத்தைக் காண்பீர்கள். புதிய முயற்சிகளை வெற்றியுடன் செயல்படுத்துவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை  உயரும். புத்திக் கூர்மையுடன் சமயோஜிதமாக யோசித்து நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். சோதனைகளைச் சாதனைகளாக்கிக் கொள்வீர்கள். பொது நலத்  தொண்டுகளில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும். உங்களைச் சுற்றிலும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கும்.  பெற்றோருக்கு ஏற்பட்ட உடல் உபாதைகள் தீரும். பொருளாதார வளத்தைப் பெருக்குவதற்கு துணிவான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய  சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு  கிடைக்கும். அறிவாளிகளின் ஆலோசனை தக்க நேரத்தில் கிடைக்கும். அலைச்சல் நீங்கி திட்டமிட்ட காரியங்கள் முடிவடையும். கடுமையாக உழைத்து  எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். சிலருக்கு சொந்தத் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் தேடிவரும். நண்பர்கள், கூட்டாளிகள் தேவைக்கு  ஏற்ப உதவுவார்கள். தெய்வ பலத்தால் அனைத்தையும் சுலபமாக சாதித்துக் கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் கவனமாக இருக்கவும்.  வாய்தாக்களை தவறாமல் குறித்துக்கொண்டு ஆஜராகவும். உங்களுக்கு எதிராக, ஒரு தலைப்பட்சமாக தீர்ப்புகள் வழங்கப்படாமல் பார்த்துக்கொள்ளவும்.

குடும்பத்தாருடன் கவலையில்லாமல் கலகலப்பாகப் பேசிப் பழகுவீர்கள். உற்றார், உறவினர்கள் பாசம் காட்டுவார்கள். சமுதாயத்தில் பிரபலமான  குடும்பத்தினருடன் திருமண உறவு உண்டாகும். ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளின் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குழப்பவாதிகளையும்,  அதீத சந்தேகப் பிராணிகளையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்கவும். நவநாகரீக ஆடைகளை அணிந்து கம்பீரமாக வலம் வருவீர்கள்.  அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளைப் பெறுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்களின் நினைவாற்றம் அதிகரிக்கும். அதன்மூலம் பரிசுகளை வெல்லும்  ஆண்டாகவும் இது அமைகிறது. உத்யோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பீர்கள். உங்களின்  முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டு விலக்கிவிடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின்  அலுவலக வேலைப் பளு கூடினாலும் அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சக ஊழியர்கள் தேவைக்கேற்ப உதவி செய்வார்கள். சிலர் கடன்  வாங்கி வாகனங்களை வாங்குவீர்கள். வியாபாரிகள் ஓய்வில்லாமல் உழைத்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தை  விரிவுபடுத்த நினைப்பீர்கள். கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனக் கசப்புகளை சமாளித்து விடுவீர்கள். புதிய யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக்  கவர்வீர்கள். சிலர் திட்டமிட்டு செயல்பட்டு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே தொடரும்.  விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன்களைப் பெற்று கழனிகளை  சீரமைப்பீர்கள். மானியங்கள் கிடைக்கும். புதிய விவசாயக் கருவிகளை வாங்குவீர்கள். விவசாய இடுபொருட்களுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும்.  மனதிலிருந்த அச்சம் விலகும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். விவசாயக் கூலிகளை கௌரவமாக நடத்துவீர்கள்.  அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு சில நேரங்களில் கூடுதலாக கிடைக்கும். ஆதரவு குறைந்த நேரங்களில் சற்று அடங்கிப் போகவும்.  கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது அவர்களின் எண்ணங்களை அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றவர்களுக்கு முன் ஜாமீன்  போட வேண்டாம். கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள்.  புதிய நண்பர்களால் பலன் அடைவீர்கள். படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்புகள்  உயரும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சீரிய முயற்சி செய்து சுப காரியங்களை நடத்துவீர்கள். உறவினர்கள் வகையில்  இருந்த மனக்கசப்புகள் நீங்கி அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். சமையல் செய்யும்போது கவனத்துடன் இருக்கவும்.  மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள். அதிக  மதிப்பெண்களைப் பெறுவதற்காக போதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டினால் உடல் ஆரோக்யத்தை வளர்த்துக் கொள்வீர்கள்.

பரிகாரம் : சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீபைரவரை வணங்கி வரவும். முடிந்தால் மிளகு விளக்கு போடவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி காலபைரவாஷ்டகம் பாராயணம் செய்யவும்.


மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து 3 முறை வலம் வரவும். உங்களுக்கு  பொன்னான காலம் கனிந்து வரும்.

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 11 - தனுசு ராசி பலன்கள்

தனுசு:

எதிலும் நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டு முன்னுதாரணமாக வாழும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் அனைத்து பிரச்சனைகளையும்  உங்கள் வாக்கு சாதுர்யத்தால் சமாளீப்பீர்கள். ஆனால் எந்தக் காரியத்தையும் தள்ளிப் போடுதல் கூடாது என்பதனை கவனித்துக் கொள்ள வேண்டும்.

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:

கிரகநிலை:

இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு பஞ்சமபூர்வ ஸ்தானத்தில் கேதுவும், ராசிக்கு 6ம் இடத்தில் ராசிநாதன் குருவும், லாபஸ்தானத்தில்  சனி ராகுவும் இருக்கிறார்கள். கள்த்திர சப்தமஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.


 செய்தொழிலில் உங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாகும். எதிர்பாராத நபர்களிடமிருந்து நல்லாதரவு கிடைக்கும்.  இன்முகத்துடன் வலம் வருவீர்கள். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களின் சிறுசிறு தவறுகளைக் கண்டுகொள்ள மாட்டீர்கள். பெற்றோர் பெருமைபடத்  தக்க வகையில் குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பீர்கள். எல்லா விஷயங்களுக்கும் உடனடி தீர்வைக் காண்பீர்கள். நண்பர்களிடம் தன்னம்பிக்கையை  ஏற்படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் அகலும். அவற்றிலிருந்து வருமானம் வரத்தொடங்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை  செலுத்துவீர்கள். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள். செய்தொழிலை விரிவுபடுத்துவதற்காக அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.  குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளியில் கொடுத்திருந்த கடன் வட்டியும் முதலுமாகத் திரும்பி வரும்.  உங்களின் சொந்தக் காலில் நின்று வெற்றி பெறுவீர்கள். தெய்வ பலத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உறவினர்களை  எக்காரணம் கொண்டும் சந்தேகப் பார்வை பார்க்க வேண்டாம். எந்த வியாதி என்று அறிய முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் சட்டென்று  குணமடைந்துவிடுவார்கள். மரியாதை நிமித்தமாக உயர்ந்தோரை சந்தித்து பெருமையடைவீர்கள். சிலருக்கு இந்த ஆண்டு விசாலமான இல்லங்களுக்கு  மாறும் யோகம் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய நண்பர்களைச் சேர்க்கும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். ஏனெனில்  தகுதியில்லாதவர்களால் வில்லங்கம் வரலாம். மற்றபடி நஷ்டம் வரும் தொழில்களிலிருந்து பக்குவமாக விலகிவிடுவீர்கள். பணப்புழக்கத்தில்  பின்னடைவுகள் ஏற்படாது. எவருக்கும் முன் ஜாமீன் போட வேண்டாம். உங்கள் பெயரில் கடன் வாங்கித் தர வேண்டாம். உத்யோகஸ்தர்கள்  கவனமாகப் பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களால் சில பிரச்னைகள் ஏற்படும் என்பதால்  கவனமாக நடந்துகொள்ளவும். அவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கவும். பிரச்னைகளை வளரவிட வேண்டாம். ஊதிய உயர்வு சிறப்பாக  அமையும். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவர் என்ற பெயரை வாங்குவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின்  எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய முதலீடுகள் செய்வதற்கு பழைய முதலீடுகள் கைகொடுக்கும். போட்டிகள் சற்று கடுமையாக இருந்தாலும்  அவற்றை சாதுர்யத்துடன் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப்  பெற்று செயல்பட்டால் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். விவசாயிகளுக்கு கொள்முதல் அதிகரித்தாலும் லாபம்  குறைவாகவே கிடைக்கும். அதனால் உபரி வருமானத்தைப் பெருக்க காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றை பயிரிட்டு பலனடைவீர்கள். சந்தையில்  போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்து விற்றால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை  உயரும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள். கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கட்சியில்  மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். தற்போது உள்ள நிலைமையைப் பயன்படுத்தி கட்சி மேலிடத்திடம் நல்ல பெயர் வாங்க  முயற்சிக்கவும். சமுதாயத்தில் உங்கள் கௌரவமும், புகழும் உயரும்.
கலைத்துறையினருக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். கால தாமதம் ஏற்பட்டாலும் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சக கலைஞர்களில்  நம்பகமானவர்களைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் நிலவிய போட்டி, பொறாமைகள் குறையும். பல நாட்களாக  வராமல் இருந்த தொகை உங்கள் கையைத் தேடி வரும். புதிய தொழில் நுட்பத்தை அறிந்துகொள்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த  கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உங்களின் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். சகோதர, சகோதரி  உறவில் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். உடல் ஆரோக்யத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. மாணவமணிகள் நல்ல முறையில் படித்து  மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு உற்சாகம் அடைவீர்கள். உங்களின் வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகள்  தென்படும்.


பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி காலை சிவபுராணம் படிக்கவும். தேவாரம் தெரிந்தவர்கள் அதனை பாராயணம் செய்யவும்.

மலர் பரிகாரம்: வியாழகிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து  வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக  மூன்னேற்றம் ஏற்படும்.

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 10 - விருச்சிகம் ராசி பலன்கள்

விருச்சிகம்:

எதிலும் நெஞ்சுரத்துடன் போராடி வெற்றிகளைக் குவிக்கும் விருச்சிக ராசி வாசகர்ளே நீங்கள் எடுத்த முடிவை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள  தயங்குவீர்கள். உங்களுக்கென்று ஒரு குறிக்கோளுடன் வாழ்வீர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:

கிரகநிலை:

இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் கேதுவும், ராசிக்கு 7ம் இடத்தில் குருவும், விரையஸ்தானத்தில் சனி ராகுவும்   இருக்கிறார்கள். அஷ்டமஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.


மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவான சிந்தனைகள் குடிகொள்ளும். கடன் பிரச்னை தீர வழிகளைக் காண்பீர்கள். வீடு கட்டும் முயற்சியில்  இருந்த தடைகள் தீர்ந்து மீண்டும் வேலைகள் துவங்கும். இல்லத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.  ஆனால் விளையாட்டாக பேசும் வார்த்தைகள் வீண் வம்புக்கு வழி வகுக்கும். எனவே கவனமாக இருக்கவும். மறதியால் முக்கிய விஷயங்களில்  தாமதம் ஏற்படலாம். சிலருக்கு பல், அடிவயிறு சம்பந்தமான உபாதைகள் தோன்றி மருத்துவச் செலவுகள் உண்டாகும். கடினமாக உழைத்து வெற்றி  பெறுவீர்கள். உங்களின் செல்வாக்கு உயரத் தொடங்கும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை முறையாகச் செய்து  குடும்ப வளத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்துபேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். போட்டியாளர்களின் நெருக்கடிகளைத்  தாண்டி வேலைகளை சரியாக முடிப்பீர்கள். குடும்பத்தினருடன் இனிமையான பயணங்களைச் செய்வீர்கள். ஆக்கபூர்வமான எண்ணங்களை  நடைமுறைப்படுத்தி முன்னேறுவதற்கான வாய்ப்புகளைத் தேடுவீர்கள். வீட்டிற்கு பராமரிப்பு செலவுகளும், வாகனங்களை பழுது பார்க்கும் செலவுகளும்  உண்டாகும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களின் விமர்சனங்களை பெரிதுபடுத்தாமல் நடந்துகொள்வீர்கள். பொது வாழ்வுப் பணிகளில்  ஈடுபட்டிருப்பவர்கள் கிடப்பில் கிடந்த நல்ல திட்டங்களை மன உளைச்சல் இல்லாமல் செய்யத் தொடங்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களின்  ஆலோசனைகளுடன் முக்கிய விஷயங்களை செயல்படுத்தி குடும்பத்தில் அமைதி கெடாமல் பார்த்துக்கொள்வீர்கள். வீண் வதந்தி, வீண் வம்பு இரண்டும்  வளராதவாறு இந்த ஆண்டு பார்த்துக்கொள்வது அவசியம். உத்யோகஸ்தர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும்.  திட்டமிட்ட வேலைகளை உடனுக்குடன் முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களைப் பற்றி  வெளிப்படையாகப் பேச வேண்டாம். மேலும் உங்களின் கோரிக்கைகள் சற்று தாமதமாகப் பரிசீலிக்கப்படும். மற்றபடி அலுவலக ரீதியான பயணங்கள்  அனுகூலமான பலன்களைக் கொண்டு வந்து சேர்க்கும். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரிகள் இந்த ஆண்டில் எதிர்பார்த்த  லாபத்தைக் காண முடியாது. தீயவர்களை இனம் கண்டு அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது. போட்டிகள் நியாயமற்றவையாக இருக்கும்  என்பதால் வியாபாரத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. கூட்டாளிகள் உங்கள் முடிவுகளை ஆமோதிப்பதுபோல் தெரிந்தாலும் முதுகுக்குப் பின்னால்  தவறாகப் பேசுவார்கள். இதனால் அவர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி கொடுக்கல், வாங்கலில் நஷ்டங்கள் ஏற்படாது.
விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கொள்முதலில் லாபத்தைக் காண்பீர்கள். கால்நடைகளாலும் நன்மை அடைவீர்கள். பாசன வசதிகளைப்  பெருக்கிக் கொள்வதற்கான செலவுகளை செய்வீர்கள். கையிருப்புப் பொருட்கள் மீது அக்கறை காட்டவும். மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்து கூடுதல்  வருமானத்தைப் பெற முயல்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்காக செலவு செய்வீர்கள். அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான  திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால் உங்களை புதிய பதவிகள் தேடி வரும். எதிரிகள் உங்களிடம்  அடங்கி நடப்பார்கள். மக்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவுக்குக் கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கலைத்துறையினர் சிறப்பான புதிய  ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். இதனால் உங்கள் பெயரும், புகழும் உயரும். உங்களின் திறமைகள் பளிச்சிடும். சக கலைஞர்களுடன் ஒற்றுமையாகப்  பழகுவீர்கள். அவர்களிடமிருந்து நல்லுதவிகளைப் பெறுவீர்கள். புதிய வாகனங்களின் சேர்க்கை உண்டாகும். அனாவசிய பயணங்களை செய்ய  வேண்டாம். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உறவும், சுற்றமும் அனுகூலமாக இருக்கும். அவர்களுக்கு உங்களால்  இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். விருந்து, கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். தாய்வீட்டுச் சீதனம் வந்து சேரும்.  உங்கள் பெயரில் அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விரும்பிய  பாடப்பிரிவுகளைப் பெற்று மகிழ்வீர்கள். விளையாட்டில் பரிசுகளைப் பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.பரிகாரம் : செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம்.


சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி சியாமளா தண்டகம் பாராயணம் செய்யலாம்.

மலர் பரிகாரம்: செவ்வாய்தோறும் எலுமிச்சைமாலையை அம்மனுக்கு அர்ப்பணித்து வலம் வந்து வணங்குங்கள். அவள் உங்களுடன் இருந்து அனைத்து  காரியங்களிலும் வெற்றிகளை தேடித் தருவாள்.

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 09 - துலாம் ராசி பலன்கள்


துலாம்:

எதிலும் எந்த இடத்திலும் நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக போராடும் துலா ராசி வாசகர்களே நீங்கள் அனைவராலும்  விரும்பப்படுவீர்கள். அதிகம் சுமைகளை எடுத்துக் கொள்வீர்கள். அதே நேரம் சின்ன சின்ன பிரச்சனைகளில் தலையிட்டு வெளியில் வர தள்ளாடுவீர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:

கிரகநிலை:

இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசியில் சனி ராகுவும், 7ம் இடத்தில் கேதுவும், ராசிக்கு 8ம் இடத்தில் குருவும் இருக்கிறார்கள்.  பாக்கியஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.


ஏற்ற இறக்கமாக பொருளாதாரத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும். புதிய தொழில்களில் கால் பதிக்க போராடிக் கொண்டிருந்தவர்கள்  எதிர்பார்த்த மாற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களுடன் இருந்த பிரச்னைகள் தீர்வுக்கு வருவதால் அலுவலகச் சூழல்களில் இருந்த இறுக்கம் மறைந்து  சகஜ நிலை உருவாகும். உங்களின் தகுதிக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். யோகா, ப்ராணாயாமம்  போன்றவற்றை செய்து உடல் நலத்தையும், மன வளத்தையும் பெருக்கிக்கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் திறமைசாலிகளை தங்கள்  அருகில் வைத்துக் கொண்டு காரியமாற்றி நலமடைவார்கள். வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டு வெற்றி  பெறுவீர்கள். சகோதர, சகோதரிகள் சட்டென்று உங்களை எடுத்தெறிந்து பேசிவிடலாம். அதனால் உங்களின் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள  வேண்டாம். மேலும் அரசுத் துறையிலிருந்து சலுகைகளைப் பெற குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக்  கொள்ளுங்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் புகழைத் தக்க வைத்துக் கொள்ள சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும். தொழிலில் புதிய  திருப்பங்களைக் காண்பீர்கள். வேறு ஊருக்குச் சென்று தொழில் செய்யும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் உங்களுக்கு  பாதுகாப்பாக இருப்பதால் மறைமுகமான போட்டிகளால் பாதிப்புகள் ஏற்படாது. இல்லத்திற்குத் தேவையான நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  உடலில் ஏற்படும் சிறிய உபாதைகளுக்கு உடனுக்குடன் வைத்தியம் செய்து கொண்டால் மருத்துவச் செலவுகளைக் குறைக்கலாம். மற்றபடி பங்குச்  சந்தை விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு தேவையான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும்  வழங்குவீர்கள். கவலைகொள்ள வைத்த கடன் தொல்லைகள் குறைவதால், உங்களின் மனதில் தைரியம் பிறக்கும். ஆனாலும் புதிய நண்பர்களிடம்  கவனமாக இருக்கவும். பூர்வீகச் சொத்தில் இருந்த இழுபறியான நிலைமை மாறும். தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி வெற்றி நடைபோடுவீர்கள்.  சகோதர, சகோதரிகளிடம் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து குடும்ப ஒற்றுமையை பேணிக் காப்பீர்கள். உத்யோகஸ்தர்கள் விரும்பிய  இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே குறித்த காலத்திற்குள் முடிவடையும். உங்களின் வேலைகளில்  தெளிந்த மனநிலையுடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவு நிலை உண்டாகும். சக ஊழியர்களின் குறைகளை முன்னின்று தீர்த்து  வைப்பீர்கள். புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும், நண்பர்களும் அனுசரணையாக இருப்பார்கள். கடன்  கொடுக்காமல் முடிந்தவரை தவிர்க்கவும். பழைய கடன்களை சீரிய முயற்சியின் பேரில் படிப்படியாக திருப்பிச் செலுத்தி விடுவீர்கள்.
விவசாயிகள் நூதன யுக்திகளைப் புகுத்தி விவசாயத்தைப் பெருக்குவீர்கள். வங்கிகளிடமிருந்தும், கூட்டுறவு சங்கங்களிடமிருந்தும் எதிர்பார்த்த கடன்  மானியத்துடன் கிடைக்கும். மனச் சோர்வு நீங்கி, எதையும் சாதிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். பழைய குத்தகை பாக்கிகள்  வசூலாகும். கருப்பு நிற பயிர்களை உற்பத்தி செய்தால் மேலும் நன்மை அடையலாம். அரசியல்வாதிகள் பொறுப்புடனும், கவனத்துடனும்  செயல்படுவீர்கள். மேலிடத்தின் கருணைப் பார்வை உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். சில நேரங்களில் உட்கட்சிப் பூசல்களில் சிக்கி மன  வருத்தத்துக்கு ஆளாவீர்கள். பிறருக்கு வாக்கு கொடுக்கும்போது நன்றாக யோசிக்கவும். மற்றபடி தொண்டர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும்.  பயணங்களால் நன்மை உண்டாகும். கலைத்துறையினர் தேவைக்கேற்ப வருமானத்தைக் காண்பீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்பட்டு  பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய கலைஞர்கள், நண்பர்கள் ஆவார்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். பெண்மணிகளுக்கு இந்த ஆண்டில்  புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு நிறைந்திருக்கும். பொருளாதாரத்தில் சிறப்புகளைக் காண்பீர்கள்.  குடும்பத்தில் உங்கள் கௌரவத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளுக்கு பெற்றோர் மற்றும்  ஆசிரியர்களின் அன்பு கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். உங்களின் முயற்சிகள் தடைகளைத் தகர்த்து தாமதமின்றி வெற்றி பெறும்.  விளையாட்டில் சாதனைகளைச் செய்வீர்கள்.


பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனை வணங்கி வரவும். நெய் விளக்கு ஏற்றலாம். முடிந்தவரி  கருட தரிசனம் செய்யவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி நமசிவய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லவும். ராமஜெயமும் எழுதலாம்.

மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் வில்வ இலையை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும். உணர்ச்சிகளை  அடக்க யோகா செய்யுங்கள்.

சித்திரை மாத ஆன்மீகக் குறிப்புகள்

விஜய வருஷம் சித்திரை மாதம் ஆன்மீகக் குறிப்புகள்

விஷு புண்ய காலம் - 1
சதுர்த்தி - 1, 15
விவாகம் - 2, 18, 23, 29, 30
சஷ்டி - 3
கரிநாள்- 6, 15
ஸ்ரீராமநவமி - 6
ஏகாதசி - 9, 22
பிரதோஷம் - 10, 24
ஸ்ரீமஹாவீர் ஜெயந்தி - 10
சித்ரா பௌர்ணமி, பௌர்ணமி பூஜை, சித்ர குப்த ஜெயந்தி , தேவேந்திரர் பூஜை, சந்திர கிரகணம் - 12
ஸ்ரீவராஹ ஜெயந்தி - 17
திருவோண விரதம் - 19
நடராஜர் அபிஷேகம் - 19
காலபைரவாஷ்டமி - 19
அக்னி நக்ஷத்ரம் - கத்திரி வெயில் ஆரம்பம் - பகல் மணி 1.10க்கு - 21
மாத சிவராத்திரி - 25
அமாவாசை - 26
கிருத்திகை விரதம் - 27
ஸ்ரீபலராம ஜெயந்தி - 29
கிருதயுகாதி - 29
அக்ஷய திருதியை - 30
ஸ்ரீராமனுஜர் ஜெயந்தி - 31
துவாபரயுகாதி - 31

நாயன்மார் குருபூஜை:
12உ - இசைஞானியார்
13உ - திருக்குறிப்பு தொண்ட நாயனார்
21உ - திருநாவுக்கரசர் (அப்பர்)
26உ - சிறுத்தொண்ட நாயனார்
29உ - மங்கையர்கரசியார்
31உ - விரண்மீண்ட நாயனார்

அடிவருள் ஏனையவர் குருபூஜை:
11உ- உமாபதி சிவாச்சாரியார்

ஆழ்வார் ஆச்சாரியர்கள் திருநக்ஷத்திரங்கள்:
5உ - முதலியாண்டார் 24வது பட்டம்
11உ - கிடாம்பி ஆச்சான்
12உ - மதுரகவி ஆழ்வார், திருதாழ்வரை தாசர், நாடாதூரம்மாள், திருமலை நம்பிகள், அனந்தாழ்வார் 29வது பட்டம்
13உ - பெரிய திருமலை நம்பிகள்
22உ - 32 வது பட்டம்
24உ - பெரிய பெருமாள்
25உ - வடுக நம்பிகள்
28உ - உய்யங்கொண்டார்
29உ - எங்களாழ்வார்
31உ - எம்பெருமானார், கோவில் சோமாஜி ஆண்டார்

மத்வாச்சாரியார் புண்ய தீர்த்த தினங்கள்:
1உ - ஸத்திய ஸந்தர்
15உ - வாகீசர்
22உ - ஸத்திய பிரியர்
29உ - வித்தியாதி ராஜர்


வாஸ்து:
இம்மாதம் வாஸ்து செய்ய உகந்த நாள் - 10ம் தியதி (23.04.2013) செவ்வாய்கிழமை - காலை 8.40 முதல் 8.50க்குள் நல்ல நேரம்

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 08 - கன்னி ராசி பலன்கள்

கன்னி:

எதிலும் தங்களது உழைப்பையும் தன்னார்வத்தையும் வெளிப்படுத்தும் கன்னி ராசி வாசகர்களே குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் நீங்கள். அதீதமான உணர்வுகள் கொண்டவர்கள். கௌரவத்தை அனைத்து இடத்திலும் எதிர்பார்ப்பீர்கள். சிக்கனத்தை கடைபிடிப்பதிலும் வல்லவர்கள். உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:
கிரகநிலை:

இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு தனகுடும்ப வாக்குஸ்தானத்தில் சனி ராகுவும், ஆயுள்ஸ்தானத்தில் கேதுவும், பாக்கியஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு தொழில்ஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.


இந்த ஆண்டு, உங்களின் கிரகநிலைகளை வைத்து பார்க்கும் போது  நீங்கள் பொறுமையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் முழுமையாகக் கைகூடும். உங்களை வாட்டிய உடல் உபாதைகளும் நீங்கிவிடும். மனப்புழுக்கத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக சுவாசிப்பீர்கள். உங்களைப் பகடைக்காயாக பயன்படுத்தி வந்த உற்றார், உறவினர்களின் உள்மனதைப் புரிந்துகொண்டு அவர்களிடமிருந்து விலகிவிடும் சந்தர்ப்பங்கள் உண்டாகும். உங்கள் அருகிலேயே இருந்து சதி செய்தவர்கள் ஓடி ஒளிவார்கள். அரசாங்கத்தில் உங்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். எதிர்பார்த்த பொருளாதார முன்னேற்றத்தைக் காண்பீர்கள். காத்திருந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். நெடுநாட்களாக இழுபறியாக நடந்துவந்த வழக்குகள் சட்டென்று சாதகமாக முடியும். இல்லத்தில் களவு போன பொருட்கள் திரும்பவும் கை வந்து சேரும். இயல்பான காரியங்களைக்கூட மாற்று வழிகளில் சிந்தித்து செயல்படுத்துவீர்கள். உங்களின் தோற்றத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் உண்டாகும். உங்கள் சகோதர, சகோதரிகள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவார்கள். புதிய மந்திரங்கள் கற்பீர்கள். குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள். மற்றபடி எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தர வேண்டாம். மேலும் அவசியமான பயணங்களையே மேற்கொள்ளவும். புதிய நண்பர்களை ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம். பொதுக்காரியங்களில் ஈடுபட மனம் விழையும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். சிலருக்கு ரியச் எஸ்டேட் துறைகளின் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சக ஊழியர்களிடம் உங்கள் மனதில் உள்ளவற்றைக் கூற வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்கிற நிலையில் இருப்பதே சிறப்பு. மற்றபடி அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்கள் திறமையில் குறைவு ஏற்படாது. வியாபாரிகளின் முயற்சிகளுக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடை ஏற்பட்டாலும் அனைத்துச் செயல்களும் வெற்றி பெறும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பெரிய முதலீடுகளில் தொழிலை விரிவுபடுத்த நினைக்க வேண்டாம். இருப்பதை நேர்த்தியாகச் செய்து முடிப்பதே சிறப்பு. புதிய கடன்கள் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய நிலங்களை வாங்குவீர்கள். கணக்கு, வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டு வங்கிகளிடம் சலுகைகளைப் பெறுவீர்கள். காலம் கனிந்து வருவதால் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருமானத்தைப் பெருக்குவீர்கள். சொத்து தொடர்பான சண்டைகளில் ஈடுபட வேண்டாம். கால்நடைகளை கவனத்துடன் பராமரிக்கவும். வருங்காலத்திற்கான சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். மற்றபடி முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.
கலைத்துறையினர் உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள். "உழைப்பே உயர்வு' என்கிற ரீதியில் பணியாற்றுவீர்கள். ஒப்பந்தங்களைச் சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்தாலும் பண வரவுக்கு தாமதம் ஏற்படலாம். ஆனாலும் ரசிகர்களின் உற்சாகமான ஆதரவு உங்கள் மன வருத்தத்தைக் குறைக்கும் மருந்தாக அமையும். வரவேற்புகள் குறைந்தாலும் நிலைமை போகப் போக மாறிவிடும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். ஆனாலும் கணவர் வழி உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சிலருக்கு வயிறு சம்பந்தமான உபத்திரவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். தெய்வ வழிபாட்டைக் கூட்டிக்கொண்டு ஆன்ம பலம் பெறவும். மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு நன்றாகவே அமையும். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.


பரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று தேங்காய் நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் ஸ்ரீஉப்பியப்பன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.

மலர் பரிகாரம்: “துளஸி”யை பெருமாளுக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துக்களில் இருந்தவந்த பிரச்சனைகள் மாறும்.

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 07 - சிம்ம ராசி பலன்கள்

சிம்மம்:
எதிலும் தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தும் சிம்ம ராசி வாசகர்களே நீங்கள் தர்ம சிந்தனை உடையவர்கள். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் என்று விரும்புவீர்கள். பழமையையும் கலாசாரத்தையும் மதித்து நடப்பீர்கள். முன்னோர்களின் ஆசீர்வாதங்களை முழுமையாக பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:
கிரகநிலை:

இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு தைரியவீர்யஸ்தானத்தில் சனி ராகுவும், பாக்கியஸ்தானத்தில் கேதுவும், தொழில்ஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.


இந்த ஆண்டு, உங்களின் ராசியிலும் பின் தனவாக்கு குடும்பஸ்தான ராசியிலும் சஞ்சரிக்கிறார் குரு பகவான். நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியுடன் முடியும். சிறிய அளவு முயற்சிகள்கூட பெரிய பலனைத் தரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் சுலபமாக நடக்கும். பொருளாதாரம் படிப்படியாக உயரும். உடல் உபாதைகளுக்கு மாற்று சிகிச்சை முறைகளை மேற்கொள்வீர்கள். அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள். மழலைச் செல்வம் கிடைக்கும். மனதிற்கினிய தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆனாலும் புதியவர்களுடன் கூட்டு சேர வேண்டாம். மேலும் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி சமுதாயத்தில் புகழ் பெற்ற பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்களின் அந்தஸ்து உயரும். சகோதர, சகோதரிகளுடன் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு உங்களின் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். அனாவசியச் செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டாம். வரவுக்குத் தகுந்த செலவுகளைச் செய்யவும். மேலும் மனதில் எதையோ இழந்துவிட்டது போன்ற உணர்வு தோன்றும். எனவே சான்றோர்களின் நூல்களைப் படித்து மனதை தெளிவாக வைத்துக் கொள்ளவும்.

குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் ஒன்று சேர்வார்கள். வருமானம் படிப்படியாக உயரும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். கடினமான உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்களின் போட்டியாளர்களை திடமான நம்பிக்கையுடன் வெற்றிகொள்வீர்கள். நூதனத் தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். உங்களின் செயல்களில் வேகத்துடன், விவேகத்தையும் கூட்டிக்கொள்வீர்கள். உங்களுக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக்கொள்வீர்கள். உங்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்குகளை சம்பந்தப்பட்டவர்களே திரும்பப் பெறுவார்கள். உங்களின் பழக்க வழக்கங்களில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தாருடன் இனிய சுற்றுலா சென்று வருவீர்கள். நேர்வழியில் சிந்தித்து உங்களின் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். கடின உழைப்பை தாரக மந்திரமாகக் கொண்டு உழைக்கவும். சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகவும். சிலர் உங்களுடன் பகைமை பாராட்டுவார்கள். ஆனாலும் வருமானத்திற்குக் குறைவு இருக்காது. அலுவலக ரீதியான பயணங்களால் நல்ல அனுபத்தைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். திட்டமிட்டபடி செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். பழைய கடன்களை அடைத்த பிறகே புதிய கடன்களைப் பெற முயற்சி செய்யவும். மற்றபடி வாடிக்கையாளர்களின் வருகை நல்லமுறையிலேயே இருக்கும். ஆனாலும் புதிய முதலீடோ அல்லது விரிவாக்கலோ இருந்தால் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும். விவசாயிகள் கொள்முதல் லாபத்தைக் காண்பீர்கள். பாசன வசதிகளுக்காக அதிக செலவு செய்ய நேரிட்டாலும் அதனால் நன்மையே ஏற்படும். கறவை மாடுகள் வாங்கி பால் வியாபாரம் செய்தும், மரங்கள் வளர்த்தும் லாபம் பெறுவீர்கள். புதிய நிலங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். அதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் வேலைகளை சிரமம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். தொண்டர்களின் ஆதரவும், கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறி புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். ஆனாலும் மாற்றுக் காட்சியினர் உங்கள் பேச்சில் குறை காண முயல்வார்கள். எனவே அனாவசிய விவகாரங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். மற்றபடி உங்களின் பெயரும், புகழும் உயரும். சக கலைஞர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். சக கலைஞர்களுடன் நல்ல உறவை வைத்துக்கொள்வீர்கள். பெண்மணிகளின் மதிப்புக்கும், மரியாதைக்கும் குறைவு வராது. உங்களின் பிரார்த்தனைகள் வீண் போகாது. பண வரவு அதிகரிக்கும். குழந்தைகள் உதவிகரமாக இருப்பார்கள். சுபகாரியங்கள் நடத்துவதில் ஏற்பட்ட தடைகள் விலகும். உற்றார், உறவினர்களுடன் ஒற்றுமை தொடரும். மாணவமணிகளின் படிப்பில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் பெற்றோரின் உதவியுடன் நன்றாகப் படித்து வெற்றி பெறுவீர்கள். சோம்பேறித்தனத்தை தள்ளி வைத்துவிட்டு ஆசிரியர் நடத்திய பாடங்களை அன்றைய தினமே படித்து மதிப்பெண்களை அள்ளுங்கள். உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொண்டு உடலையும், மனதையும் நன்றாக வைத்துக்கொள்ளுங்கள்.பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் ஸ்ரீசூரியனார் கோவில் சென்று வழிபட்டு வரலாம். காலையில் சூரியன் உதிக்கும் போது தரிசம் செய்வதும் நன்மையைத் த்ரும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி ஆதித்யஹ்ருத்யம் அல்லது புருஷஸூக்தம் பாராயணம் செய்யலாம்.

மலர் பரிகாரம்: “எருக்க மலரை” சிவனுக்கு அல்லது கணபதிக்கோ அர்ப்பணம் செய்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். மேலும் கோமாதாவிற்கு துவாதசி தோறும் அகத்திக்கீரையும் கொடுக்கலாம். உங்களுக்கு அனைத்து காரியங்களும் தங்குதடையின்றி நடக்கும்.

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 06 - கடக ராசி பலன்கள்

கடகம்:
எதிலும் பொறுமையுடனும் தைரியத்துடனும் ஈடுபடும் கடக ராசி வாசகர்களே, நீங்கள் மனசாட்சிக்கி விரோதமான காரியத்தை செய்யமாட்டீர்கள் நீங்கள் எதிலும் ஈடுபடுவதற்குமுன் யோசிப்பீர்கள். தெய்வ சிந்தனை உடையவர்கள், பெற்றோர்களை மதித்து நடப்பீர்கள்

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:
கிரகநிலை:

இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு சுகஸ்தானத்தில் சனி ராகுவும், தொழில்ஸ்தானத்தில் கேதுவும், லாபஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு விரையஸ்தானத்திற்கு குரு மே மாதம் 28-ம் மாறுகிறார். 

 

இனி பலன்களைப் பார்க்கலாம்.


அயராது பாடுபடும் உங்களின் மன தைரியம் அதிகரிக்கும். சோம்பேறித் தனத்தை மூட்டைகட்டி வைத்துவிட்டு சுறுசுறுப்புடன் பணியாற்றுவீர்கள். தாய் வழி உறவுகளில் சுமுகமான நிலைமை ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். பங்காளிகளும் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். சமுதாய விழாக்களில் பங்கேற்பீர்கள். மற்றபடி எவரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். பிறர் கேட்காமல் அறிவுரை வழங்க வேண்டாம். பெரியோரை மதித்து அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். புதிய தொழில் நுட்பங்களை அறிந்துகொள்வீர்கள். சிலருக்கு விருது, பட்டம் பெறும் யோகம் கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களையும் சரியாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் உண்டாகும். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். நகைச்சுவையுடன் பேசி பிறரைக் கவர்வீர்கள். நல்ல எண்ணத்துடன் செயல்களைச் செய்வீர்கள். குழந்தைகள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். செய்தொழிலில் தொடர்ந்து வளர்ச்சியைக் காண்பீர்கள். பிறரின் சொத்துக்களை பராமரிக்கும் யோகமும் சிலருக்குக் கிடைக்கும். நெடுநாட்களாக செய்யாமல் விடுபட்ட குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உங்களின் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். சிலருக்கு புண்ணியத் தலங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்லும் யோகம் கிடைக்கும். நீண்ட நாட்களாக உங்களின் மனதை அரித்துக்கொண்டிருந்த விவகாரத்தில் நல்ல முடிவு ஏற்படும். உங்களின் ஞாபக சக்தியால் முக்கியமான தருணங்களில் சமயோஜிதமாகப் பேசி அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். உத்யோகஸ்தர்களின் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். இடமாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஊதிய உயர்வும் நன்றாக இருக்கும். அலுவலகம் தொடர்பான உங்களின் புதிய எண்ணங்களை வெற்றிகரமாக செயல்படுத்துவீர்கள். சக ஊழியர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். அவர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளுக்கும், நல்லெண்ணங்களுக்கும் பாத்திரமாவீர்கள். வியாபாரிகளுக்கு பொருளாதாரம் நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே அமையும். புதிய வாகனங்களை வாங்கி அதன்மூலம் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். தேவையில்லாத சில அலைச்சல்கள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். கூட்டாளிகள் உங்கள் பொறுப்புகளில் பங்கெடுத்துக்கொண்டு வேலைகளைக் குறைப்பார்கள். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்து பலன் பெறுவீர்கள். கொள்முதலில் எதிர்பார்த்த வருமானத்தைக் காண்பீர்கள். நீர்ப்பாசன வசதிகளால் விளைச்சல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான செலவுகள் குறையும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களிடம் அனுசரணையுடன் நடந்துகொண்டால் மேலும் நன்மை அடையலாம். வாய்க்கால் வரப்புப் பிரச்னைகள் பெரிதாகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் மக்கள் நலப்பணிகளில் கவனத்துடன் ஈடுபடவும். உங்கள் புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும். வருமானத்திற்குக் குறைவு வராது என்றாலும் பொது பணிகளுக்காக உங்கள் கைப்பணத்தைச் செலவழிக்கும் முன் யோசனை செய்து கொள்ளுங்கள். மற்றபடி எதிரிகளின் முட்டுக்கட்டைகளைத் தகர்த்து வளர்ச்சியைக் காண்பீர்கள். கட்சியில் உங்கள் மதிப்பு உயரும். அதேசமயம் குறுகிய கண்ணோட்டத்தைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கு சக கலைஞர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். இதனால் படிப்படியாக வளர்ச்சி அடைவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆனாலும் அனாவசியச் செலவுகளைச் செய்ய நேரிடும். சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெண்மணிகள் குடும்பத்தில் அனுகூலமான நிலைமையைக் காண்பீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உற்றார், உறவினர்கள் இணக்கமாக இருப்பார்கள். பெரியோர்களின் ஆலோசனைப்படி நடந்துகொண்டு குழப்பமான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். மாணவமணிகளுக்கு பெற்றோரின் ஆதரவுடன் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். எனவே அவர்களின் பழைய தவறுகளைப் பெரிதுபடுத்த வேண்டாம்.


பரிகாரம் : முடிந்தால் திருவண்ணாமலை அல்லது  பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும்.


சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி லலிதா திரிசதி பாராயணம் செய்யவும்

மலர் பரிகாரம்: “அல்லி மலரை”  அம்பாளுக்கு திங்கள் தோறும் சாத்திவர குழப்பங்கள் அகலும். மனம் தெளிவடையும்

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 05 - மிதுன ராசி பலன்கள்

மிதுனம்:

எதிலும் நிதானத்தைக் கடைபிடித்து காரியங்களை கரை சேர்க்கும் மிதுன ராசி வாசகளே நீங்கள் எதிலும் உங்கள் அறிவை வெளிக்காட்டுபவர். உங்களுடைய சாதுர்யத்தால் காரியங்களை சாத்த்துக் கொள்வீர்கள். இன்முகம் காட்டாது அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். உங்களுடைய தாய்மாமனுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பீர்கள்.


எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:
கிரகநிலை:

இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சனி ராகுவும், லாபஸ்தானத்தில் கேதுவும், விரையஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு குரு மே மாதம் 28-ம் மாறுகிறார்.

இனி பலன்களைப் பார்க்கலாம்.

அனைவரையும் பார்த்தவுடன் உங்களது முக வசீகரத்தால் கவர்ந்திழுக்கும் உங்களின் செயல்களில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தால் புதிய கோட்பாடுகளை உருவாக்கிக்கொள்வீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் நண்பர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். பொதுநலத் தொண்டுகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். சகோதர, சகோதரிகள் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வார்கள். உங்கள் விருப்பங்களும், தேவைகளும் பூர்த்தியாகும். முக்கியமான விஷயங்களில் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள், அறிவுரைகளைக் கேட்டு முடிவெடுப்பீர்கள். நண்பர்களுக்கும், கூட்டாளிகளுக்கும் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறுகளை உடனடியாகச் சுட்டிக்காட்டி திருத்துவீர்கள். சுதந்திரமாகப் பணியாற்றி வெற்றிவாகை சூடுவீர்கள். புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். கடுமையாக உழைத்து பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள். முடங்கிய செயல்களை மீண்டும் செய்ய முனைவீர்கள். முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுவீர்கள். அயல்நாடு சம்பந்தமான செயல்களிலும் ஈடுபடுவீர்கள். ஷேர் துறைகளின் மூலம் நல்ல ஆதாயத்தைக் காண்பீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை கற்பீர்கள். இறை வழிபாட்டிலும், ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். ஆனாலும் குறுக்கு வழியில் எந்தச் செயலையும் செய்யாமல் நேர் வழியில் சிந்தித்து செயல்படவும். அவசரத்தில் தவறான செயல்களில் ஈடுபட்டு வருத்தப்பட நேரிடலாம். உடல் ஆரோக்யம் ஓரளவு சீராக இருந்தாலும் அவ்வப்போது வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு ஆட்பட நேரிடலாம். மேலும் சிலருக்கு பித்தப்பை தொடர்பாக மருத்துவச் செலவுகளும் ஏற்படும். உங்களின் பேச்சினால் பகையை சந்திக்க நேரிடும். கணக்கு வழக்குகளில் சிறு சிக்கல்கள் தோன்றும். இதனால் அரசாங்க விஷயங்களில் எச்சரிக்கையுடனும், கவனத்துடன் இருக்கவும். மற்றபடி குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினை ஏற்பட்டு வருமானம் வரத் தொடங்கும். உத்யோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். கடுமையாக உழைத்து செயல்களில் வெற்றிபெற்று நற்பெயர் வாங்குவீர்கள். மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். உங்களுக்கு தொல்லை கொடுத்த சக ஊழியர்கள் பகைமை மறந்து நட்புடன் பழகுவார்கள். அலுவலகம் சம்பந்தமான பயணங்களால் நன்மைகளைக் காண்பீர்கள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு லாபகரமாகவே அமைகிறது. பொருட்களின் விற்பனை நன்றாகவே நடக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாண்டால் மேலும் வருமானத்தை அள்ளலாம். மற்றபடி கூட்டாளிகளிடம் உங்கள் திட்டங்களையும் எண்ணங்களையும் அவசியமில்லாமல் பகிர்ந்துகொள்ள வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். ஓய்வின்றி உழைப்பீர்கள். ஆனாலும் உங்களின் குத்தகை பாக்கிகளை சற்று கூடுதல் முயற்சியின் பேரில் செலுத்த வேண்டி வரும். அதனால் வருமானத்தைப் பெருக்க மாற்றுப் பயிர்களைப் பயிரிடவும். கால்நடைகளை நல்ல முறையில் பராமரித்து அவைகளுக்கு பெரிதாக செலவு செய்வதைத் தவிர்க்கவும். வங்கிகளிடமிருந்து தேவையான கடன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாக அமையும். உங்களின் புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். மற்றபடி புதிய பொறுப்புகளை கவனத்துடன் கையாளவும். கட்சியில் எவரிடமும் எதிர்ப்பைக் காட்ட வேண்டாம். கலைத்துறையினரின் புகழும், செல்வாக்கும் உயரும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்கும். உங்களின் முயற்சியும், உழைப்பும் வெற்றியைத் தேடித்தரும். மனதை அரித்துக்கொண்டிருந்த ஒரு விஷயத்தில் முக்கியமான முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானமான போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு வழியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் நல்ல வருமானத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நீடிக்கும். குடும்பத்தினரிடம் உங்கள் மதிப்பு உயரும். விருந்து, கேளிக்கைகளுக்கு செழிப்பாகச் சென்று வருவீர்கள். சிலர் புதிய வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்வார்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். மேற்படிப்புக்கான முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைத் தேடித் தரும். சிலர் மாலை நேரங்களில் தங்கள் படிப்புக்குச் சம்பந்தமில்லாத வேறு படிப்பைப் படித்து தங்கள் நிலையை உயர்த்திக்கொள்வார்கள்.


பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயங்களுக்கு செல்லுங்கள், முடிந்தவர்கள் திவ்ய தேசங்களுக்கும் செல்லலாம்
செல்வங்கள் குவியும்


சொல்லவேண்டிய மந்திரங்கள் : ஓம் ஹரி ப்ரும்ஹ வாசினே நமஹ - என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும்


மலர் பரிகாரம் : தாமரை மலரை அருகிலிருக்கும் பெருமாளுக்கு அர்பணியுங்கள், அவர் எல்லாவற்றையும் சீராக நடத்திவைப்பார்

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 04 - ரிஷப ராசி பலன்கள்

ரிஷபம்:
சொன்ன நேரத்தில் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ளும் ரிஷப ராசி வாசகர்களே! நீங்கள் இராப்பகல் பாராமல் உழைப்பதில் வல்லவர். காசு விஷயத்தில் கறாராக இருப்பவர். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்பவர். தன்னை விட தங்கள் குழந்தைகள் நன்றாக வர வேண்டும் என்று விரும்புபவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:
கிரகநிலை:

இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசியில் குருவும், ரணருணரோக ஸ்தானத்தில் சனி ராகுவும், விரையஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள். தனவாக்கு குடும்பஸ்தானத்திற்கு குரு மே மாதம் 28-ம் மாறுகிறார். 

இனி பலன்களைப் பார்க்கலாம்.


உங்களின் வாக்கு வன்மை அதிகரிக்கும்.  உடல் நலம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். சமுதாயத்தில் உங்கள் பெயரும், புகழும் உயரும். தீயவர்களின் தொடர்பு தானாகவே விலகும். எந்தச் செயலைச் செய்தாலும் அதில் உங்களின் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். புதிய வீடு, நிலம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். ஆனாலும் மனதில் காரணமில்லாத பயம் தொடரும். எனவே ப்ராணாயாமம், யோகா போன்றவற்றைச் செய்து மனக்குழப்பங்களிலிருந்து விடுபடவும். சகோதர, சகோதரிகள் காரணமில்லாமல் விரோதம் பாராட்டுவார்கள். அதனால் அவர்களிடம் அனாவசிய நெருக்கம் வேண்டாம். கடினமான விஷயங்கள் கூட உங்கள் முயற்சியால் சீராகும். சுறுசுறுப்புடனும் தைரியத்துடனும் பணியாற்றுவீர்கள். கடினமான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். உங்கள் செயல்களில் குறை கண்டுபிடிப்பவர்களை நேருக்கு நேராக சந்தித்து சரியான விளக்கமளிப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் சாதனைகளைச் செய்து புகழ் பெறுவீர்கள். தீர்க்கமாக ஆலோசித்து, சிந்தித்து முடிவெடுப்பீர்கள். ஆதாரமில்லாத விஷயங்களை நம்ப மாட்டீர்கள்.  உங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின்  எண்ணங்களுக்கு மதிப்பளித்து புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்துக்கு உயர்ந்துவிடுவீர்கள்.  மேலும் அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் உங்களை வந்தடையும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களைச் செய்து பலனடைவீர்கள். சகோதர, சகோதரிகளிடம் இருந்த பிணக்குகள் மாறி அன்பு, பாசம் அதிகரிக்கும். மற்றபடி பழைய விரோதிகளை இந்தக் காலகட்டத்தில் நம்ப வேண்டாம். உத்யோகஸ்தர்கள் உண்மையான உழைப்பை மேற்கொள்ளவும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வும், பதவி உயர்வும் சிறிய கால தாமதத்திற்குப் பிறகே கிடைக்கும்.  அலுவலகம் சம்பந்தப்பட்ட பயணங்களை அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மேற்கொள்ளவும். சக ஊழியர்களிடம் பக்குவமாகப் பேசிப் பழகவும். வியாபாரிகள் சற்று கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யவும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படவும். அனைத்துச் செயல்களையும் உங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். பண விஷயத்தில் கறாராக நடந்துகொள்ளுங்கள். கூட்டாளிகளிடம் கலந்து பேசிய பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். வாடிக்கையாளர்களின் வருகை குறைவாக இருக்கும் என்பதால் செலவுகளைக் குறைக்கும் வழிகளைத் தேடுங்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். அதோடு நீர்ப்பாசன வசதிகளாலும், கால்நடைகளாலும் நன்மை அடைவீர்கள். உங்களின் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சரியாகவே நிறைவேறும். புதிய நிலங்களை வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். தற்போது உள்ள குத்தகைகளை சரியாகச் செய்து முடிக்கவும். அரசியல்வாதிகள் தங்கள் செயல்களைச் சாதனைகளாக மாற்றிக்காட்டுவீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் புதிய செயல்களைச் செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல்களில் ஏற்படும் இடையூறுகள் தானாகவே விலகி விடும். உங்கள் கருத்துக்களை அடுத்தவர்களிடம் திணிக்க முயல வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திறமைகள் பளிச்சிடும். நல்ல வருமானம் கிடைக்கும். சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு விருதுகள் கிடைக்கும். உங்களின் சமயோஜித புத்தியால் தக்க தருணத்தில் சரியான முடிவெடுப்பீர்கள். பெண்மணிகள் போதும் என்கிற மனநிறைவைப் பெறுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். சகோதர, சகோதரிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடந்தாலும் அவர்களால் பெரிய நன்மைகள் உண்டாகாது. அனாவசியப் பேச்சுகளைத் தவிர்க்கவும். மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல் வலிமை பெற உயற்பயிற்சிகளையும், மன வலிமை பெற யோகா போன்றவைகளையும் மேற்கொள்வீர்கள். வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் போடுவீர்கள். விளையாட்டுகளில் வெற்றிகளைக் காண்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை படிப்படியாக உயரும்.பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வாருங்கள். அவளுக்கு மஞ்ச வஸ்திரம் கொடுத்து அணிவியுங்கள்.


சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி 108 முறையாவது "ராம' நாமத்தை ஜபிக்கவும். தமிழிலோ, வட மொழியிலோ ”சுந்தர காண்டம்” பாராயணம் செய்வது அதிக நன்மை தரும்.

மலர் பரிகாரம்: “மல்லிகை மலரை” சிவனுக்கு பிரதோஷ வேளையில் சாத்திவர குழப்பங்கள் அகலும்.

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 03 - மேஷ ராசி பலன்கள்

மேஷம்:

அசுபதி, பரணி, கார்த்திகை-1ம் பாதம் மற்றும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் மேஷ இராசி வாசகர்களே! நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். வார்த்தைகளில் நிதானம் மிக்கவர். தேவை இல்லாத இடங்களில் கருத்து கூற மாட்டீர்கள். யாரும் கேட்டால் மட்டுமே உதவி செய்வீர்கள். அதிலும் உடல் ஊனமுற்றோருக்கு அள்ளி வழங்குவீர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:
கிரகநிலை:
இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசியில் கேதுவும், ராசிக்கு  7ம் இடத்தில் சனியுடன் ராகுவும் இருக்கிறார்கள். தனவாக்கு குடும்பஸ்தானத்தில் குரு மே மாதம் 27-ம் தேதிவரையிலும் பின்  தைரியவீர்யஸ்தானத்திற்கும் மாறுகிறார். 

இனி பலன்களைப் பார்க்கலாம்.
நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். உங்கள் பெயரும், புகழும் வளரும். குடத்துக்குள் இட்ட விளக்காய் செயலாற்றி வந்த நீங்கள் வெளியுலகில் அறியப்படுவீர்கள். சமுதாயத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். குறுகிய வட்டத்தில் இருந்த நீங்கள் உங்கள் செயல்களை விரிவுபடுத்துவீர்கள். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். அரசாங்க அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். விஞ்ஞானப் பூர்வமாக யோசித்து முடிவெடுப்பீர்கள். பொதுச் சேவை செய்யும் சங்கங்களில் அங்கத்தினர் ஆவீர்கள். தடைபட்டிருந்த விஷயங்கள் மடமடவென்று நடந்தேறும். சகோதர, சகோதரிகளுடன் விட்டுக்கொடுத்துப் பழகுவீர்கள். மற்றபடி எந்தக் காரியத்திலும் அவசரம் வேண்டாம். பேச்சில் நிதானம் தேவை. வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். அனாவசிய பயணங்களைத் தவிர்க்கவும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆலய திருப்பணிகளில் முக்கியப் பொறுப்புகளைப் பெறுவீர்கள்.  உங்களின் செயல்களை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். அனைத்து விஷயங்களையும் உங்களின் நேர்பார்வையிலேயே வைத்துக்கொள்ளவும்.  சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். போட்டிகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். பயணங்களால் அளவான பலன் கிடைக்கும். குழந்தைகள் புதிய முன்னேற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களின் சிறப்பான ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். உங்களின் செயல்கள் நீங்கள் அறியாமலேயே மற்றவர்களுக்கு நன்மையாக அமைந்துவிடும். உங்களின் தகுதியை உணராமல் உங்களின் செயல்களில் குறை காண்பவர்களையும், தவறாக உங்களை விமர்சனம் செய்பவர்களையும் கண்டு கொள்ள வேண்டாம். பெற்றோரின் நல்லாதரவு உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்களின் வேலைகளை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். உங்கள் வேலைகளுக்கு உரிய அங்கீகாரத்தை மேலதிகாரிகள் வழங்குவார்கள். சக ஊழியர்கள் சற்று தள்ளியே இருப்பார்கள். அவர்களை உங்களின் அமைதியான குணத்தால் அனுசரித்து நடந்துகொள்வீர்கள். மனதில் இருந்த ஒருவித பயம் நீங்கி தெளிவாகக் காரியமாற்றுவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் உங்களிடம் நட்போடு பழகுவார்கள்.  வியாபாரத்தைப் பெருக்க புதிய சந்தைகளை நாடிச் செல்வீர்கள். உங்களின் வியாபார யுக்திகள் சரியான இலக்குகளை சென்றடையும். சிறிய முதலீடுகளில் பெரிய வருமானத்தைக் காண்பீர்கள். விவசாயிகளுக்கு தானியப் பொருட்களின் உற்பத்தியில் நல்ல பலன் கிடைக்கும். விவசாய உபகரணங்களை வாங்கி மேலும் முன்னேற்றம் அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்யும்  ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். பாசன வசதிகளை மேம்படுத்திக்கொள்ள செலவு செய்ய நேரிடும். சந்தைகளில் போட்டி பொறாமைகளையும் சந்திக்க நேரிடும். ஆனாலும் பொறுமையுடன் செயல்பட்டு நல்ல விலைக்குப் பொருட்களை விற்பனை செய்வீர்கள். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்துவீர்கள். அரசியல்வாதிகள் சமுதாயப் பணி செய்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவீர்கள். இதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். தொண்டர்கள் உங்கள் சொல் கேட்டு நடப்பார்கள். உங்களின் எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். கலைத்துறையினர் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து வைத்துக்கொள்வீர்கள். அவற்றை தகுந்த சமயத்தில் உபயோகித்து வெற்றி பெறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டுகளும், கௌரவமும் கிடைக்கும். இந்த ஆண்டு உழைப்பை கூட்டிக்கொண்டு செயல்படவும். மற்றபடி புதிய வாய்ப்புகள் தடங்கல் இல்லாமல் வந்துகொண்டிருக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் சில பயணங்களைச் செய்வீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். கணவரிடம் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். உங்கள் கடமையை சரியாகச் செய்யுங்கள். ஆன்மிகத்தில் மனதைச் செலுத்துங்கள். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு நல்ல முறையிலேயே கிடைக்கும். உடல் ஆரோக்யம் வலுப்பெற சில எளிமையான பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

பரிகாரம்: செவ்வாய்கிழமைதோறூம் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வரவும். முடிந்தவர்கள் அருகிலிருக்கும் அறுபடை ஸ்தலங்களுக்குச் சென்று வாருங்கள். 
சொல்ல வேண்டிய மந்திரம்: ’கந்த ஷஷ்டி கவசம்’ அன்றாடம் பாராயணம் செய்வது. “ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லுங்கள். உங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறும்.
மலர் பரிகாரம்: “செவ்வரளி” மலரை ஏதேனும் கோவிலில் அருள்பாலிக்கும் முருகனுக்கோ அல்லது அம்மனுக்கோ சாத்திவர குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

Monday, April 8, 2013

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 02

வெற்றிகளைக் குவித்து நினைத்தது நடந்து இனிக்கும் விஜய வருஷம் கார்த்திகை நக்ஷத்திரத்தில் பிறக்கிறது. பிறக்கப் போகும் புத்தாண்டில் செல்வங்கள் சேரவும், சிறப்புடன் வாழ்ந்து மகிழ்ச்சியான தருணங்களை எதிர்கொள்ளவும், இயற்கை அன்னை சீற்றம் எதுவும் கொள்ளாமல் இருக்கவும், நலமும், வளமும் நாட்டில் மேலோங்கவும், புத்தாண்டின் தொடக்க நாளில் ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாட்டை மேற்கொள்வது அவசியமாகும். வரப்போகும் விஜய வருடம் சூரியனின் நக்ஷத்திரமான கார்த்திகையில் பிறப்பதால் மண்ணில் வாழும் மக்களுக்கெல்லாம் அரசாங்கம் மூலம் நன்மைகள் பல பெருகும்.

நிகழும் மங்களகரமான விஜய வருஷம், உத்தராயனம் வஸந்த ரிது சித்திரை மாதம் 1ம்தேதி (14.04.2013) ஞாயிற்றுகிழமையன்று கார்த்திகை நக்ஷத்திரம் ரிஷப ராசி தனுசு லக்னத்தில் புதுவருஷம் பிறக்கிறது. புத்தாண்டின் கிரக நிலைகளைப் பார்க்கும் போது உலாவரும் 9 கிரகங்களும் சார பலத்தின் அடிப்படையில் சந்தோஷத்தை அதிகமாக அள்ளித்தரும் வகையில் இருப்பது சிறப்பம்சமாகும். ஆண்டின் தொடக்கத்தில் பூர்வபுண்ணிய விரையஸ்தானாதிபதி செவ்வாய் ஆட்சியாகவும், அஷ்டமாதிபதி சந்திரன் ஆறாமிடமிடத்தில் உச்சமாகவும், தனதைரியாதிபதி சனி லாபஸ்தானத்தில் உச்சமாகவும் இருக்கிறார்கள். மேலும் குரு தனஸ்தானத்தையும், தொழிற்ஸ்தானத்தையும், விரையஸ்தானத்தையும் பார்க்கிறார். நாட்டிலும் வீட்டிலும் பல நல்ல நிகழ்ச்சிகளை நடக்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் வளரும். மக்களின் கவலைகள் தீரப் போகிறது. ராணுவம் பலமுள்ளதாக மாறும். புதிய புதிய ஆயுதங்களும், படைகளும் பெருகும். பொருளாதாரம் உயரும். ஆத்மகாரகனான சூரியன் நக்ஷத்திரத்தில் புத்தாண்டு பிறப்பதால் ஆன்மா மாற்றும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். லோகமாகவும் லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருப்பவனுமாகிய சிவனின் புதல்வனுமாகிய ஸ்ரீசுப்பிரமணிய கார்த்திகேயனின் நக்ஷத்திரத்தில்  இந்த ஆண்டு பிறக்கிறது. முருகனின் அருள் கடாக்ஷம் வருடம் முழுவதும் மக்களுக்குக் கிடைக்கும்.

இந்த ஆண்டு நவநாயகர்கள்:
ராஜா - குரு, மந்திரி - சனி, அர்க்காதிபதி - சனி, மேகாதிபதி சனி, ஸஸ்யாதிபதி - செவ்வாய், சேனாதிபதி - சனி, ரஸாதிபதி - குரு, தான்யாதிபதி - சந்திரன், நீரஸாதிபதி - செவ்வாய், பசுநாயகர் - கோபாலர்.

ஜெகத் உலக ஜாதக விஷயம்:
புத்தாண்டு ஜென்ம நக்ஷத்ரம் - கிருத்திகை 4ம் பாதம், ரிஷப ராசி. ஜென்ம லக்னம் - தனுசு. வர்கோத்திர யோகம், சஷ்டாஷ்டக தோஷம், குரு சந்திர யோகம், கெஜகேசரி யோகம் ஆகியன. தேவதை - அக்னி. பஞ்சபக்ஷி - வல்லூறு. சங்கிராந்தி புருஷர் - கரஜீ, ஆண் யானை வாகனம். நல்ல மழை வருஷிக்கும். திசை இருப்பு: சூரியன் - 00 வருஷம் - 10 மாதம் - 11 நாட்கள் - சூர்ய திசை - செவ்வாய் புக்தி - புதன் அந்தரம் நடக்கிறது.

நவநாயகர் பாதசாரம்:
சூரியன் - அஸ்பதி - 1
சந்திரன் - கிருத்திகை - 4
செவ்வாய் - அசுபதி - 1
புதன் - உத்திரட்டாதி - 4
குரு - ரோகினி - 4
சுக்கிரன் - அசுபதி - 1
சனி - ஸ்வாதி - 2
ராகு - விசாகம் - 1
கேது - பரணி - 3


ஆதாய விரைய விபரங்கள்:
விரையம் - 56, ஆதாயம் - 53. ஆதாயத்தை விட விரையம் அதிகம். இதன் பலன்: அரசாங்கத்திற்கு வருவாய் குறைந்து பல புதிய வரிகளை விதிக்கும். விலைவாசி கடுமையாக உயரும். மக்கள் பாதிக்கப்படுவார்கள். மழை அதிகமாக வருஷிக்கும்.

பொது பலன்கள்:
பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமைஎழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும்.  விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும். கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் கடன் வாங்குவதும் மேலுள்ளவர்கள் கொடுத்து அதற்கேற்றார் போல் வட்டி வசூலித்தலும் நடைபெறும். இடி மின்னல் அதிகம். சூறாவளி காற்றுடன் அதிக மழை ஏற்படும்.  இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும். புராதன ஆலயங்கள் மற்றும் கட்டிடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதே வேலையில் புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். பல முக்கிய வழக்குகளுக்கு இந்த ஆண்டு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும். விமான போக்குவரத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். பூச்சி மற்றும் கொசுக்கள் பிரச்சனைகள் தீரும். அரபிக்கடலில் சத்தமும் நிலநடுக்கமும் உண்டாகும். ராக்ஷஸ அலைகள் உண்டாகும். மாலத்தீவு கடுமையாக பாதிக்கப்படும். இந்தோனேஷியா, ஜப்பான், இலங்கை, அந்தமான், ஒடிஸா, ஆந்திரா போன்ற ஊர்களுக்கு கடுமையான புயல் பாதிப்புகள் உண்டாகும். ராணுவம் தங்களது வியூகங்களை அடிக்கடி மாற்றும். அந்திய தேசத்திலிருந்து நமது நாட்டிற்கு  மறைமுக இன்னல்கள் வரும்.  வரும் ஆண்டில் வாகனம், கப்பல், விமானம், ரயில் போன்றவைகளில் விபத்துக்கள் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. குண்டுவெடிப்பு, அக்னி அபாயங்கள் ஏற்படலாம். இந்தியாவில் ஜாதி, மதம் வெறிச் சண்டைகள், கலகங்கள் ஏற்படலாம். தீவிரவாதங்களை ஒடுக்க, கட்டுபடுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு புதிய சட்ட திட்டங்களை உருவாக்கும். அரசுகளுக்குள் குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். தமிழகம் எதிர்பார்த்தபடி இவ்வாண்டில் மழை பொழியும். முக்கியமான வனப்பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்பட்டு மறையும். பசுமையான வனப்பகுதிகளாக மாறும். ராகு கேதுவால் நாட்டில் பக்தி பெருக்கமும் ஆலயங்களில் கூட்டம் அதிகரிப்பும் காணப்படும். ஆலய நிர்வாகம் வருமானப் பெருக்கத்திற்கான வழிமுறைகளை கொண்டு வரலாம். தியானம், யோகா, வேள்விகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். உணவு தானியங்கள், காய், கனிகளின் விலை உயர்வு கட்டுப்படுத்த முடியாதபடி இருக்கும். மண்ணென்ணைய், டீசல், பெட்ரோல், கேஸ், எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்ந்தாலும் தட்டுப்பாடு ஏற்படும். மக்களுக்கு இதற்கான தேவை அதிகரிக்கும். தங்கம் வெள்ளி விலை ஏற்றமடையும். விவசாயம் செழிக்கும். மகசூல்  அதிகரிக்கும். விவசாயிகளின் வாழ்வில் பிரகாசம் ஏற்படும். அரசியலில் உள்ளவர்களுக்கு இவ்வாண்டு சத்தியசோதனையாக அமையும். தொழிலதிபர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இடையே நல்லுறவும், சலுகைத் திட்டத்தால் பயன்களும் அடைவார்கள். கலைத்துறையினருக்கு புதுவருடம் சம்பாத்தியம், புகழ், பெருமை ஏற்படும். புதுமுகங்களின் வரவு அதிகமாகும். கலைத்துறையினர் சிலருக்கு அரசியலில் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி அதிகமாகவும், சாதனைகள் புரியவும் செய்வார்கள். நமது நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குச் சென்று அந்நிய செலாவனி அதிகமாகும். சனியுடன் ராகு இணைவதால் மத்திய அரசில் குழப்ப நிலைமையும் பல புதிய மாற்றம் ஏற்படுதலும் நிகழும். தவறு செய்தவர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவர். பொன் பொருள் பித்தளை போன்ற உலோகங்கள் விலை கடுமையாக உயரும். நாட்டின் பாதுகாப்பு உயர்த்த வேண்டி வரும். பாலைவனத்தில் உஷ்ணம் அதிகரிக்கும். கடல் அவ்வப்போது உள்வாங்குவதும் நீண்ட காலம் நிசப்தமாகவும் இருக்கும். பேப்பர், முடி, விவசாயம் சம்பந்தப்பட்ட பொருட்கள் பற்றாக்குறையாக இருக்கும். அயல்நாட்டு வியாபாரம் செழிக்கும். தென்மாநிலங்களில் அவ்வப்போது கலவரங்கள் வந்து வந்து செல்வதும், அதனை அரசு அடக்குதலும் நடக்கும். ஏரி குளம் அணைகள் போன்றவை நிரம்பி வழியும். கடுமையான உஷ்ணத்தால் மக்கள் பாதிக்கப்படுவர். யாத்ரீகர்களுக்கு மிகுந்த நற்காலமாக இருக்கும். புண்ணிய க்ஷேத்திரங்களில் கர்ம காரியங்கள் தொய்வின்றி நடைபெறும். வாசனை திரவியங்கள் அதிக அளவில் விற்பனையாகும். அறிவியல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் மைல்கல்லை எட்டும். புதிது புதிதாக மக்களுக்குப் பயன்படும் பொருட்களை வியாபாரிகள் அறிமுகம் செய்வார்கள். வீண் வதந்தி செய்வோர், மக்களுக்கு குந்தகம் விளைவிப்போர் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.

இந்த ஆண்டு ஏற்படும் முக்கிய கிரக பெயர்ச்சிகள்:
மே மாதம் 28ம் தேதி  வாக்கியப் பஞ்சாங்கப்படி - குரு பகவான் ரிஷபத்திலிருந்து மிதுனத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.
ஜூலை 6ம் தேதி - வாக்கியப் பஞ்சங்கப்படி - சனி பகவான் வக்கிரம் நிவர்த்தி ஆகிறார்.