Wednesday, October 7, 2015

கிரகங்களின் பலமும் அதற்குண்டான பலனும் - பாகம் 1

கிரகங்களின் பலமும் அதற்குண்டான பலனும்


நமது ஜாதகத்தில் நவக்கிரகங்களில் எந்த கிரகம் பலம் பெற்றுள்ளது என்பதைக் கவனித்து அப்படி பலம் பெற்ற கிரகத்தை ஒட்டி அவரவரின் வாழ்வில் ஏற்படும் பலன்களை யூகித்து தெரிந்து கொள்ள முடியும்.


ஒருவர் ஜாதகத்தில் எல்லா கிரகங்களும் பலம் பெற்றிருக்க முடியாது, அதே போல் அனைத்து கிரகங்களும் பலவீனமாகவும் இருக்காது.

உதாரணமாக சூரியனுடைய பலன் என்பதை கீழ்க்காணூம் விஷயங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்:

  • ராசிக்கட்டத்தில் எங்கு இருக்கிறார், எந்த வீட்டிற்கு அதிபதி
  • நவாம்சத்தில் எங்கு இருக்கிறார், எந்த வீட்டிற்கு அதிபதி
  • நக்ஷத்ரபாதசாரம், பாதசார அதிபதி
  • யாருடன் இணைந்திருக்கிறார், அவர்களுடைய காரகத்துவம் என்ன
  • எந்த வீட்டை பார்க்கிறார்
  • ஷட்பலம்
  • ஷட்பலத்தில் எத்தனையாவது கிரகமாக வருகிறார்
  • இஷ்ட கஷ்ட பலம்
  • விம்சோபக பலம்
  • அஷ்டவர்க்க பலம்
  • சஷ்டியாம்ச பலம்
  • காரகத்துவம்

சில கிரகங்கள் பலம் பெற்றிருந்தால், அவர்களுக்குள் அதிக பலம் பெற்றவர் யாரோ, அவரது தன்மைகளே நமக்கு பலன்களில் அதிகமாக இருக்கும்.

இப்போது நாம் பார்க்க இருப்பது, கிரகங்களின் தன்மைகளை வைத்து ஒருவருக்கு தொழில் உத்தியோகம் எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாம்.

ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் பலம் பெற்றிருந்தால், அவர் எந்த வீட்டிற்கு அதிபதியாக இருந்தாலும் சரி, சூரியனால் ஜாதகருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ஸ்தானத்திற்கும் அவருக்கும் சம்பந்தம் இருக்குமானால் தொழிலில் ஜாதகருக்கும் உயர்நிலை இருக்கும். சூரியன் பலவீனமடைந்திருந்தால் அவருடைய திசா புத்தி காலங்களில் சரிவை சந்திக்க நேரிடும். சூரியனுக்கும் அரசாங்கம் சார்ந்த தொழில்களுக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உண்டு. அரசாங்கத்தில் உயர்பதவி வகிப்பவர்களின் ஜாதகங்களைப் பார்த்தால் சூரியன் நிச்சயம் பலம் வாய்ந்த கிரகமாக இருப்பார். குறிப்பாக இவர்களுக்கு சூரியனுடைய திசா அல்லது புத்தி அல்லது அந்தரம் மிக நன்மையளிப்பதாக இருக்கும். சூரியனுடைய பார்வை பெற்றாலும் இதே போன்றதொரு பலன்களை அனுபவிக்க இயலும்.

கவனிக்க: இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவான பலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும்.


சூரியன் என்பவர் ராஜகிரகம் ஆவார். நவக்கிரகங்களின் தலைவர். எனவே சூரியன் பலன் பெற்ற ஜாதகர்கள் அரசாங்கத்திற்கும், அரசு சார்ந்த உயர் பதவியில் இருப்பவர்களுக்கும், கட்சி மேலிடத்திற்கும், தந்தைக்கும் மிக நெருக்கமானவர்களாக இருப்பார்கள். மிகப் பெரிய இடத்திலிருப்பவர்களுடன் உறவு முறை இருக்கும்.

சூரியனுடன் சந்திரன் தொடர்பாகும் போது இரண்டாம் நிலை தலைவர்களாகவோ அல்ல்து இரண்டாம் நிலை பதவியையோ பெறுவது எளிதாக இருக்கும்.

சூரியனுடன் செவ்வாய் தொடர்பாகும் போது படைத்தளபதி அல்லது காவல், இராணுவம் சார்ந்த பணிகள், படைக்கலன்களை கையாழுதல், ஒரு நிறுவனத்தின் சார்பாக தன்னை முன்னிறுத்துதல் போன்றவை ஏற்படும்.

சூரியனுடன் புதன் சேர்க்கை ஏற்படும் போது அடுத்தவருக்கு உதவி செய்தல், மற்றவருக்கு அறிவுரைகள் சொல்லுதல், ஜோதிடர் போன்றவை ஏற்படலாம். (கவனிக்க: சூரியன் புதன் சேர்க்கை 15 நாட்களுக்கு ஒரு முறை சேரும்)

சூரியனுடன் குரு சேர்க்கையாகும் போது ஒரு நாட்டிற்கு ஆலோசனையாளர் ஆவது, கோவில் பூஜை, வேதம் சொல்லுதல், இறை சார்ந்த பணிகள், தனது அறிவை வைத்து பெரும் பணம் ஈட்டுதல் போன்றவை ஏற்படும்.

சூரியனுடன் சுக்கிரன் சேரும் போது மனித குலத்திற்கு தேவையான வசதி வாய்ப்புகள் சார்ந்த தொழில்கள், பணம் முதலீடு செய்து சம்பாதித்தல், கலைத்துறையில் டெக்னிக்கல் சார்ந்த தொழில்கள், ஏற்றுமதி போன்றவை ஏற்படும்.
சூரியனுடன் சனி சேரும் போது குறுக்கு வழியில் பணம் ஈட்டுதல், ஷேர் மார்க்கெட் போன்ற தொழில்கள், வழக்கறிஞர் போன்றவை ஏற்படும்.

ராகு கேதுக்களுக்கு அவர்கள் எந்த வீட்டில் இருக்கிறார்களோ அந்த வீட்டின் அதிபதி பலன்கள் நடக்கும்.
கவனிக்க: இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவான பலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் மாறும்.

No comments: