Friday, April 19, 2013

ராஜாங்கபுரம் கும்பாபிஷேகம்

வயல்கள் சூழ்ந்த கிராமம். எந்த விதமான மாசு மருவின்றி காற்று. மக்களும்தான். அவரவர்கள் தங்களது சொந்த ஊரை விட்டு அயலூர்களில் இருந்தாலும் திருவிழா, கொடை விழா, கும்பாபிஷேகம் போன்ற விழாக்களை விட்டுக் கொடுக்காமல் வந்து நடத்திக் கொடுப்பது. இது தமிழக மண்ணில் கிராமங்களில் நாம் காணும் காட்சிகள்.

நாம் மேலே குறிப்பிட்டது மிக சமீபத்தில் நடந்த ராஜாங்கபுரம் கும்பாபிஷேகம் பற்றியதாகும். ராஜாங்கபுரம், மிக அழகிய மற்றும் பசுமையான ஊர். திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் தெந்திருப்பேரைக்கு அடுத்து அமைந்துள்ளது. தாமிரபரணி ஆற்றிலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இடம்.

பசுமையான ராஜாங்கபுரம் கிராமம்


அங்கிருக்கும் அம்மன் கோவிலுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் எங்கள் குடும்பம்தான் கும்பாபிஷேக வைபவங்களை நடத்தி வைத்தது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த 15ம் திகதி ஸ்ரீமுத்தாரம்மன், ஸ்ரீசந்தண மாரியம்மன் தேவிகளுக்கு அஷ்டபந்தன நூதன ராஜகோபுர கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டியது. கிட்டத்தட்ட இரண்டு மாத ஓய்விற்குப் பின் நாங்கள் கலந்து கொண்ட முதல் வைபவம் இதுதான்.

எங்களுடைய சித்தப்பா அம்மன் அருள் ஸ்ரீகுருநாத ஜோஸ்யரவர்கள் மற்றும் இன்னொரு சித்தப்பா ஆன்மீகச்செம்மல் ஸ்ரீசுந்தராஜ அடிகளார் இணைந்து இந்த வைபவத்தை நடத்தினர். இதில் நாங்களும் கலந்து கொண்டது பாக்கியமே.

அம்மன் அருள் ஸ்ரீகுருநாதன் ஜோஸ்யர்




 13ம் திகதி இரவு - எங்களுடைய பயணம் தொடந்தது. இரவு சாப்பாட்டிற்குப் பின் நாங்கள் கோவிலுக்கு 10 மணிக்கு சென்றடைந்தோம்.

14ம் திகதி காலை 4.30 to 7 - எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்க ஸ்ரீமஹாகணபதி ஹோமம் நடந்தது.


மஹாகணபதி ஹோமம் ஆரம்பிக்கும் முன்

அக்னி ஸ்தாபனம் செய்யும் முன்


ஹோமம் நடைபெறும் போது


14ம் திகதி காலை 8.30 - 2.00 - வாஸ்து பூஜை, பலி, யஜமான வர்ணம், கும்பத்தில் தீர்த்தம் எடுத்தல்,  யாகசாலைப் பிரவேசம், ஆவாஹணம், அக்னி முகம், முதலாம் கால யாகசாலை பூஜை, முதலாம் கால பூர்ணாகுதி ஆகியவை நடந்தது.

வாஸ்து பூஜைக்காக ஸ்ரீகுருநாத ஜோஸ்யருடன் நாங்கள்
வாஸ்து பலி பூஜைக்கான பாணி பூஜை செய்யப்படுகிறது
கோபூஜை


14ம் திகதி மாலை 5.00 - 9.00 - காப்பு கட்டல், இரண்டாம் கால யாகசாலை பூஜை, அர்ச்சனை, சிறப்பு வேத கோஷம், திருமுறை பாராயணம், இரண்டாம் கால பூர்ணாகுதி நடந்தது.

ஸ்ரீசுடலையாண்டி அவர்களுக்கு காப்பு கட்டப்படுகிறது
அனைவரையும் தனது குரலால் வசியப்படுத்திய சிவனடியார் இலங்கேஸ்வரன்




14ம் திகதி இரவு 9.30க்கு மேல் - யந்திர ஸ்தாபணம், பிராண பிரதிஷ்டை ஆகியவை நல்லபடியாக முடிந்தது.


யந்திர ஸ்தாபனம் செய்யும் போது


15ம் திகதி காலை 4.30 - 7.30 - மூன்றாம் கால யாகசாலை பூஜை, அர்ச்சனை, சிறப்பு வேத கோஷம், திருமுறை பாராயணம், மூன்றாம் கால பூர்ணாகுதி, நாடிசந்தானம், தேவதைகளுக்கு உயிர் கொடுத்தல், பிரசன்னம் பார்த்தல் ஆகியன நடந்தது.


நாடி சந்தாணம் முடிந்தபின் பிரசன்னம் பார்க்கப்படுகிறது. மூன்று முறை பார்க்க வைத்த ஸ்ரீசிவனனைந்த பெருமாள் முன் எடுக்கப்பட்ட படம்

குடம் புறப்படுதல்


ஸ்ரீகன்னி விநாயகருக்கும் கும்பாபிஷேகம் ஆகிறது



 15ம் திகதி காலை 9.05க்கு - கும்பம் எடுத்தல் நடந்தது. கும்பாபிஷேகம் சரியாக 10.03க்கு அம்பாளின் அருட்கொடையால் மிக நல்லபடியாக நடந்தது. ஸ்ரீகன்னி மூல கணபதி, ஸ்ரீநாராயணஸ்வாமி, ஸ்ரீமுத்தாரம்மன், ஸ்ரீசந்தணமாரியம்மன் ராஜகோபுரம், ஸ்ரீசிவனனைந்த பெருமாள், ஸ்ரீமாவடி சுடலை ஸ்வாமி ஆகியோருக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

மஹாஅபிஷேகம் சரியாக 11.15க்கு நடந்து மஹாதீபாராதனை சரியாக 12.20க்கு காண்பிக்கப்பட்டது. பின் பிரசாதம் வழங்கப்பட்டது.

குறிப்புகள்:

[1] அங்கிருக்கும் கிராம மக்களில் பலர் வெளியூரில் இருந்தாலும் அனைவரும் தவறாது கலந்து கொண்டனர்.

[2] புதிதாக அமைந்திருக்கும் ராஜகோபுரம் மக்களின் மனது போன்றே மிக அருமையாக அமைந்துள்ளதை நாம் காணலாம்.








[3] ராஜகோபுரத்தில் இருக்கும் சிலைகளானாலும் சரி, வரைந்திருக்கும் ஓவியமானாலும் சரி அனைத்தும் மிக அருமை. ஸ்ரீவில்லிபுத்தூர் சிற்பிக்கு எங்களின் பாராட்டுக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள்.
[4] ஊர் மக்களின் ஒத்துழைப்பு நன்றாக இருந்தது.
[5] குரும்பூர் நாதஸ்வர கோஷ்டியினர், ஸ்ரீவைகுண்டம் பாணிக்காரர்கள், நாகர்கோவில் ஜண்டை மேளம் குழுவினரின் பங்கும் அதிகம்.







[6] அனைத்து தேவைதைகளுக்கும் பிரசன்னம் ஒரே முறையில் வர ஸ்ரீசிவனனைந்த பெருமாளுக்கு மட்டும் மூன்று முறை பார்க்க வேண்டி வந்தது.







[7] கும்பாபிஷேகம் நடக்கும் போது 2 கருடர்கள் வட்டம் போட கூட்டம் ஆர்ப்பரித்தது.
[8] அம்பாளுக்கு நைவேத்யம் படைப்பதற்காகவே நாகர்கோவில் ஆசீரமம் கிராமத்திலிருந்து ஸ்ரீநாகராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழு வந்திருந்து சிறப்பித்திருந்தார்கள்.


தோளில் துண்டு போட்டிருப்பவர் நாகராஜன் அவர்கள். அவருக்கு வல்லப்புறம் இருப்பவர் தர்மராஜன், இடப்புறம் முறையே ஆன்மீகச்செம்மல் ஸ்ரீசுந்தராஜ அடிகளார், ஸ்ரீபரமேஸ்வரன் அவர்கள்




[9] மொத்தம் ஐந்து ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. 116 கும்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒரே நேரத்தில் 5 வேத வி்ற்பன்னர்களால் பூர்ணாகுதி செய்யப்பட்டது. ஸ்ரீகுருநாதன் ஜோஸ்யர், ஸ்ரீசுந்தராஜ அடிகளார், பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர், ஸ்ரீரெங்கராஜ கோபால ஸ்வாமிகள் மற்றும் ஸ்ரீதர்மராஜ அய்யர் ஆகியோர்களால் பூர்ணாகுதி நடத்தப்பெற்றது. ஸ்ரீசுடலையாண்டி, ஸ்ரீராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீமாரியப்பன் ஆகியோர்கள் இரண்டு நாட்களாக எங்களுக்கு உடன் இருந்து உதவிகள் செய்தார்கள்.








[10] நவகைலாய குருஸ்தலம் முறப்பநாட்டிலிருந்து வந்திருந்த சிவனடியார் சிவன் இலங்கேஸ்வரன் இரண்டு நாட்களாக திருமுறைகளை பாடிய விதம் காண்போரையும், கேட்டோரையும் மகிழ்வித்தது.
[11] பூக்கள் மொத்தமாக வாங்கப்பட்டு கோவிலில் வைத்து ஆட்களால் கட்டப்பட்டது. வவுச்சர் என்று சொல்லப்படும் மிகப் பெரிய மாலை பிரமிக்கதக்க வகையில் இருந்தது.
[12] சிலைகள் அனைத்தும் மிக அருமையாக இருந்தது.
[13] அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்ட விதம் மிகவும் நன்றாக இருந்தது.






[14] மஹாஅபிஷேகம் நடைபெறும் நேரத்தில் ஆன்மீகச் செம்மல் ஸ்ரீசுந்தராஜ அடிகளார் ஆற்றிய குலதெய்வத்தின் பெருமை தலைப்பிலான உரை நிகழ்ந்தது. அது முடிந்தவுடன் நாங்கள் விஜய வருட புத்தாண்டு பலன்கள் உரை நிகழ்த்தினோம்.

ஆன்மீகச் செம்மலுடன்(வலதுபுறம் இருப்பவர்) ஸ்ரீரெங்கராஜ ஸ்வாமி


[15] எல்லாவற்றையும் விட கும்பாபிஷேகம் முடிந்த உடன் வந்த மழை அந்த அம்பாளே நேரடியாக வந்து அருளியது போல் இருந்தது என்றால் மிகையில்லை.

மேலும் படங்களுக்கு இங்கே சுட்டவும்

No comments: