Tuesday, April 9, 2013

விஜய வருஷ புத்தாண்டு - பாகம் 04 - ரிஷப ராசி பலன்கள்

ரிஷபம்:
சொன்ன நேரத்தில் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ளும் ரிஷப ராசி வாசகர்களே! நீங்கள் இராப்பகல் பாராமல் உழைப்பதில் வல்லவர். காசு விஷயத்தில் கறாராக இருப்பவர். வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்பவர். தன்னை விட தங்கள் குழந்தைகள் நன்றாக வர வேண்டும் என்று விரும்புபவர்கள்.

எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:
கிரகநிலை:

இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசியில் குருவும், ரணருணரோக ஸ்தானத்தில் சனி ராகுவும், விரையஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள். தனவாக்கு குடும்பஸ்தானத்திற்கு குரு மே மாதம் 28-ம் மாறுகிறார். 

இனி பலன்களைப் பார்க்கலாம்.


உங்களின் வாக்கு வன்மை அதிகரிக்கும்.  உடல் நலம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். சமுதாயத்தில் உங்கள் பெயரும், புகழும் உயரும். தீயவர்களின் தொடர்பு தானாகவே விலகும். எந்தச் செயலைச் செய்தாலும் அதில் உங்களின் தனித்தன்மையை வெளிப்படுத்துவீர்கள். புதிய வீடு, நிலம் வாங்குவதற்கான ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். ஆனாலும் மனதில் காரணமில்லாத பயம் தொடரும். எனவே ப்ராணாயாமம், யோகா போன்றவற்றைச் செய்து மனக்குழப்பங்களிலிருந்து விடுபடவும். சகோதர, சகோதரிகள் காரணமில்லாமல் விரோதம் பாராட்டுவார்கள். அதனால் அவர்களிடம் அனாவசிய நெருக்கம் வேண்டாம். கடினமான விஷயங்கள் கூட உங்கள் முயற்சியால் சீராகும். சுறுசுறுப்புடனும் தைரியத்துடனும் பணியாற்றுவீர்கள். கடினமான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவீர்கள். உங்கள் செயல்களில் குறை கண்டுபிடிப்பவர்களை நேருக்கு நேராக சந்தித்து சரியான விளக்கமளிப்பீர்கள். தன்னம்பிக்கையுடன் சாதனைகளைச் செய்து புகழ் பெறுவீர்கள். தீர்க்கமாக ஆலோசித்து, சிந்தித்து முடிவெடுப்பீர்கள். ஆதாரமில்லாத விஷயங்களை நம்ப மாட்டீர்கள்.  உங்கள் நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின்  எண்ணங்களுக்கு மதிப்பளித்து புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள். சமுதாயத்தில் முக்கியஸ்தர் என்கிற அந்தஸ்துக்கு உயர்ந்துவிடுவீர்கள்.  மேலும் அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் உங்களை வந்தடையும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களைச் செய்து பலனடைவீர்கள். சகோதர, சகோதரிகளிடம் இருந்த பிணக்குகள் மாறி அன்பு, பாசம் அதிகரிக்கும். மற்றபடி பழைய விரோதிகளை இந்தக் காலகட்டத்தில் நம்ப வேண்டாம். உத்யோகஸ்தர்கள் உண்மையான உழைப்பை மேற்கொள்ளவும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வும், பதவி உயர்வும் சிறிய கால தாமதத்திற்குப் பிறகே கிடைக்கும்.  அலுவலகம் சம்பந்தப்பட்ட பயணங்களை அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மேற்கொள்ளவும். சக ஊழியர்களிடம் பக்குவமாகப் பேசிப் பழகவும். வியாபாரிகள் சற்று கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யவும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படவும். அனைத்துச் செயல்களையும் உங்களின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக்கொள்ளுங்கள். பண விஷயத்தில் கறாராக நடந்துகொள்ளுங்கள். கூட்டாளிகளிடம் கலந்து பேசிய பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். வாடிக்கையாளர்களின் வருகை குறைவாக இருக்கும் என்பதால் செலவுகளைக் குறைக்கும் வழிகளைத் தேடுங்கள். விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். அதோடு நீர்ப்பாசன வசதிகளாலும், கால்நடைகளாலும் நன்மை அடைவீர்கள். உங்களின் திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சரியாகவே நிறைவேறும். புதிய நிலங்களை வாங்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்ல வேண்டாம். தற்போது உள்ள குத்தகைகளை சரியாகச் செய்து முடிக்கவும். அரசியல்வாதிகள் தங்கள் செயல்களைச் சாதனைகளாக மாற்றிக்காட்டுவீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவுடன் புதிய செயல்களைச் செய்து முடிப்பீர்கள். உங்கள் செயல்களில் ஏற்படும் இடையூறுகள் தானாகவே விலகி விடும். உங்கள் கருத்துக்களை அடுத்தவர்களிடம் திணிக்க முயல வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். திறமைகள் பளிச்சிடும். நல்ல வருமானம் கிடைக்கும். சக கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சிலருக்கு விருதுகள் கிடைக்கும். உங்களின் சமயோஜித புத்தியால் தக்க தருணத்தில் சரியான முடிவெடுப்பீர்கள். பெண்மணிகள் போதும் என்கிற மனநிறைவைப் பெறுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். சகோதர, சகோதரிகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடந்தாலும் அவர்களால் பெரிய நன்மைகள் உண்டாகாது. அனாவசியப் பேச்சுகளைத் தவிர்க்கவும். மாணவமணிகள் உற்சாகமான மனநிலையுடன் கல்வியில் ஈடுபடுவீர்கள். உடல் வலிமை பெற உயற்பயிற்சிகளையும், மன வலிமை பெற யோகா போன்றவைகளையும் மேற்கொள்வீர்கள். வருங்காலத் திட்டங்களுக்காக அடித்தளம் போடுவீர்கள். விளையாட்டுகளில் வெற்றிகளைக் காண்பீர்கள். உங்களின் தன்னம்பிக்கை படிப்படியாக உயரும்.



பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வாருங்கள். அவளுக்கு மஞ்ச வஸ்திரம் கொடுத்து அணிவியுங்கள்.


சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி 108 முறையாவது "ராம' நாமத்தை ஜபிக்கவும். தமிழிலோ, வட மொழியிலோ ”சுந்தர காண்டம்” பாராயணம் செய்வது அதிக நன்மை தரும்.

மலர் பரிகாரம்: “மல்லிகை மலரை” சிவனுக்கு பிரதோஷ வேளையில் சாத்திவர குழப்பங்கள் அகலும்.

No comments: