மகரம்:
எதிலும் போராட்ட குணத்துடன் ஈடுபட்டு வெற்றிகளைக் குவிக்கும் மகர ராசி அன்பர்களே நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள். கடுமையான உழைப்பின் மூலம் அனைத்து காரியங்களிலும் வாகை சூடுவீர்கள். உங்கள் மனசாட்சிக்கு விரோதமான க்காரியங்களை செய்ய மாட்டீர்கள்.
எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:
கிரகநிலை:
இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு சுகஸ்தானத்தில் கேதுவும், ராசிக்கு பஞ்சமபூர்வ புண்ணிய இடத்தில் குருவும், தொழில்ஸ்தானத்தில் சனி ராகுவும் இருக்கிறார்கள். கள்த்திர சப்தமஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.
உங்களின் செய்தொழிலில் எதிர்பாராத லாபத்தைக் காண்பீர்கள். புதிய முயற்சிகளை வெற்றியுடன் செயல்படுத்துவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை உயரும். புத்திக் கூர்மையுடன் சமயோஜிதமாக யோசித்து நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். சோதனைகளைச் சாதனைகளாக்கிக் கொள்வீர்கள். பொது நலத் தொண்டுகளில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும். உங்களைச் சுற்றிலும் ஒரு நண்பர் கூட்டம் இருக்கும். பெற்றோருக்கு ஏற்பட்ட உடல் உபாதைகள் தீரும். பொருளாதார வளத்தைப் பெருக்குவதற்கு துணிவான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்ந்து எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு வெளியூர் அல்லது வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். அறிவாளிகளின் ஆலோசனை தக்க நேரத்தில் கிடைக்கும். அலைச்சல் நீங்கி திட்டமிட்ட காரியங்கள் முடிவடையும். கடுமையாக உழைத்து எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்வீர்கள். சிலருக்கு சொந்தத் தொழில் செய்வதற்கான வாய்ப்புகள் தேடிவரும். நண்பர்கள், கூட்டாளிகள் தேவைக்கு ஏற்ப உதவுவார்கள். தெய்வ பலத்தால் அனைத்தையும் சுலபமாக சாதித்துக் கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் கவனமாக இருக்கவும். வாய்தாக்களை தவறாமல் குறித்துக்கொண்டு ஆஜராகவும். உங்களுக்கு எதிராக, ஒரு தலைப்பட்சமாக தீர்ப்புகள் வழங்கப்படாமல் பார்த்துக்கொள்ளவும்.
குடும்பத்தாருடன் கவலையில்லாமல் கலகலப்பாகப் பேசிப் பழகுவீர்கள். உற்றார், உறவினர்கள் பாசம் காட்டுவார்கள். சமுதாயத்தில் பிரபலமான குடும்பத்தினருடன் திருமண உறவு உண்டாகும். ஷேர் மார்க்கெட் போன்ற துறைகளின் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குழப்பவாதிகளையும், அதீத சந்தேகப் பிராணிகளையும் உங்களிடமிருந்து விலக்கி வைக்கவும். நவநாகரீக ஆடைகளை அணிந்து கம்பீரமாக வலம் வருவீர்கள். அரசாங்கத்திலிருந்து சில சலுகைகளைப் பெறுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்களின் நினைவாற்றம் அதிகரிக்கும். அதன்மூலம் பரிசுகளை வெல்லும் ஆண்டாகவும் இது அமைகிறது. உத்யோகஸ்தர்கள் இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கொடுப்பீர்கள். உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டு விலக்கிவிடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் அலுவலக வேலைப் பளு கூடினாலும் அவற்றைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். சக ஊழியர்கள் தேவைக்கேற்ப உதவி செய்வார்கள். சிலர் கடன் வாங்கி வாகனங்களை வாங்குவீர்கள். வியாபாரிகள் ஓய்வில்லாமல் உழைத்து நல்ல லாபத்தைக் காண்பீர்கள். புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பீர்கள். கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனக் கசப்புகளை சமாளித்து விடுவீர்கள். புதிய யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். சிலர் திட்டமிட்டு செயல்பட்டு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளைப் பெறுவார்கள். கொடுக்கல், வாங்கல் சிறப்பாகவே தொடரும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன்களைப் பெற்று கழனிகளை சீரமைப்பீர்கள். மானியங்கள் கிடைக்கும். புதிய விவசாயக் கருவிகளை வாங்குவீர்கள். விவசாய இடுபொருட்களுக்கு சிறிது செலவு செய்ய நேரிடும். மனதிலிருந்த அச்சம் விலகும். கால்நடைகளின் மூலம் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். விவசாயக் கூலிகளை கௌரவமாக நடத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு சில நேரங்களில் கூடுதலாக கிடைக்கும். ஆதரவு குறைந்த நேரங்களில் சற்று அடங்கிப் போகவும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது அவர்களின் எண்ணங்களை அறிந்துகொண்டு எச்சரிக்கையுடன் இருக்கவும். மற்றவர்களுக்கு முன் ஜாமீன் போட வேண்டாம். கலைத்துறையினர் வெற்றி மேல் வெற்றி காண்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவீர்கள். புதிய நண்பர்களால் பலன் அடைவீர்கள். படைப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் ஈடுபடுவீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். சேமிப்புகள் உயரும். பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சீரிய முயற்சி செய்து சுப காரியங்களை நடத்துவீர்கள். உறவினர்கள் வகையில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி அமைதி நிலவும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். சமையல் செய்யும்போது கவனத்துடன் இருக்கவும். மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெற்று மகிழ்வீர்கள். அதிக மதிப்பெண்களைப் பெறுவதற்காக போதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள். விளையாட்டினால் உடல் ஆரோக்யத்தை வளர்த்துக் கொள்வீர்கள்.
பரிகாரம் : சனிதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீபைரவரை வணங்கி வரவும். முடிந்தால் மிளகு விளக்கு போடவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி காலபைரவாஷ்டகம் பாராயணம் செய்யவும்.
மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலில் இருக்கும் தாயாருக்கு மல்லிகைப் பூவை அர்ப்பணித்து 3 முறை வலம் வரவும். உங்களுக்கு பொன்னான காலம் கனிந்து வரும்.
No comments:
Post a Comment