Friday, September 28, 2012

அந்த பதினாலு மெழுகுவர்த்திகள் - ருத்ரா

அந்த பதினாலு மெழுகுவர்த்திகள் - ருத்ரா

 

 
விநாடிக்கு விநாடி
கண் சிமிட்டி கண்சிமிட்டி
"கூகிளுக்கு"
உருகாம‌ல் உருகி உருகி
பிறந்த நாள் வாழ்த்துக் கூறும்
மெழுகுவர்த்திகளே!
நாங்க‌ளும் உங்க‌ளோடு
இந்த‌ நூற்றாண்டின்
இந்த இணயற்ற‌ "சிலிகான்" இத‌ய‌த்துக்கு
வாழ்த்துக்க‌ள் கூறுகின்றோம்.

இன்று
விசைப்ப‌ல‌கையெல்லாம்
தேனாறு பாலாறு தான்.
கைபேசிக்குள்
க‌ணினியே புகுந்த‌ பிறகு
எங்கள் கைரேகைக‌ள் கூட‌
சாட்லைட் த‌ட‌ங்க‌ளாகின‌.

எங்க‌ள் சின்ன‌ஞ்சிறிசுக‌ள்
கொஞ்ச‌ம் க‌ட‌லை போட்டுக்கொண்டால்
பாற்க‌ட‌லை மெத்தையாக்கி
ப‌டுத்திருக்கும் ப‌ர‌ந்தாம‌னுக்கும்
"க்ராஸ் டாக்கில்"
அந்த‌ "கிசு கிசு"க்க‌ள்
பேரின்ப‌க்கொசுக்க‌டிக‌ள் ஆகிப்போயின‌.

இன்னும் என்ன‌ சொல்ல‌?
எங்க‌ள் மூளைக‌ளை எல்லாம்
க‌ழ‌ற்றி
ஆயிர‌ம் ஆயிர‌ம் மைல்க‌ள்
உய‌ரத்து ப‌ர‌ணில்
வைத்து வைத்து
ஒரு விநாடிக்குள்
ஓராயிர‌ம் த‌ட‌வை கூட‌
எடுத்து த‌ந்து விடுகிறாய்.

எங்க‌ள் எல்லா நூல‌க‌ங்க‌ளும்
வெறும் காகித‌ங்க‌ளின்
மார்ச்சுவ‌ரிக‌ள் ஆகும்ப‌டி
செய்து விட்டாய்
என்ப‌து ஆறாத‌ துக்க‌ம் தான்.

அறையில் இருப்ப‌து
அம்ப‌ல‌ம் ஆகிப்போகும் அபாய‌ம்
எங்க‌ள் தோள் மேல் இருக்கிற‌து.

மானிட‌த்தின்
பிர‌ம்ம‌ சிருஷ்டிக்கு
இனி எத‌ற்கு அந்த‌
ர‌க‌சிய‌மான‌ பால் செம்பும்
விள‌க்க‌ணைப்பும்.
தினம் தின‌ம் சூரிய‌ன் கூட‌
கூச்ச‌த்துட‌ன் தான்
வெளியேறுகிறான்.
கூகிளுக்கே அவ‌ன் ஒரு
சூரிய‌ ந‌ம‌ஸ்கார‌ம்
செய்ய‌ வேண்டியிருக்கிற‌து.

இருபத்தியொண்ணாம்
நூற்றாண்டையே
சுருட்டி மடக்கி
வாய்க்குள் போட்டுக்கொண்ட‌
குறும்ப‌ற‌வையே!
பிர‌ப‌ஞ்ச‌த்தின்
"புழுக்கூட்டு"ம‌ண்ட‌ல‌த்தையும்
(வோர்ம் ஹோல்)
தாண்டிச்சென்று கூடு க‌ட்டுவாய்
போல் இருக்கிற‌து.

அப்போதும்
"விண் தோன்றா"கால‌த்தேயும்
எங்க‌ள் த‌மிழின்
"ப்ளாங்க்"மாறிலிக‌ள்
அங்கே பாட‌ம் சொல்லிக்கொண்டிருக்கும்.

இனி விசும்பெல்லாம்
எங்க‌ள் க‌ண்க‌ளின் காதுகளின்
நாவு அதிர்வுக‌ளின்
விஸ்வ‌ரூப‌ம் தான்.
உன் பிக்செல்க‌ளே
பிர‌ப‌ஞ்ச‌த்தின் பிக்காஸோக்க‌ள்.

எல்லாம் காட்டிவிட்டாய்.
மீண்டும் ஒரு
பிர‌ப‌ஞ்ச‌த்தின் க‌ன்னிக்குட‌ம் உடையும்
பிக் பாங்க் காட்சியின் ஒத்திகையும்
சிவ‌னின்
அந்த‌ ஊர்த்துவ‌ தாண்ட‌வ‌மும் தான்
நீ காட்டும் "அன்ஸிப்" காட்சிக‌ள்.

உன் "பூலிய‌ன்"அல்ஜீப்ராவா?
எங்கள் சிவ‌னின் "புலித்தோல் அல்ஜிப்ரா"வா?
பார்க்க‌லாம்.
அதோ அவ‌ன் "உடுக்கை ஒலி" கேட்கிற‌து.
எத‌ற்கும்
"அமேஸானில்"அவ‌னுக்கு ஒரு
ஆண்ட்ராய்டு அப்ப்ளிகேஷ‌ன் கிட் ஒன்றை
அனுப்பி விடு.
சீக்கிர‌ம்..சீக்கிர‌ம்..
 
நன்றி: ருத்ரா(இ.பரமசிவன்)  - epsivan@gmail.com

No comments: