Thursday, February 4, 2016

சங்கீதப்பிரியர்களுக்கு சாக்லெட் செய்தி: (from RoamingRaman)

சங்கீதப்பிரியர்களுக்கு சாக்லெட் செய்தி:
(from RoamingRaman)

                 "தியாகராஜர் மேலே அவ்வளவு பக்தி இருந்தா, இந்தா,  நானே தியாகராஜர் வரைஞ்சு தர்றேன், அதை வச்சுண்டு நீயும் உன் சிநேகிதர்களும் ஆராதனை பண்ணுங்கோ. திருவாரூர்தான் போகணும்னு இல்லே" என்று பள்ளிக்கூட நாட்களில் தந்தை சொன்னது ஆசிர்வாதமே ஆகிவிட்டது. கடந்த 63 ஆண்டுகளாக, அப்பா வரைந்து கொடுத்த படத்தை வைத்துக்கொண்டு தடை ஏதும் இல்லாமல் வருடா வருடம் "சத்குரு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை உற்சவம்" நடத்திக்கொண்டிருக்கிறார் மிருதங்க வித்வான் ஸ்ரீ.நாகை சௌந்தர்ராஜன்.

                   ஆயிரக்கணக்கான சிஷ்யர்களைத் தயார் செய்த இவர்.,  எம் எஸ்., எம்எல் வசந்தகுமாரி, டீகே பட்டம்மாள் etc.etc.  என்று மிருதங்கம் வாசிக்காத ஜாம்பவான்களே இல்லை. பட்டியல் ரொம்பப் பெரிசு.தியாகப்பிரம்மத்தின் மனசில் சதா ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி இருந்தது மாதிரி, இவர் மனசெல்லாம் சங்கீதம், சங்கீதம் சங்கீதம்தான். இவரது அந்த பக்தியினால்தான், இவரது விழா அழைப்பிதழில் பங்கேற்போர் என்று பத்து பேர் பெயர்கள் இருந்தால், நிஜத்தில் நூறு பெரிய விற்பன்னர்கள் சந்தோஷமாக வந்து பாடி விட்டுச் செல்கிறார்கள். பாரத் கலாசார்,ம்யூசிக் அகாடெமி,கிருஷ்ணகான சபா, சதாசிவ பிரம்மேந்திர சபா, காஞ்சி காம கோடி பீடம் என்று பலரும் விருதுகள் வழங்கி கௌரவித்திருக்கிறார்கள்.  

                   சென்ற வருஷம் ரொம்ப உடம்பு சரியில்லாமல் இருக்கிறார் என்று நான் பார்க்கச் சென்ற போது என்னிடம், "வாப்பா,  கூட சந்தானம், வாசு, ராஜாராமன், சேஷாத்ரி எல்லாம்தானே வர்றா? அவாள்லாம் வேற வண்டியில் வர்றாளா?" என்றார். குழம்பிய எனக்கு அவர் மனைவி சொன்ன பிறகுதான் தெரிந்தது, அவர் சொன்னவர்கள் எல்லாரும் பக்க வாத்தியக்காரர்கள் என்றும், என்னை நெருங்கிப்பழகிய சங்கீத வித்வான் என்றும் நினைத்துக் கொண்டு பேசியிருக்கிறார் என்று. பலமுறை திடீரென்று நடுராத்திரியில் மிருதங்கத்தை எடுத்துகொண்டு, கச்சேரிக்கு வித்வான்கள் வந்திருக்கிறார்கள்,கிளம்பலாம் வா என்று  குடும்பத்தவர்களை துணைக்கு அழைத்திருக்கிறார்.  சங்கீதம் தவிர எதுவுமே அவர் நினைவில் இருந்திருக்கவில்லை. பகவான் அனுக்ரஹத்தால் சீக்கிரமே நன்கு குணமடைந்தார்.  
 
                    நல்ல நேர்மையான வேண்டுகோளும் ஸ்ரத்தையான பிரார்த்தனையும் இருந்தால் பகவான் அதை நிறைவேற்றித் தருவார் என்பார்கள்.  பொருள் பலமும் தேக பலமும் குறைவாக இருந்த போதும், 85 வயசு இளைஞர் நாகை சௌந்தர்ராஜனை இந்த 64ம் வருட தியாகராஜ ஆராதனைக்கு பகவான்  தயார் செய்து விட்டார். இந்த வருடம் மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் ரோடில் உள்ள பாண்டியன் ஹாலில், 06.02.2016 சனிக்கிழமை மதியம் மூன்று மணிக்கு சத்குரு தியாகராஜர் ஆராதனை தொடங்கி அடுத்த நாள் (ஞாயிற்றுக் கிழமை) ராத்திரி 8.30 மணிக்கு ஸ்ரீஅனுமத் உற்சவத்துடன் நிறைவடைகிறது. சங்கீதப் பிரியர்கள் அனைவருக்கும் நல்ல விருந்து. நாகை சௌந்தரராஜன் மிக எளிமையானவர் மற்றும் விளம்பரங்களை விரும்புவதும் இல்லை - அவர் நடத்தும் விழாவின் அழைப்பிதழில் அவர் பெயரே இல்லாத அளவுக்கு!!
                  
                    
          தொடர்புக்கு: ஸ்ரீ சத்குரு கான நிலையம், மேற்கு மாம்பலம், Chennai-Tamilnadu  ஃபோன்: 98408 70446.
                                                                                                                                                                                           
                                                                                                                                                           -ரோமிங்ராமன் (www.facebook.com/roamingraman)


No comments: