Saturday, October 30, 2010

எதற்காக கோவிலுக்கு செல்ல வேண்டும் பாகம் 2

அனைவருக்கும் வணக்கம்.அந்த இடம் கம்பீரமாக இருந்தது. ரம்யமாக இருந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் சைவ மடங்களில் முதன்மையானதும், பாண்டிய நாட்டின் மன்னனுக்கு செங்கோல் எடுத்துக் கொடுத்த பரம்பரையில் வந்ததுமான மடம், பெருங்குளம் செங்கோல் மடம் ஆதினம்.

இந்த இழையை ஆரம்பிப்பதற்கு முன் தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு மடாதிபதியையோ அல்லது பெரியவரையோ சந்தித்து இது விஷயமாக கேட்டு எழுத வேண்டும் என்றிருந்தேன். ஆனால் சுடச்சுட செய்தியை போட்டு விட வேண்டும் என்பதனால் அன்று இட்டு விட்டேன்.

சரி தொடரலாம்.

எனது சொந்த ஊர் என்பதோடு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பழமைவாய்ந்த மடாதிபதி சந்திக்க ஆவலானேன். அவர் மிகவும் பிஸியானவர் என்பதனால் எமது நண்பர் மூலம் அப்பாயின்மெண்ட் வாங்கி கொண்டேன். மேலும் செங்கோல் ஆதினத்தை எளிமையில் அணுகலாம், சந்திக்கலாம்.

கடந்த புதன்கிழமையன்று மாலை 4 மணிக்கு சென்றேன். சிவப்பழமாகம், மிகவும் வயதானவராகம், அறிவில் முதிர்ந்தவராகவும், சாந்த ஸ்வரூபியாகவும் காட்சியளித்தார் செங்கோல் மடம் ஆதினம். அவர் என்னைப் பார்த்தவுடன் வாருங்கள் ஜோதிடரே எப்படியுள்ளீர்கள்? அமருங்கள் என்று எம்மை அவர் அருகிலேயே அமர வைத்துக் கொண்டார்.


[ திருவாவடுதுறை ஆதின சன்னிதானத்துடன் செங்கோல் ஆதீன சன்னிதானம் - இடப்புறம் இருப்பவர் ]

சொல்லுங்கள் என்றார். சொல்ல ஆரம்பித்தேன், நமது அனுபவங்களை.
மிகவும் பொறுமையாக கேட்டுக் கொண்டார். ரொம்பவும் சாந்தமாக நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க ஆரம்பித்தார்.

இனி அவரது பேட்டி:

கேள்வி: ஸ்வாமி கோவில் பூஜை முறைகளைப் பற்றி உங்களிடம் சில விளக்கங்கள் கேட்டு பெறலாம் என்று வந்திருக்கிறேன்.
ஸ்வாமி பதில்: கேளுங்கள்.

கேள்வி: ஒரு நாளைக்கு எத்தனை காலம் பூஜை ஒரு கோவிலில் செய்ய வேண்டும்?
ஸ்வாமி பதில்: முறைப்படி பார்த்தோமானால் 6 கால பூஜை செய்ய வேண்டும். ஆனால் இன்று அது 3 காலமாகி, 2 காலமாகி, 1 காலமாகி விட்டது. சில கோவில்களில் செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மட்டும் பூஜை செய்ய ஆரம்பித்து விட்டனர். சில கோவில்களை அடைத்தே விட்டனர்.

கேள்வி:
கோவிலில் பூஜை செய்பவருக்கு ஏதாவது தகுதி இருக்கிறதா?
ஸ்வாமி பதில்: கட்டாயமாக இருக்கிறது. பூஜை செய்பவருக்கு திருமணம் ஆகியிருந்தால் நல்லது. அவரே பிராமணராக இருந்தால் 3 வேளை சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். அவர் வேதம், ஆகமம், திருமறைகள், சைவ சித்தாந்தம், இதிஹாசங்கள் ஆகியவற்றை அறிந்திருக்க வேண்டும். முக்கியமாக பூஜை செய்பவருக்கு பக்தி சிரத்தை இருக்க வேண்டும். இந்த பூஜை செய்வதற்கு தாம் என்ன புண்ணியம் செய்தோமோ இந்த பாக்யம் கிடைத்திருக்கிறது என்று இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். சுருக்கமாக சொல்வதானால் தொழிலை AFFECTIONனோடு செய்ய வேண்டுமே தவிர PROFESSIONஆக செய்ய கூடாது. (இதற்கு கண்ணப்ப நாயனார் புராணத்தை உதாரணமாக சொன்னார்)

கேள்வி: கோவிலில் புஜை செய்பவருக்கு ஏதாவது யூனிபார்ம் என்று ஏதாவது இருக்கிறதா?

பதில்: அவர் பஞ்சகச்சம் அணிந்திருக்க வேண்டும். அவரவர் ஆச்சாரங்களை அனுஷ்டிக்க வேண்டும். திருவிடங்கள் அணிய வேண்டும்.

கேள்வி: கோவிலில் பூஜை செய்பவர்கள் புரோஹிதம் தொழில் செய்யலாமா?

பதில்: புரோஹிதத்தில் மங்கலம், அமங்கலம் என்று இரு வகைகள் உண்டு. மங்கலம் என்பது சுபகாரியங்கள். அமங்கலம் என்பது அபரக்கிரியைகள். மங்கலம் தொழிலுக்கு செய்பவர்கள் தாராளமாக கோவிலில் பூஜையும் செய்யலாம்.

கேள்வி: கோவிலுக்கு கட்டாயம் செல்ல வேண்டுமா?

பதில்: ஆலயம் தொழுவது சாலமும் நன்று என்று ஒரு வழக்கு உண்டு. ஆதலால் கட்டாயம் கோவிலுக்கு செல்லுதல் வேண்டும்.

கேள்வி: கோவிலுக்கு செல்பவர்கள் கட்டாயம் அர்ச்சனை செய்யவேண்டுமா? ஏனென்றால் சில கோவில்களில் அர்ச்சனை மந்திரங்கள் தெரிவதில்லை?

பதில்: பொதுவாக பூஜைகள் இரு வகை உண்டு. ஒன்று ஆத்மார்த்த பூஜை. இன்னோன்று பரார்த்த பூஜை. வீட்டினில் செய்வது ஆத்மார்த்த பூஜை. கோவிலில் செய்வது பரார்த்த பூஜை. ஆத்மார்த்த பூஜைகளுக்கு ஆகமம் என்பது இல்லை. ஆனால் கோவிலில் பூஜை முறைகளுக்கு ஆகமம் என்று ஒன்று உள்ளது. இன்று அதையெல்லாம் யாரும் பார்ப்பதில்லை. கோவிலுக்கு செல்பவர்கள் கட்டாயம் அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது இல்லை. சரி கோவிலில் இருப்பவருக்கு அர்ச்சனை செய்யத் தெரிவதில்லை என்றால் நமக்கு நாமே அர்ச்சனை செய்தல் கூடாது. அர்ச்சனை செய்வதற்கு தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, பழம், சூடன், சாம்பிராணி, பத்திக்கட்டு என கொண்டு செல்லலாம். ஆத்மார்த்த பூஜையில் நமக்கும் நம்து குடும்பத்திற்க்கும் நாமே அர்ச்சனை செய்து கொள்ளலாம்.[ நான் அவரிடம் மக்களுக்கு அர்ச்சனை மந்திரங்கள் கொடுக்க போகிறேன் என்று சொல்லியவுடன் வந்த பதில் இது ]

கேள்வி: தமிழில் அர்ச்சனை செய்யலாமா?

பதில்: பாரம்பரிய மரபுப்படி நமக்கு ஸமஸ்க்ருத வழிபாடு உண்டு. [இதற்கு வேத நாயகன் என்ற தேவாரப் பாடலை சொன்னார்] எனினும் தமிழில் அர்ச்சனை செய்யலாம்.

கேள்வி: கோவிலில் பூஜை செய்பவர் சரிவர இல்லாததால் என்ன செய்யலாம்?

பதில்: நாமே விபூதி குங்குமம் கொண்டு சென்று நமக்கு பூசி கொள்ளலாம். ஆலய நிர்வாகிகளிடம் புகார் செய்யலாம். இல்லையென்றால் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளலாம்.

கேள்வி: ஸ்வாமி கோவில்களில் நாளுக்கு நாள் அக்கிரமங்கள் அதிகரித்து கொண்டே வருகிறதே?இது மாறாதா?

பதில்: இதுதான் யுகதர்மம்.

நமக்கு பேட்டியளித்த சன்னிதானத்திற்கு மனமார்ந்த நமஸ்காரங்கள்.

No comments: