Friday, April 19, 2013

திருவையாறு சப்த ஸ்தானம் 27-04-2013

திருவையாறு சப்த ஸ்தானம் 27-04-2013

நாம் ஒவ்வொருவரும் பரமனைத் தேடி காசி முதல் இராமேஸ்வரம் வரை இமயம் முதல் குமரி வரை எத்தனையோ இடங்களுக்கு பயணம் செய்கிறோம். ஆனால் தன்னையே நம்பி வந்த ஒரு பக்தனுக்காக பரமன் ஏழு ஊர்களுக்கு செய்த பயணத்தைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

அப்பர் பெருமானுக்கு கயிலைக் காட்சி கிடைத்து, "கண்டறியாதன கண்டேன்' என்று இறும்பூதி எய்திய தலம். காவிரியில் மூழ்கி ஐயாறப்பரை தரிசனம் செய்தால் காசி தரிசனத்தை விட புண்ணியம் அதிகம்.

இப்படி எத்தனையோ சிறப்புகள்கொண்ட ஊர் திருவையாறு. இங்கு ஐயாறப்பரை அனுதினமும் வழிபாடு செய்து வந்தார் சிலாதர் என்னும் முனிவர். ஆனாலும் அவருக்குப் பிள்ளைகள் இல்லை. ஐயாறப்பரை நோக்கி தவமிருக்க, ஈசனும் காட்சி தந்து "புத்திர காமேஷ்டி யாகம் செய்'' என்றார். யாகத்தின் பயனாய் முனிவருக்கு ஒரு பெட்டி கிடைத்தது. அந்தப் பெட்டியைத் திறக்க ஆயிரம் சூரியப் பிரகாசத்துடன் அற்புதமான ஒரு குழந்தை. அதற்கு செப்பேஸ்வரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் சிலாதர். ஆனாலும் அவனுக்கு ஆயுள் பதினாறுதான் என்பதை அறிந்து அதிர்ந்தார்.

ஆனால் செப்பேஸ்வரனோ "விதியை மதியால் வெல்கிறேன்' என்றபடி ஐயாறப்பர் சந்நிதி முன் உள்ள சூரிய புஷ்கரணியில் ஒற்றைக் காலில் நின்று பரமனை நினைத்து கடுந்தவம் புரிந்தான். அவனுடைய தவத்துக்கு இரங்கிய ஈசன் அம்பிகையுடன் காட்சி தந்தார். அவரிடம், 'பிறப்பு, இறப்பு இல்லா பெருவாழ்வு வேண்டும். கயிலையில் எப்போதும் தங்களுடன் இருக்க வேண்டும்'' என்று வரம் கேட்டான் செப்பேஸ்வரன். அவனுக்கு நந்திகேஸ்வரன் என்ற திருநாமம் சூட்டி சிவகணங்களுக்கு தலைவராக்கினார் ஈசன்.

கயிலையில் சிவத்தொண்டு புரிவதையே சிந்தனையாகக் கொண்டு நந்திதேவர் கவலையின்றிருந்தார். ஆனால் தன்னைத் தவிர வேறு சிந்தனை இல்லாது இருக்கும் நந்திதேவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற கவலை சிவனுக்கு ஏற்பட்டது. தன் வளர்ப்பு மகனுக்கு பெண் தேடி சிவபெருமான் உமையுடன் திருமழபாடி திருத்தலத்திற்கு வந்தார். அங்கிருந்த வசிஷ்ட முனிவரிடம் பேசி அவரது பேத்தியான சுயசாம்பிகையை திருநந்தி தேவருக்கு நிச்சயம் செய்தார். திருவையாற்றைச் சுற்றியுள்ள ஆறு ஊர்களில் இருந்து திருமணத்திற்குத் தேவையான பொருட்கள் திருமழபாடியில் குவிந்தன. ஒரு பங்குனி மாதம்,புனர்பூச நட்சத்திரத்தில் நந்தி தேவருக்கும், சுயசாம்பிகைக்கும் திருமணம் நடைபெற்றது. இதன்பின் திருமணத்திற்கு உதவி செய்த ஆறு ஊர் இறைவர்களுக்கும் நன்றி செலுத்தவும், திருநந்தி தேவரை மற்ற ஊர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கவும் ஏற்பாடானது.

சித்திரை மாதம் முழு நிலவின் மறுநாள் ஐயாறப்பரும், அறம்வளர்த்த நாயகியும் பெரிய பல்லக்கிலும், புதுமணத் தம்பதிகளான நந்தியெம்பெருமாளும், சுயசாம்பிகையும் வெட்டிவேர் பல்லக்கிலும், திருவையாற்றில் இருந்து புறப்படுகிறார்கள். அன்று காலை கிழக்கு கோபுர வாசலில் நிகழும் இந்நிகழ்வுக்கு கோபுர தரிசனம் என்று பெயர். இதற்கு ஆயிரக் கணக்காண பக்தர்கள் கூடுவார்கள். காலை 6 மணிக்கு புறப்படும் பல்லக்கு திருப்பழனம் வந்து சேரும். ஒவ்வொரு ஊரிலும் அந்த ஊர்ப்பெருமானும், பெருமாட்டியும் இவர்களை எதிர்கொண்டழைத்து மரியாதை செய்து தங்கள் ஊர் பல்லக்கில் அடுத்த ஊருக்கு கூடவே செல்கிறார்கள்.

அதன்படி வருகிற 27.4.2013 காலை 6 மணிக்கு திருவையாறு கிழக்கு கோபுர வாசலில் இருந்து ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியின் பெரிய பல்லக்கும், நந்திதேவர்- சுயசாம்பிகையின் வெட்டிவேர் பல்லக்கும் புறப்படும்.

இரண்டு பல்லக்குகளும் மதியம் திருப்பழனம் (சுமார் 4 கி.மீ.) வந்து சேரும். திருப்பழனத்தில் இருந்து புறப்பட்டு மூன்று பல்லக்குகள் திருச்சோற்றுத்துறை (சுமார் 4 கி.மீ.) வந்து சேரும். திருச்சோற்றுத்துறையில் இருந்து 4 பல்லக்குகள் புறப்பட்டு திருவேதிக்குடி (சுமார் 4 கி.மீ.) வந்தடையும். திருச்சோற்றுத்துறை பல்லக்குடன் சேர்ந்து 5 பல்லக்குகள் திருக்கண்டியூர் (சுமார் 5 கி.மீ.) அடையும். அங்கிருந்து 6 பல்லக்குகள் புறப்பட்டு திருப்பூந்துருத்தி (சுமார் 3 கி.மீ.) அடையும். திருப்பூந்துருத்தியில் இருந்து 7 பல்லக்குகள் புறப்பட்டு இரவில் தில்லைஸ்தானம் (சுமார் 4 கி.மீ.) காவிரி ஆற்றை அடையும்.

இரவு தில்லைஸ்தானம் பல்லக்கு உட்பட 8 பல்லக்குகள் காவிரி ஆற்றங்கரையோரம் முகாம் இடும். மறுநாள் 28.4.2013 அன்று காலை முதல் ஒவ்வொரு பல்லக்காக புறப்பட்டு திருவையாறு (சுமார் 3 கி.மீ.) தேரடித் திடலை அடையும். அன்று மாலை தேரடித் திடலில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்த பிறகு பல்லக்குகள் திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் சிரம பரிகாரம் செய்துகொண்டு ஒவ்வொன்றாக சொந்த ஊர் திரும்பும்.

சிறந்த ராம பக்தராகிய தியாகராஜ சுவாமிகளும், புகழ் வாய்ந்த கர்நாடக சங்கீத வித்வானாகிய மகா வைத்தியநாத ஐயரும், தமிழ்க் களஞ்சியமாக விளங்கிய டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரும், இன்னும் பல அறிஞர் பெருமக்களும் ஏழூர் வலம் வந்த பெரியவர்கள். அவர்கள் பெற்ற பிறவிப் பயனை நாமும் பெறலாமன்றோ!

No comments: