Tuesday, July 12, 2011

ராசிபலன்: ஜூலை 15 முதல் 31 வரை

குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள ராசிபலன்கள் பொதுவானைவையே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் மாறலாம்.


மேஷம்: உற்சாகமான மனநிலையை உடைய செவ்வாயை ராசிநாதனாக கொண்ட மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய சந்தோஷம் பெருகும் காலமிது. சொத்துக்கள் வாங்குவதற்கும் முதலீடுகள் செய்வதற்கும் ஏற்ற நேரமிது. குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து மோதல்கள் ஏற்பட்டு மறையும். கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. வாகனங்களை பிரயோகப்படுத்தும் போதும் கவனத்துடன் செயல்படவும். செவ்வாய்கிழமை தோறும் முருகனை வழிபடுங்கள். அனைத்து பிரச்சனைகளும் தீரும். 

ரிஷபம்: அனைவரையும் சுலபமாக தன்பால் ஈர்க்கும் சுக்கிரனை ராசியாதிபதியாக கொண்ட ரிஷப ராசி வாசகர்களே நீண்ட நாட்கள் தள்ளிப் போட்ட காரியங்களை செய்யும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி ஒன்று உங்களை வந்தடையும். பிள்ளைகளின் மேல் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் ஒத்துப் போக வேண்டி வரும். சகோதர சகோதரிகளிடம் பாசம் அதிகரிக்கும். கல்வி, பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தக்க ஆலோசனைகள் பெற்று எதையும் செய்யுங்கள். வெள்ளிக்கிழமைகளில் பெருமாளை வழிபடுவதும், தினமும் வினாயகரை வழிபடுவதும் உங்களுக்கு நன்மையைத் தரும். 

மிதுனம்: அறிவால் அனைவரையும் வளைக்கும் புதனை அதிபதியாக கொண்ட மிதுன ராசி வாசகர்களே குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் அதிகரிக்கும் கால கட்டத்தில் இருக்கிறீர்கள். வெளிநாடு செல்வதற்கும், வெளிநாடு சம்பந்தபப்ட்ட விஷயங்களை தொடங்குவதற்கும் ஏற்ற காலமிது. விட்டுப் போன கல்வியை தொடர்வதற்கும், சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளில் வெல்வதற்கும் ஏற்ற காலமிது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது. புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபடுவதும், தினமும் முன்னோர்களை வழிபடுவதும் நன்மையைத் தரும். 

கடகம்: அழகால் அனைவரையும் ஈர்க்கும் கடக ராசி வாசகர்களே சீக்கிரமே உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இருந்த காலகட்டம் மாறும் தருணமிது. தைரியமாக எந்த காரியத்தையும் செய்யலாம். பிள்ளைகளுடன் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்குள்ள அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். எனினும் உங்கள் உழைப்பு வீணாகாது. அதற்குண்டான பலன் நிச்சயம் உண்டு. திங்கட்கிழமைதோறும் சிவனை வழிபடுவது மிகுந்த நனமையைத் தரும். 

ஸிம்ஹம்: எதிலும் ராஜாவாக வலம் வரும் சூரியனை அதிபதியாக கொண்ட ஸிம்ஹ ராசி வாசகர்களே தேவையுள்ள சுபச்செலவுகள் வந்து பயமுறுத்தும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். குடும்பத்தினருடன் சின்னச் சின்ன கருத்து மோதல்கள் வந்து மறையும். தாய் தந்தையுடன் பாசம் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றம் உண்டு. லாபமான முதலீடுகள் செய்வதற்கும் வேலை மாறுவதற்கும் உள்ள உற்சாகமான காலமிது. வெளிநாடு சம்பந்தப்பட்ட யோகம் கைகூடி வரும். ஞாயிற்றுக்கிழமைகளில் சிவனை வழிபடுவது சாலச்சிறந்தது. 

கன்னி: தனது குழந்தைத்தனத்தால் அனைவரையும் ஈர்க்கும் புதனை அதிபதியாக கொண்ட கன்னி ராசி வாசகர்களே முடிவெடுக்க முடியாமல் திணறும் காரியங்களுக்கு தக்க ஆலோசனைகள் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. எந்த ஒரு நேரத்தையும் வீணாக்க வேண்டாம். உங்களுக்குள்ள கவலைகள் மாறும் காலகட்டம் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்பதை உணருங்கள். தாய் தந்தையாருடனும், வாழ்கைத்துணையுடனும் கருத்து மோதல்கள் வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. தேவையில்லாத அனாவசிய முதலீடுகள் வேண்டாம். புதன்கிழமைதோறும் பெருமாளை வழிபடுவதும், அமாவாசை தோறும் முன்னோர்களை வழிபடுவதும் நன்மையைத் தரும். 


துலாம்: அனைவரையும் தனது அழகால் ஈர்க்கும் சுக்கிரனை அதிபதியாக கொண்ட துலாம் ராசி வாசகர்களே நீங்கள் வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். செலவுகள் வந்து பயமுறுத்தும் காலகட்டமிது. தொழில் செய்யும் இடத்தினில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும் காலகட்டமிது. திருமணத்தடை நீங்கி அதற்கான காலகட்டம் வந்து விட்டது. தந்தையாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். சனிக்கிழமை தோறும் முன்னோர் வழிபாடும் வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடும் ஏற்றம் தரும். 

விருச்சிகம்: அனைத்திலும் வேகம் கொண்ட செவ்வாயை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசி வாசகர்களே எதிலும் வேகம் இருந்தாலும் விவேகமும் அவசியம் என்பதை உணருங்கள். எந்த ஒரு விஷயத்தையும் யாரிடமும் தெரிவிக்கும் முன் யோசனை அவசியம். வேலை செய்யும் இடத்தினில் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தினில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். மிக தைரியமாக எந்த காரியத்திலும் இறங்குவீர்கள். செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து வர நன்மைகள் அதிகரிக்கும். 

தனுசு: அடுத்தவரின் அங்கீகாரத்திற்கு மதிப்பளிக்கும் குருவை அதிபதியாக கொண்ட தனுசு ராசி வாசகர்களே சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் வரலாம். இருந்தும் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு திருமண ஏற்பாடுகள் கைகூடி வரும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் லாபம் கிடைக்கும். தாய் தந்தையருடன் சிலருக்கு கருத்து மோதல்கள் வரலாம். வாழ்க்கைத்துணையுடன் உறவு பிரகாசிக்கும். வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு நன்மையைத் தரும். 

மகரம்: எதிலும் வாதத் திறமையால் ஜெயிக்கும் சனியை அதிபதியாக கொண்ட மகர ராசி வாசகர்களே கனிவுடன் எதையும் செய்யும் காலகட்டத்தில் இருக்கிறீர்கள். சொத்து, வீடு, வாகனம் போன்ற நன்மைகள் அமையும். வீட்டினில் நல்ல பெயர் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் மேல் வைக்கும் பாசம் அதிகரிக்கும். தாய் வழி உறவினர்களுடன் உறவு பிரகாசிக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி ஒன்று உங்களுக்கு வந்து சேரும். சனிக்கிழமைகளில் அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட தீராத பிரச்சனைகள் தீரும். 

கும்பம்: எதிலும் தங்களது முக்கியத்துவத்தை உணர்த்தும் சனியை அதிபதியாக கொண்ட கும்ப ராசி வாசகர்களே கடந்த சில நாட்களாக இருந்த சுணக்க நிலை மாறும். பிள்ளைகளின் மேல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த நண்பர்கள் உங்களுடன் சேர்வர். வெளிநாடுகளில் உள்ள அன்பர்கள் தாயகம் திரும்பும் முயற்சியினில் ஈடுபட துவங்கும் நேரமிது. பாதியில் விட்டு இருந்த கல்வியை சிலர் தொடர்வர். சகோதர சகோதரிகளிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். சனிக்கிழமைதோறும் முன்னோர் வழிபாடு அவசியம். இயலாதவர்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகள் செய்யுங்கள். 

மீனம்: நட்பினை கற்பாக கொண்ட குருவை அதிபதியாக கொண்ட மீன ராசி அன்பர்களே தங்கள் குடும்பத் தேவைகளையும் நிறைவேற்றும் கால கட்டத்தில் இருக்கிறீர்கள். உங்கள் பேச்சுக்கும் சமுதாயத்தில் அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் தைரியம் பிரகாசிக்கும் காலமிது. நீண்ட நாட்களாக இருந்து வந்த சொத்து பிரச்சனைகள் தங்களது வாக்கு சாதுர்யத்தால் தீரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும். வேலை செய்யும் இடத்தினில் பிரச்சனைகள் வரலாம். வியாழக்கிழமைகளில் தங்களுக்கு பிடித்த இஷ்ட தெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள்.குறிப்பு: இங்கு கொடுக்கப்பட்டுள்ள ராசிபலன்கள் பொதுவானைவையே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் மாறலாம்.

No comments: