Tuesday, April 9, 2013

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 05 - மிதுன ராசி பலன்கள்

மிதுனம்:

எதிலும் நிதானத்தைக் கடைபிடித்து காரியங்களை கரை சேர்க்கும் மிதுன ராசி வாசகளே நீங்கள் எதிலும் உங்கள் அறிவை வெளிக்காட்டுபவர். உங்களுடைய சாதுர்யத்தால் காரியங்களை சாத்த்துக் கொள்வீர்கள். இன்முகம் காட்டாது அனைவரையும் அனுசரித்து செல்வீர்கள். உங்களுடைய தாய்மாமனுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுப்பீர்கள்.


எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:
கிரகநிலை:

இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சனி ராகுவும், லாபஸ்தானத்தில் கேதுவும், விரையஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு குரு மே மாதம் 28-ம் மாறுகிறார்.

இனி பலன்களைப் பார்க்கலாம்.

அனைவரையும் பார்த்தவுடன் உங்களது முக வசீகரத்தால் கவர்ந்திழுக்கும் உங்களின் செயல்களில் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தால் புதிய கோட்பாடுகளை உருவாக்கிக்கொள்வீர்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் நண்பர்களை இனம் கண்டு விலக்குவீர்கள். பொதுநலத் தொண்டுகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வீர்கள். குடும்பத்தில் ஏற்படும் பிரச்னைகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். சகோதர, சகோதரிகள் ஒத்துழைப்புடன் நடந்துகொள்வார்கள். உங்கள் விருப்பங்களும், தேவைகளும் பூர்த்தியாகும். முக்கியமான விஷயங்களில் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள், அறிவுரைகளைக் கேட்டு முடிவெடுப்பீர்கள். நண்பர்களுக்கும், கூட்டாளிகளுக்கும் உங்களால் இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களின் தவறுகளை உடனடியாகச் சுட்டிக்காட்டி திருத்துவீர்கள். சுதந்திரமாகப் பணியாற்றி வெற்றிவாகை சூடுவீர்கள். புதிய பதவிகளும் பொறுப்புகளும் உங்களைத் தேடி வரும். கடுமையாக உழைத்து பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள். முடங்கிய செயல்களை மீண்டும் செய்ய முனைவீர்கள். முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுவீர்கள். அயல்நாடு சம்பந்தமான செயல்களிலும் ஈடுபடுவீர்கள். ஷேர் துறைகளின் மூலம் நல்ல ஆதாயத்தைக் காண்பீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றை கற்பீர்கள். இறை வழிபாட்டிலும், ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். ஆனாலும் குறுக்கு வழியில் எந்தச் செயலையும் செய்யாமல் நேர் வழியில் சிந்தித்து செயல்படவும். அவசரத்தில் தவறான செயல்களில் ஈடுபட்டு வருத்தப்பட நேரிடலாம். உடல் ஆரோக்யம் ஓரளவு சீராக இருந்தாலும் அவ்வப்போது வயிறு சம்பந்தமான கோளாறுகளுக்கு ஆட்பட நேரிடலாம். மேலும் சிலருக்கு பித்தப்பை தொடர்பாக மருத்துவச் செலவுகளும் ஏற்படும். உங்களின் பேச்சினால் பகையை சந்திக்க நேரிடும். கணக்கு வழக்குகளில் சிறு சிக்கல்கள் தோன்றும். இதனால் அரசாங்க விஷயங்களில் எச்சரிக்கையுடனும், கவனத்துடன் இருக்கவும். மற்றபடி குடும்பத்தில் சுமுகமான பாகப்பிரிவினை ஏற்பட்டு வருமானம் வரத் தொடங்கும். உத்யோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். கடுமையாக உழைத்து செயல்களில் வெற்றிபெற்று நற்பெயர் வாங்குவீர்கள். மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். உங்களுக்கு தொல்லை கொடுத்த சக ஊழியர்கள் பகைமை மறந்து நட்புடன் பழகுவார்கள். அலுவலகம் சம்பந்தமான பயணங்களால் நன்மைகளைக் காண்பீர்கள். உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு லாபகரமாகவே அமைகிறது. பொருட்களின் விற்பனை நன்றாகவே நடக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாண்டால் மேலும் வருமானத்தை அள்ளலாம். மற்றபடி கூட்டாளிகளிடம் உங்கள் திட்டங்களையும் எண்ணங்களையும் அவசியமில்லாமல் பகிர்ந்துகொள்ள வேண்டாம். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். ஓய்வின்றி உழைப்பீர்கள். ஆனாலும் உங்களின் குத்தகை பாக்கிகளை சற்று கூடுதல் முயற்சியின் பேரில் செலுத்த வேண்டி வரும். அதனால் வருமானத்தைப் பெருக்க மாற்றுப் பயிர்களைப் பயிரிடவும். கால்நடைகளை நல்ல முறையில் பராமரித்து அவைகளுக்கு பெரிதாக செலவு செய்வதைத் தவிர்க்கவும். வங்கிகளிடமிருந்து தேவையான கடன் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். யோசித்து எடுக்கும் முடிவுகள் அனைத்தும் சாதகமாக அமையும். உங்களின் புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தின் கவனத்தை ஈர்ப்பீர்கள். மற்றபடி புதிய பொறுப்புகளை கவனத்துடன் கையாளவும். கட்சியில் எவரிடமும் எதிர்ப்பைக் காட்ட வேண்டாம். கலைத்துறையினரின் புகழும், செல்வாக்கும் உயரும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்கும். உங்களின் முயற்சியும், உழைப்பும் வெற்றியைத் தேடித்தரும். மனதை அரித்துக்கொண்டிருந்த ஒரு விஷயத்தில் முக்கியமான முடிவை எடுப்பீர்கள். உங்களின் நிதானமான போக்கு பெரிய முன்னேற்றத்திற்கு வழியைத் தேடித் தரும். புதிய வாய்ப்புகள் நல்ல வருமானத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நீடிக்கும். குடும்பத்தினரிடம் உங்கள் மதிப்பு உயரும். விருந்து, கேளிக்கைகளுக்கு செழிப்பாகச் சென்று வருவீர்கள். சிலர் புதிய வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்வார்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களை அள்ளுவீர்கள். மேற்படிப்புக்கான முயற்சிகள் எதிர்பார்த்த வெற்றியைத் தேடித் தரும். சிலர் மாலை நேரங்களில் தங்கள் படிப்புக்குச் சம்பந்தமில்லாத வேறு படிப்பைப் படித்து தங்கள் நிலையை உயர்த்திக்கொள்வார்கள்.


பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயங்களுக்கு செல்லுங்கள், முடிந்தவர்கள் திவ்ய தேசங்களுக்கும் செல்லலாம்
செல்வங்கள் குவியும்


சொல்லவேண்டிய மந்திரங்கள் : ஓம் ஹரி ப்ரும்ஹ வாசினே நமஹ - என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும்


மலர் பரிகாரம் : தாமரை மலரை அருகிலிருக்கும் பெருமாளுக்கு அர்பணியுங்கள், அவர் எல்லாவற்றையும் சீராக நடத்திவைப்பார்

No comments: