Sunday, December 13, 2015

மீண்டு(ம்) வா சென்னையே.

அன்பின் சொந்தங்களுக்கு வணக்கம். இது பெரிய கட்டுரை. நிதானமாக படிக்கவும்.

இங்கு நாம் பார்க்கப் போவது 22 வருட காலகட்டம் - இது ஒரு ஆய்வு. ஜோதிடம் - ஆன்மீகம் - இந்து மதம் சார்ந்த நம்பிக்கை உடையவர்கள் - ஆர்வமுள்ளவர்கள் ஆகியோருக்கு மட்டும் இந்த கட்டுரை. மீதியுள்ளவர்கள் படிக்க வேண்டாம்.

அனைத்து விதமான வதந்திகளையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடும் நேரமிது. ஜோதிடமும் பொய் - ஜோதிடர்களை நம்பாதீர்கள் என வழக்கம் போல் தன்னால் முடிந்த பிரச்சாரம் செய்யும் சிலர். அமாவாசையையும் பௌர்ணமியையும் எப்படி ஜோதிடர்கள் பஞ்சாங்கத்தில் கணக்கிடுகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. வானவியலையும் - மனிதருக்கு ஜோதிட பலன்கள் சொல்லும் ஜோதிடர்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள். 2004ம் ஆண்டு மன்மோகன் சிங் அவர்கள் இந்தியாவின் பிரதமரான பின் இதே போன்று தான் ஆரம்பித்தார்கள். இன்னும் 25 வருடத்திற்கு டர்பன் கட்டியவர்தான் இந்தியாவின் பிரதமர் என நாஸ்டர்டாமஸ் சொல்லி விட்டார். மேலும் 2011ல் இளம் பெண் தலைவர் பாரதத்தை ஆள்வார் என்றும் சொல்லியிருந்தார் என சொல்லப்பட்டது. நாஸ்டர்டாமஸ் ஜோதிடர்களுக்கு முன்னோடி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர் பெயரை எதற்கெடுத்தாலும் பயன்படுத்தி புரளிகளை கிளப்பி விடுவது அவரை அவமானபடுத்தும் செயலாகவே நான் பார்க்கிறேன்.

இங்கு ஜோதிடம் - வானவியல் இயற்கை சார்ந்தே உள்ளது. நமது முன்னோர்கள் ராசிகளை பிரிக்கும் போது பஞ்ச பூதங்களையும் அதனுடன் சேர்த்தே இணைத்தனர். ஒவ்வொரு ராசியும் ஒரு பஞ்ச பூதத்தை பிரதிபலிக்கும். இதில் கடகம் - விருச்சிகம் - மீனம் ஆகிய ராசிகள் நீர் ராசிகளாகும். கடகம் என்பது நண்டையும் - விருச்சிகம் என்பது தேளையும் - மீனம் என்பது மீன்களையும் குறிக்கும். மேற்சொன்ன ஜீவராசிகள் தண்ணீர் இருக்கும் இடம் சார்ந்தவைகளாகும்.

நவக்கிரகங்களில் சனி ஆயுள் - தொழில் - கர்மா - இடர் - அழிவு ஆகியவற்றைக் குறிக்கும் கிரகமாகும். இங்கு நாம் சனியை ஒரு தெய்வமாக பார்க்கப் போவதில்லை.

சனியை வைத்தே ஒரு தனி மனிதனுடைய தலைவிதியை சொல்வது போலே நாட்டிற்கும் சொல்வதற்கு நமது பெரியோர்கள் வழி காட்டியிருக்கின்றனர். இந்த சனி கிரகமானது ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்யும் போதும் ஒரு விதமான அழிவை ஏற்படுத்துவார். அழிவு என்பது சனி கிரகத்தினால் மட்டும் ஏற்படும் நிகழ்வல்ல. சனி கிரகம் மட்டுமல்லாது ஒவ்வொரு கிரகம் ராசியில் சஞ்சாரம் செய்யும் போதும் ஒரு விதமான நிகழ்வுகள் இருக்கும். உதாரணமாக தற்போது இருக்கும் கிரக சூழலில் சந்திரன் - துலாம் மற்றும் விருச்சிக ராசிகளில் சஞ்சரிக்கும் போது பங்கு சந்தைகளில் மாற்றத்தைக் காண முடியும்.

சரி விஷயத்திற்கு வருவோம். மேற்சொன்ன மூன்று ராசிகளில் சனி சஞ்சாரம் செய்யும் போது அதாவது நீர் ராசிகளில் சஞ்சாரம் செய்யும் போது உலகத்தில் இடர்பாடு என்பது நீர் சம்பந்தமாக இருக்கும்.


 நான் கொடுத்திருக்கும் மூன்று படங்களையும் பாருங்கள். அதில் முதலில் கொடுத்திருக்கும் படம் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25ம் திகதிக்கானது. அன்றைய தினம் சனி நீர் ராசியான கடகத்தில் சஞ்சரிக்க நீர் கிரகமான சந்திரன் ரிஷபத்தில் உச்சத்தில் இருக்கிறார். அன்றைய தினம் சுனாமி ஏற்பட்டது. அடுத்த படம் கடந்த டிசம்பர் - 2ம் திகதிக்கானது. அன்றைய தினம் சனி நீர் ராசியான விருச்சிகத்தில் சஞ்சரிக்க சந்திரன் ஆட்சியாக இருக்கிறார். அதே நாளில் தான் சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகமெங்கும் வெள்ளம் ஏற்பட்டது. மூன்றாம் படத்தைப் பாருங்கள். அடுத்து 2026ல் நவம்பர் 30ம் நாளுக்குரியதாகும். அன்றைய தினமும் நாம் நீர் சார்ந்த பிரச்சனைகளை - இடர்பாடுகளை சந்திக்க நேரிடலாம். நான் சொன்ன மூன்று நாட்களுமே சனி நீர் ராசியிலும் சந்திரன் பலமாகவும் இருப்பதை கவனத்தில் கொள்ளவும். அப்படீன்னா அமேரிக்கா ஐரோப்பா நாடுகளுக்குமா என என்னிடம் எதிர் கேள்வி கேட்கக்கூடாது. நான் கணித்துக் கொடுத்திருப்பது நமது தேசம் சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே.

இப்போது விஷயத்திற்கு வரலாம்.

இதற்குப் பின் கட்டாயமாக இனி வரும் நாட்களில் பெரு மழையோ (அ) புயலோ (அ) நீண்ட நாட்களுக்கான மழையோ வராது வராது வராது.

எதற்கெடுத்தாலும் நம்மில் சிலர் நாசாவைக் கைகாட்டி விடுவார்கள். நாசா என்பது வானிலை ஆய்வு செய்யும் நிறுவனமல்ல என்பது அவர்களுக்குத் தெரியுமா? அந்த நபர்கள் சொல்வது எல்லாம் ”வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்” என்பதை நம்பும் பதர்களாக இருப்பார்கள். மேலும் சில ஜோதிடர்கள் ஜனவரி 26ம் திகதி வரை சென்னை பாதிக்கப்படலாம் என்றெல்லாம் சொல்வது எதை வைத்து என்று தெரியவில்லை.

ஆனிச் சாரல் - ஆடி ரெட்டைச் சாரல் - ஆவணி முச்சாரல் - புரட்டாசி மழை - ஐப்பசி அடைமழை - கார்த்திகை மழை - மார்கழி பனி என்பதுதான் தமிழ்  ஜோதிட சாஸ்திர விதி. இப்போது சொல்லும் இவர்களெல்லாம் இந்த பிரளயத்திற்கு முன் எங்கு சென்றார்கள். இப்போது நாம் செய்து கொண்டிருப்பது போஸ்ட்மார்ட்டம் மட்டுமே. நடந்து போன விஷயத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். மனிதனுக்கு சொல்லும் பலன்களிலேயே 100% எந்த ஜோதிடரும் சொல்லமுடியாத ஒரு சூழ்நிலையில் நாட்டிற்கு இவர்கள் கணிக்கும் கெணிதம் எப்படி சரியாக வரும்? எந்த ஒரு தனி மனித ஜோதிடரும் ஜோதிடத்திற்கான அடையாளமில்லை. ஒரு குறியீடு அவ்வளவே. (No one Person is representative for Astrology). ஜோதிடரை பேட்டி எடுப்பவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஜோதிடர்களை வைத்து கலந்துரையாடுவதே சிறந்தது. (குறிப்பு: நான் யார் மீதும் தனி மனித தாக்குதல் நடத்தவில்லை). காந்தப் புயல் வீசும் - சென்னைக்குள் கடல் வந்து விடும் - காஞ்சிபுரம்தான் சென்னைக் கடல் எல்லை - வரும் 15, 16, 17ம் திகதிகளில் புயல் வீசும் - சென்னையில் பாதி நகரம் இருக்காது என்பது அனைத்தும் புரளி - வதந்தி.

யாரும் நம்ப வேண்டாம். யாரும் நம்ப வேண்டாம். யாரும் நம்ப வேண்டாம்.

எல்லாவற்றிக்கும் மேல் இப்போது ஏற்பட்டிருக்கும் இடருக்கு கிரகங்களை நாம் காரணம் காட்ட இயலாது. நமக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களுக்கு நாம் நாம் நாம் மட்டுமே காரணம். நாம் என்பது மக்களையும் - அரசாங்கத்தையும் குறிக்கும். இனியாவது நம்மை நாமே நல்ல முறையில் பார்த்துக் கொள்வோம்.

இந்த வேளையில் நமது மக்களுக்கு நிவாரண உதவிகள் சார்ந்த பணிகளைச் செய்த அனைத்து சொந்தங்களுக்கு எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

காலையில் 2 மணிக்கு பால் விநியோகம் - 3 மணிக்கு பேப்பர் மடிக்கும் பணி - 4 மணிக்கு பஸ் ஆரம்பம் - 5 மணிக்கு கடைகள் திறப்பு, வாக்கிங் - 6 மணிக்கு சென்னைக்குள் வெளியூர் ரயில்கள் வருகை - 7 மணிக்கு அனைத்து பள்ளிகளும் திறக்க - 8 முதல் 10 மணி வரை பிஸியில் அலுவலகம் செல்ல - அனைத்து மனிதர்களும் உழைக்க ஆரம்பிக்க - 1 - 3 மணியில் மதிய உணவை சாப்பிட்டு மீண்டும் உழைக்க ஆரம்பிக்க - மாலை வேளையில் அரக்க பறக்க வீட்டிற்கு வந்து சேர - இரவு சாப்பிட்டு நல்லபடியாக நித்திரை கொள்ள என இப்போது கொஞ்ச கொஞ்சமாக சென்னை மீண்டு வர ஆரம்பித்திருக்கிறது. இப்போது சென்னையில் இருக்கும் அனைத்து சொந்தங்களுக்கும் இந்த வெள்ளம் பற்றிய ஒவ்வொரு சம்பவம் இருக்கும்.

மீண்டு(ம்) வா சென்னையே.

நன்றி - வணக்கம்.

Saturday, October 24, 2015

சமீபத்தில் சென்னையில் பார்த்த தேவபிரஸ்ணம்ஸ்வாமி வாராகிபாதர் மற்றும் கும்பகோணம் சக்ரபாணி பட்டாச்சாரியாருடன்.

Wednesday, October 7, 2015

கிரகங்களின் பலமும் அதற்குண்டான பலனும் - பாகம் 1

கிரகங்களின் பலமும் அதற்குண்டான பலனும்


நமது ஜாதகத்தில் நவக்கிரகங்களில் எந்த கிரகம் பலம் பெற்றுள்ளது என்பதைக் கவனித்து அப்படி பலம் பெற்ற கிரகத்தை ஒட்டி அவரவரின் வாழ்வில் ஏற்படும் பலன்களை யூகித்து தெரிந்து கொள்ள முடியும்.

Friday, April 10, 2015

பஞ்சாங்க படணம்

பொதுவாக தமிழர்களிடம் உள்ள பழக்கம்.

தமிழ் புத்தாண்டு அன்று காலையில் ஊர் பொது கோவிலுக்கு செல்வார்கள். கோவிலில் மக்கள் கூட்டத்தில் நடுவில் அமர்ந்து அந்த ஊருக்குரிய ஜோதிடர் (ஸ்தல ஜோதிடர்) அந்த வருட பஞ்சாங்கத்தில் உள்ள முக்கியமான விஷயங்களை சத்தமாக வாசிப்பார். குழுமியிருக்கிற மக்கள் தங்களுக்குரிய சந்தேகங்களை கேட்க அவற்றை ஜோதிடர் நிவர்த்தி செய்து வைப்பார். உதாரணமாக இவ்வருடம் மழை எப்படி இருக்கும், எந்த வகையான பயிர்களை பயிர் செய்யலாம், கால்நடைகள் ஜீவராசிகள் எவ்வாறு இருக்கும் போன்ற கேள்விகள். 

இந்த நிகழ்ச்சிக்குப் பெயர் பஞ்சாங்க படணம். 

இந்த நிகழ்ச்சி எமது பாட்டனார் காலத்தில் நடந்து வந்திருக்கிறது. 1960 வருடத்திற்குப் பிறகு இந்நிகழ்ச்சி ஒரு சம்பிரதாயமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது அவ்வளவே. ஆனால் எனது குருநாதர் பிரும்மஸ்ரீ இளைய குப்பு ஜோஸ்யர் பெருங்குளம் வெங்கடாசல ஜோஸ்யர் இருக்கும் காலம் வரை அவர் இடைவிடாமல் செய்து வந்தார். (2008ம் ஆண்டு வரை). அதன் பின் நான் இப்போது செய்து வருகிறேன். கடந்த வருடம் மட்டும் பஞ்சாங்க சிரவணம் 4000 பேருக்கு மேல் கேட்கப்பட்டிருக்கிறது. 250 பேர் Download செய்திருக்கிறார்கள். 

பஞ்சாங்க சிரவண பலன்:
இதை தமிழ் புத்தாண்டு அன்று வீட்டில் ஒலிக்க செய்தாலோ அல்லது கேட்டாலோ அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.
ஓம் ஸ்ரீநவக்ரஹ தேவதாப்யோ நம


வரப்போகும் மன்மத வருட பஞ்சாங்க சிரவணம்:
http://bit.ly/1Fg1Zli

Download link: http://bit.ly/1acWFGF

Monday, April 6, 2015

மன்மத வருஷத்தின் பஞ்சாங்க சிரவணம்மன்மத வருஷத்தின் பஞ்சாங்க சிரவணம்இதை தமிழ் புத்தாண்டு அன்று வீட்டில் ஒலிக்க செய்தாலோ அல்லது கேட்டாலோ அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும்.


ஓம் ஸ்ரீநவக்ரஹ தேவதாப்யோ நம:

MP3 code: