Wednesday, April 24, 2013

மந்திர மாவது நீறு - தொடர் - பாகம் 1

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.


பொழிப்புரை
சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.

குறிப்புரை
திருநீறு மந்திரம் போல நினைத்ததைக் கொடுக்கும். நினைத்தவரைக் காக்கும். வானவர் - சிவலோகத்திலுள்ளவர். சிவமானவர். மேலது - திருமேனியில் பூசப்பட்டது. சுந்தரம் - அழகு; சிவப்பொலிவு. துதிக்கப்படுவது என்பதற்கு இத்திருப்பதிகமே சான்று. தந்திரம் - ஆகமம். சிவாகமத்தில் சிறப்பாகச் சொல்லப்படுவது. சமயத்திலுள்ளது - சிவசமயத்தில் அழியாத பொருளாவது பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள். பாசம் - பசுவின் கண் இருந்து பதியால் நீறாக்கப்பட்ட உண்மையை உணர்த்துவது. உள்ளது - சிவம். `ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின்` - ( திருக்குறள்) திருநீறே சிவம். துவர் - பவளம். பங்கன் - பாகன். திரு ஆலவாயான் - மதுரைத்தலத்தில் திருவாலவாய்க்கோயிலுள் எழுந்தருளியிருப்பவன். திருவாலவாயான் திருநீறு என்பது ஆறன்தொகையாதல் அறிவார்க்குத் திருநீறே சிவகதி தரும் என்னும் உண்மை இனிது புலப்படும். `கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை... பூசி மகிழ்வாரே யாமாகில்... சாரும் சிவகதி...` (திருமந்திரம்)

No comments: