Sunday, June 2, 2013

ஜூன் மாத ராசிபலன்கள்

மேஷம்:

”உழைப்பவரே உயர்ந்தவர்” என்பதற்கேற்ப அனைவராலும் விரும்பப்படும் மேஷ ராசி அன்பர்களே, ராசிநாதன் செவ்வாய் தனஸ்தானத்தில் , பஞ்சமாதிபதி சூரியனுடன் அமர,   புதன், சுக்கிரனுடன் குரு மூன்றாம் இடத்தில் இருக்க,   சனி ராசியைப் பார்க்க,  என நெருக்கடியான நிலையில் இருந்தாலும்  குடும்பத்தில் மிக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குறிப்பாக நல்ல பணப்புழக்கத்தையும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். பிள்ளைகளால்  அனுகூலம் ஏற்படும். எந்த பிரச்சனையையும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். சனி சாதகமற்ற பலன்களைக் கொடுத்தாலும், குருவின்  பார்வை சனி மீது விழுவதால் நன்மையே அளிக்கும். காரியத்தடைகள் நீங்கி அனுகூலம் பிறக்கும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண் விவாதங்களைத்  தவிர்க்கவும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு வாங்க வாய்ப்பு உண்டு. குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே  அன்பு நீடிக்கும் என்றாலும் ஏழாம் இடத்தில் இருக்கும் ராகுவால் சிற்சில பிரச்சனைகள் வரத்தான் செய்யும். எனவே ஒருவருக்கொருவர் விட்டுக்  கொடுத்துப் போகவும். அதே போல் உறவினர் வகையிலும் அதிக நெருக்கம் வேண்டாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய  நேரிடலாம். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். ஆனாலும் வருமானத்தில்  எந்த குறையும் இருக்காது. உடன் பணிபுரிவோரிடம் அனுசரனையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இடமாற்றத்தை சந்திக்கலாம். சொந்தத்  தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும் உழைப்புக்கேற்ற லாபம் கிடைக்கும்.  தொழில் நிமித்தமாக நீண்ட  தூரம் பயணம் போக வேண்டி வரும். எதிரிகள் வகையில் அசட்டையாக இருத்தல் கூடாது.  கண்டகச் சனியின் காலகட்டத்தில் இருப்பதால் புதிய  முதலீடுகளின் போது ஆலோசனைகள் அவசியமாகிறது. பணவிஷயத்தில் தொடர்ந்து அக்கறை தேவை. கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில்  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள்,  பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால்  மாத பிற்பாதி மிகவும் சிறப்பாக இருக்கிறது.  மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக்  கொடுத்து போக வேண்டியிருக்கும். உடல்நலத்தைப் பொறுத்தவரையில் பித்தம் மயக்கம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். குரு ரணருணரோகஸ்தானாதிபதியுடன் இருப்பதால் மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும்.
 
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் உள்ள கருடமூர்த்தியை வணங்கவும்.
 
------------------------------------------------------------------------------------------------

ரிஷபம்:
 
“எருது துரிது” என்பதற்கேற்ப எதிலும் அவசரகதியில் காரியத்தை கச்சிதமாக முடிக்கும் ரிஷப ராசி அன்பர்களே தற்போதைய காலகட்டத்தில் ராசிநாதன்  சுக்கிரன் தனஸ்தானத்தில் தனாதிபதி புதன், லாபாதிபதி குருவுடன் இருக்க,  ராசியில் சுகாதிபதி சூரியன் என ராசிநிலை இருக்கிறது. மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்கள். தொழில் ஸ்தானாதிபதி சனிக்கு ராசிநாதன்  சுக்கிரன் திருகோணத்தில் இருப்பதாலும் முன்னேற்றப் பலன்கள் உண்டு.  இதுவரை இருந்து வந்த பலவிதமான பிரச்சனைகளிலிருந்து விடுபடுவீர்கள்.  பின்தங்கிய நிலையிருப்பவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்வார்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்களுடைய உடல்நலத்தை  பொறுத்த வரை கால் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை ஏற்படலாம். நல்ல பணப்புழக்கம்  இருக்கும். எடுத்த காரியம் அனுகூலத்தைக் கொடுக்கும். மதிப்பு மரியாதை சீராக இருக்கும். வீன்விவாதங்களைத் தவிர்க்கவும். குடும்பத்தில்  தம்பதிகளிடையே இடையே இருந்து வந்த பிரச்சனைகள் சுமூகமாக மறையும். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். முயற்சிகளின் பேரில்  சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு,  மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது. நண்பர்கள், உறவினர்கள்  அன்னியோன்னியமாக இருப்பர். ராசியில் விரையாதிபதி செவ்வாய் இருப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகமாக உழைக்க  வேண்டியிருக்கும். சற்று முயற்சி எடுத்தால் பதவி உயர்வு உங்களை வந்து சேரும். எதிர்பார்திருந்த பணி இடமாற்றம் உங்களை வந்து சேரும்.  மேலதிகாரிகளின் அனுசரனை இருந்துவரும். வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றைப் பெறலாம். லாபம் அதிகரிக்கும். உங்கள் வியாபாரத்தை  விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை வீழ்த்துவதற்குண்டான பாதைகளை வகுத்துக் கொள்வீர்கள். புதியதாக ஆரம்பித்த தொழிலில் ஏற்றம் உண்டு.  இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும். கூட்டளிகளிடையே ஒற்றுமை பலம் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய  ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால்  பிரச்சனைகள் வரலாம். அரசியல்வாதிகள் சீரான பலனை எதிர்பார்க்கலாம். மாணவமணிகள் சிரத்தை எடுத்து படிப்பர். ஆனாலும் கல்விஸ்தானத்தை  செவ்வாய் பார்ப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன்கள் வந்தே தீரும். வழக்கு விவகாரங்கள் மேலும் தள்ளிப் போகும்.
பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் சிவன் கோவிலை வலம் வாருங்கள்.
----------------------------------------------------------------------------------------------------
மிதுனம்:
 
”சாமர்த்திய மிதுனம்” என்பதற்கேற்ப எந்த செயலிலும் தங்களது நல்ல சாதுர்ய குணத்தை வெளிப்படுத்தும் குணமும் கொண்ட மிதுன ராசி வாசகர்களே  ராசியில் ராசிநாதன் புதன் ஆட்சியாக இருப்பதால் மிகுந்த அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தைரியவீர்யாதிபதி சூர்யன் அந்த ஸ்தானத்திற்கு  பத்தாமிடத்தில் செவ்வாயுடன் இருப்பதால் வீண்கலகமும் அலைச்சலும் இருக்கும், இருப்பினும் ராசியில் குருவின் இருப்பு இருப்பதால் காரிய அனுகூலமும்  நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். லாபஸ்தானத்தில்  ஸ்தானத்தில் இருக்கும் கேதுவால் முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக  நடந்து கொள்வர்.  குருவின் பலத்தால் தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும்  ஆனந்தமும்  பெருகும். ஏதேனும் ஒரு காரணத்தால் குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றவர்கள் என்று சேருவார்கள். கணவன்-மனைவி இடையே அன்பும்  பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள்,  நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும். உடல்நலனைப் பொறுத்த வரை சிறப்பாக இருக்கும். சளி மற்றும் மார்புத்தொல்லை வரலாம். கவனம்  தேவை.  உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும். உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள்  ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக  இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தை விட  வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். எதிரிகளால் இருந்து வந்த தொந்தரவு நீங்கும்.
அதே நேரம் சனியுடன் இருக்கும் ராகு சாதகமாக காணப்படாததால் நீங்கள் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும். வேலை இல்லாமல்  இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலகட்டமிது. பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழில்  அதிக வருவாய் கிடைக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே அரசிடம் இருந்துதான் கோரிக்கைகள் நிறைவேறும். கலைத்துறையினருக்கு புதிய  ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். பாராட்டுகளும் கிடைக்கும். அரசியல்வாதிகள்,
சமூக நல சேவகர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. மாணவகண்மணிகளுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. நல்ல மதிப்பெண்கள்  கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும்.
பரிகாரம்: புதன்தோறும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றவும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
 
கடகம்
”உணர்ச்சிக் கடகம்”  என்பதற்கேற்ப அனைவரது உணர்ச்சிகளை மதிக்கும் சிந்தனையில் இருக்கும் கடக ராசி வாசகர்களே ராசியை சனி பார்த்தாலும்   குரு பகவான் விரையஸ்தானத்தில் இருந்து சுகஸ்தானத்தைப் பார்ப்பதால்  நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும்.  உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும்.  ஆனாலும் தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க  நினைத்த பொருளை வாங்கலாம். நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். அவர்களால் உதவிகள் பெறலாம். சுபநிகழ்ச்சிகளுக்கு  இப்போது திட்டமிடலாம். வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம். புதிய வீடு  கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபுகவும் வாய்ப்புண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கலாம். விருந்து  விழா என உல்லாசமாக பயணம் மேற்கொள்வீர்கள். சந்தாணபாக்கியம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியைக் காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் தவறை உணர்ந்து உங்களிடம் வந்து சரணடைவார்கள். நீண்ட  நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவீர்கள். சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்ததை விட  அதிகமாக கிடைக்கும். உங்கள் ஆற்றல் மேம்படும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள்  வந்து சேரும். தொழில் புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். அலைச்சலும் வேலைப் பளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும். அதே  வேளையில் நீங்கள் சென்ற இடமெல்லாம் அனுகூலம் ஏற்படும். சேமிப்புகள் அதிகரிக்கும். நல்ல வருமானத்தைக் காண்பர். படிப்படியாக லாபம்  அதிகரித்துக் கொண்டே இருக்கும். புதிய தொழில் தொடங்குவற்குண்டான வேலைகளுக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும். கலைத்துறையினருக்கு  புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்கனவே இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நெடுநாளாக வராமல் இருந்த பணம் வரும்.  பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. உங்கள் சொல்லுக்கு பிறர் கட்டுப்படும் நிலையும்  உருவாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். கடந்த சில மாதங்களாக இருந்து வந்த மந்தநிலை அடியோடு மாறும்.  சிலருக்கு வெளிநாடு சென்று படிப்பதற்குண்டான காரியங்களை இப்போது தொடங்கலாம். தொழிலை விரிவாக்கம் செய்யலாம். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். உடல் அசதி சோம்பல்  நீங்கும். மருத்துவ செலவு குறையும்.
 
பரிகாரம்: திங்கள்தோறும் சிவனையும் அம்பாளையும் வணங்குங்கள்.
----------------------------------------------------------------------------------------------
 
சிம்மம்:
 
“சிம்மம் பெருமை” என்பதற்கேற்ப  எந்த காரியத்தைக் கொடுத்தாலும் அதில் பெருமை தேடித்தரும் சிம்ம ராசி வாசகர்களே ராசிநாதன் சூரியன் பத்தில்  இருக்கிறார். தனலாபாதிபதி புதன் லாபஸ்தானத்தில் ஆட்சியாக இருக்கிறார்.  மாத பிற்பகுதியில் விரையஸ்தானத்தில் தனாதிபதி உலவுகிறார்.  பொருளாதார வளம் சீராக இருக்கும். அதே வேளையில் செலவும் அதிகரிக்கலாம். சிக்கனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். மனைவி  வழியில் சிற்சில கருத்துவேறுபாடுகள் வரலாம். ஆனாலும் அது நொடிப் பொழுதில் சரியாகி விடும். ஆனால் உறவினர்கள் மத்தியில் தொடர்ந்து கருத்து  வேறுபாடு வரலாம். அவர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருங்கள். மனதில் நிம்மதியும் ஆனந்தமும் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை காணலாம்.  அக்கம்பக்கத்தாரிடம் இருந்து வந்த கசப்புணர்ச்சி நீங்கும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். சந்தாண பாக்கியம்  கிடைப்பதற்கு யோகமான காலகட்டம் இது. புதிய வீடு மனை வாங்க தடைகள் ஏற்படலாம். ராசிநாதன் பத்தில் செவ்வாயுடன் இருப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைபளுவை சுமந்தாலும் அனைத்தையும் சுலபமாக செய்வீர்கள். அலைச்சல்கள் வரலாம். சிலருக்கு விரும்பிய  இடமாற்றம் கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் உதவிகள் செய்து அனுசரனையாக இருப்பார்கள். உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள  பொறுப்புகளை நீங்கள் திறமையாகச் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு உங்களுடைய வியாபாரம் சீராக நடக்கும். அதிக உழைப்பை செய்தவர்களுக்கு ஏற்ற  பொருளாதார வளம் வந்து சேரும். புதிய தொழில் ஆரம்பித்தவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. மூதலீடுகளை திருப்பி எடுப்பதோடு  மட்டுமல்லாமல் லாபத்தையும் அள்ளுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாக வருவார்கள். கூட்டு வியாபாரம் செய்பவர்களுக்குள் இருந்து வந்த சுணக்க  நிலை மாறும். வரவு செலவு கணக்கில் இருந்து வந்த சந்தேகங்கள் நீங்கும். சுக்கிரன் லாபாதிபதியுடன் சஞ்சரிப்பதால் கலைத்துறையினருக்கு மிகப்  பொன்னான காலமிது. சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் வந்து குவியும். புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம். எதிர்பார்த்த புகழ்  ,பாராட்டு கிடைக்கும். வித்யாஸ்தானதிபதி செவ்வாய் பத்தில் அமர்ந்து ராசியைப் பார்ப்பதால் மாணவமணிகள் சிறிது சிரத்தை எடுத்தாலே பெருவெற்றி  பெறலாம். அனைத்திலும் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிடைக்கும். உடல் நலம் சிறப்படையும். பித்தம்  மயக்கம் போன்ற உபாதைகள் நீங்கும். சர்க்கரை நோயுள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு தேவை. நெருப்பு தொடர்பான வேலைகளில்  இருப்பவர்களுக்கு மிகுந்த கவனம் தேவை.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள காலபைரவரை வணங்குங்கள்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
கன்னி:
 
“கன்னி புத்தி” என்பதற்கேற்ப எல்லாத் துறைகளிலும் ஆற்றல் பெற துடிக்கும் கன்னி ராசி வாசகர்களே பத்தாம் இடத்தில் ராசிநாதன் ஆட்சியாக இருப்பது சிறப்பு.  அவருடன் இருக்கும் குருவின் பார்வை உங்கள் தனஸ்தான ராசியில் படுவதும் நன்மையே, தனபாக்கியாதிபதி சுக்கிரன் இருப்புடன் உள்ள தொழில் ஸ்தானம், நல்ல பொருளாதாரம்  வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.  மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தமப்திகளிடையே அன்பு மேலோங்கும். மனைவி வழியில்  அவ்வப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு, மோதல்கள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள்  நடந்தேறும். நல்ல வரன் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். வீடு மனை விஷயத்தில் இருந்து வந்த  சுணக்க நிலை மாறும். புதிய சொத்து வாங்கலாம்.தொழில் சிறக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். விருந்து விழாவிற்காக செலவுகள் செய்வீர்கள்.  வாகன பிராப்தி உண்டு. வீட்டுக்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கும் போது கவனம் தேவை. உத்தியோகம் பார்ப்பவர்கள் உன்னத  நிலையை அடையலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை இருக்கும். மேல் அதிகாரிகளின் ஆத்ரவு கிடைக்கும். சக ஊழியர்களின் உதவி  கிடைக்கும். சிலர் அதிகாரி அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலையின்றி இருப்பவர்கள் மிகுந்த முயற்சிக்குப் பின் வேளை பெறுவர். வேலை  நிமித்தமாக வெளியூர் சென்றவர்கள் மீண்டும் குடும்பத்திடம் ஒன்று சேர்வர். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக்  காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம்.  தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம். இந்த வேளையில் யாரிடமும் சற்று கவனமுடன் பார்த்து பழக  வேண்டியது அவசியமாகிறது. வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்க சரியான தருணமிது. கலைஞர்களுக்கு  தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள்  உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும்.மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.  உடல்நலத்தைப் பொறுத்தவரை சிறப்படையும். மனதில் இருந்து வந்த இனம்புரியாத வேதனை மறையும். பிள்ளைகளின் உடல்நலத்தில் சீரான  முன்னேற்றம் இருக்கும்.
பரிகாரம்: தனஸ்தானத்தில் ராகு சனியும் இணைந்திருப்பதால் முடிந்தவரை வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்குச் சென்று வரவும்.
------------------------------------------------------------------------------------------------------------
துலாம்:
”சமம் தராசு” என்பதற்கேற்ப அனைத்து விதமான மக்களையும் ஒரே நியாயத் தராசில் வைத்துப் பார்க்கும் துலாம் ராசி வாசகர்களே தற்போதிருக்கும்  கிரக சூழ்நிலையில் பல்வேறு இன்னல்களுக்குடையிலும் நன்மைகளை அனுபவிக்கப் போகிறீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த குறைகள்  ஒவ்வொன்றாக மாறும். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்திற்குண்டான பாதைகளை வகுப்பீர்கள். அதே வேளையில் குருவும் உங்களுடைய பாக்கியஸ்தானத்தில் இருந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் தெய்வ அனுகூலமும் உங்களுக்கு  உண்டு. பொருளாதார வளம் சிறப்படையும். காரிய அனுகூலங்களும் உண்டு. ராசியில் இருக்கும் சனி, ராகுவாலும், சப்தமத்தில் இருக்கும் கேதுவாலும்  செய்யும் முயற்சிகளில் தடை வந்தாலும் அதனை முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு உண்டு என்பதை உணருங்கள். தம்பதிகளிடையே அன்பு  அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் உடனே நிறைவேறாமல் போகலாம். எனினும் முயற்சிகளை தொடர்ந்து செய்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்கள்  தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும்.  உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். எந்த வேலையையும் நேரம் தவறாமல் செய்யவும்.  தள்ளிப் போடுதலும் கூடாது. தொழில் செய்பவர்கள் பின் தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு  அதிகரிக்கும். தீயோர் சேர்க்கையால் அவதிப்பட்டவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்குவதற்குண்டான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில்  தொடங்கலாம். அதேநேரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரும். மாதபிற்பாதி மிகவும்  நன்றாக இருக்கும். வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள  பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். சுய ஜாதகத்தில் திசாபுக்திகள் அனுகூலமற்றுயிருப்பின் தவறான  வழிமுறைகளில் செல்வம் கரையவும் வாய்ப்புண்டு. எச்சரிக்கையாக இருக்கவும். மூன்றாம் வீட்டுக்குரியவர் ஒன்பதில் இருந்து அந்த ஸ்தானத்தைப் பார்ப்பதால் நீண்ட நாட்களாக இருந்து வந்த  இளைய சகோதரத்தின் சுபநிகழ்ச்சிகள் அரங்கேறும்.  வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம்  அன்பு, பாசம் காட்டுவது நல்லது. ராசிநாதன் சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் கலைத்துறையினருக்கு சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.  ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகளுக்கு  மாதமுற்பகுதி பாடுபட வேண்டியிருந்தாலும், பிற்பாதி மிகவும் நன்றாக இருக்கும். மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்துபடிப்பது அவசியமாகும்.  உடல்நலனைப் பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து வந்து மறையும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலில் உள்ள நவக்ரஹ சன்னிதியை ஒன்பது முறை வலம் சென்று வழிபடவும்.
-----------------------------------------------------------------------------------------
விருச்சிகம்:
”உழைப்பவரே உயர்ந்தவர்” என்பதற்கேற்ப உழைப்பை மட்டுமே நம்பி சாதனைகளை புரிய விருப்பப்படும் விருச்சிக ராசி அன்பர்களே, ராசிநாதன் செவ்வாய் ஏழாம் இடத்தில் இருந்து பல்வேறு நற்செயல்களை நடத்திக் கொண்டிருக்கிறார். ஏழாம் ஸ்தானத்தில்  இருந்து தொழில் ஸ்தானத்தையும், ராசியையும், தனஸ்தானத்தையும்   பார்க்கிறார். குடும்பத்தில் இருந்து வந்த சின்ன சின்ன குழப்பங்கள் மறைந்து நன்மைகள் கிடைக்கும். ஏழரை சனி விரையஸ்தானத்தில் இருந்து சிற்சில குழப்பங்களை விளைவித்தாலும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வர். கொள்கைப் பிடிப்பில் தளர்ச்சி ஏற்படலாம். தைரியவீர்ய ஸ்தானாதிபதி சனி அந்த ஸ்தானத்திற்கு பத்தாம் இடத்தில் இருப்பதாலும் ராகுவுடன் சேர்ந்திருப்பதாலும் தைரியம் பளிச்சிடும். எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். தடைகளை முறியடித்து காரிய வெற்றி பெறலாம். வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். ஆறில் இருக்கும் கேதுவால் பித்தம், வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் சில பாதிப்புகள் வரலாம். எனவே உணவு கட்டுப்பாடு அவசியமாகிறது.  தந்தை, தந்தை வழி உறவினர்கள், பிள்ளைகளுடன் கருத்து மோதல்கள் வரலாம்.  நண்பர்களிடத்தில் மனக்கிலேசம் ஏற்படலாம். சுபச்செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். சுகஸ்தானாதிபதி சனி தனஸ்தானத்தைப் பார்ப்பதால் வரவுக்கு எந்த வித குறையும் இருக்காது. தொழில் ஸ்தானத்தை ராசிநாதன் செவ்வாய் பார்ப்பதால் உத்தியோகத்தில் எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த வாராக்கடன் அனைத்தும் வசூலாகும். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இட மாறுதல் கிடைக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். அதே நேரம் சில புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும். தீவிர முயற்சிகளினாலேயே அரசு சார்ந்த காரியங்கள் நடைபெறும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக சேவையில் உள்ளவர்களுக்கு மாத முற்பகுதி மிகுந்த உற்சாகமாக இருக்கும். பிற்பாதி கவனமுடன் இருக்க வேண்டி வரும்.
பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றவும்.
-------------------------------------------------------------------------------------
தனுசு:
“வில்லுக்கு சீரிய சிந்தனை ” என்பதற்கேற்ப எதிலும் நேர்மையுடனும் நேர்மறையான சிந்தனைகளுடனும் இருந்து காரியத்தை சாதிக்கும் தனுசு ராசி அன்பர்களே ராசிக்கு தொழில் ஸ்தானாதிபதி புதன், லாபாதிபதி சுக்கிரன்,  ராசிநாதன் குருவும் பார்க்க என  நல்ல பலன்களையே கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும். உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும். ஆறாம் இடத்தில் செவ்வாய் இருந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் தைரியமாக பீடு நடை போட்டு உங்கள் வேலைகளை செய்வீர்கள்.  மாத முற்பாதியில் கொடுத்த வாக்கை காப்பாற்ற போராட்டம்   ஏற்படலாம். கவனம் தேவை. தம்பதிகளுக்கும் இணக்கமான சூழ்நிலை நிலவினாலும் மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் இறைவனின் வல்லமையால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். ஐந்தாமிடத்தில் கேது இருந்தாலும் குறைகளை உருவாக்கமாட்டார். லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கும் தனதைரியவீரியஸ்தானாதிபதி சனி   எட்டாமிடத்தையும், ராசியையும் பார்க்கிறார் என்பதால் பணம் சம்பந்தப்பட்ட இனங்களில்  நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். ஒன்பதாமதிபதி சூரியன் அந்த ஸ்தானத்திற்கு பத்தில் இருக்கிறார்.  ராசியை வியாழ பகவான் பார்ப்பதால் காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். தொழில் ஸ்தானத்தை பஞ்சம விரையாதிபதி செவ்வாய் பார்ப்பதால் வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும். எனினும் வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள். பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும்.   கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். மாணவக் கண்மணிகளுக்கு படிப்பில் நிதானமும் கவனமும் தேவை. அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு மாத முற்பாதியில் பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் பிற்பாதி சிறப்பாக இருக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் உங்களுக்குப் பிடித்தமான  குரு கோவிலுக்குச் சென்று வணங்கி வாருங்கள்.
----------------------------------------------------------------------------------
மகரம்:
“மகரம் பணி” என்பதற்கேற்ப எந்த வேலையைக் கொடுத்தாலும் சோம்பலில்லாமல் செய்ய துடிக்கும் மகர ராசி அன்பர்களே சில நன்மைகள் தரக்கூடிய வகையில் ராசிநாதன் சனி சஞ்சரிக்கிறார். ராசிநாதன் சனி பத்தில் அமர உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆனால் அஷ்டமாதிபதி சூரியன் ராசிக்கு ஐந்தில் அமர்வதால் பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் சம்பவங்கள் நடந்தாலும் சில அனுகூலம் ஏற்படும். அவர்களால் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு இது சிறப்பான காலகட்டமாகும். தொழிலில் நற்பெயர் கிடைக்கும். மேலதிகாரிகளின் அனுசரனை கிடைக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் பிரத்தியேகமான சலுகைகளை பெற முடியாமல் போகலாம். ஆனாலும் பதவி உயர்வும் சம்பள உயர்வும் தங்கு தடையின்றி கிடைக்கும். வெளிநாடு சென்று பொருள் ஈட்டி வருவீர்கள். வியாபாரிகள் முன்னேற்றப் பாதையில் செல்ல முடியும். நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கக் கூடிய முயற்சிகள் ஆலோசனைகளில் ஈடுபடலாம். வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். கலைஞர்கள் நல்ல புகழும் பெருமையும் கிடைக்கப் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகள், சமூக சேவை செய்வோர் நல்ல செல்வாக்கோடு காணப்படுவர். உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். மாணவ மணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வாருங்கள். நீராஞ்சன தேங்காய் தீபம் ஏற்றவும்.
----------------------------------------------------------------------------------------------------------
கும்பம்:
“கும்பம் பந்தம்” என்பதற்கேற்ப சொந்த பந்தங்களின் மேல் அதீத பாசம் வைத்திருக்கும் கும்ப ராசி வாசகர்களே சில நன்மைகளை அளிக்கும் வகையில் குரு பகவானும் ராசிநாதன் சனியும் சஞ்சரிக்கிறார்கள். உங்களின் பொருளாதார வலிமை  கூடும்.அதே வேளையில் பொருட்களின் மீது கவனமும் தேவை. இழப்பு ஏற்படலாம். சுகஸ்தானாதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருப்பதால் வாழ்க்கையில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கைவளம் முன்னேறும். மூன்றாமிடத்து அதிபதி செவ்வாய் சுகஸ்தான ராசியில் இருப்பதால் தைரியமாக பீடு நடை போட்டும் அதே வேளையில் தெய்வ அனுகூலத்துடனும் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சகோதர சகோதரிகளிடம் நெருக்கம் அதிகரிக்கும். குருவால் வேலை செய்யும் இடத்தினில் சிற்சில பிரச்சனைகள் தீர்ந்து நன்மையான விஷயங்கள் வந்து சேரலாம். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் வீட்டில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் தலைதூக்கலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதால் நிலைமையைச் சமாளிக்கலாம். உறவினர் வகையிலும் கூட ஒருவருடன் மனஸ்தாபம் உருவாகலாம். அதீத எதிர்பார்ப்புகள் வேண்டாம். சிலருக்கு தூரத்திலிருந்து விரும்பத்தகாத செய்திகள் வரலாம். தீவிர முயற்சிகளின் பேரில் சிலருக்கு சுபமான நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற பிரதிபலன் கிடைக்காமல் இருந்தவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் நன்மை நடக்கும். சிலருக்கு இடமாற்றம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகள் நடக்கும். உடன்பணிபுரிவோரால் அனுகூலம் உண்டு. உங்கள் பொறுப்புகளை வேறு நபரிடம் ஒப்படைக்க வேண்டாம். வியாபாரத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அலைச்சல் இருக்கும். தொழில் நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். கூட்டு வியாபாரத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிலும் முதலீடு செய்வதற்கு முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை செய்து கொள்ளவும். இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழ்ந்திட முயற்சியுங்கள். கலைத்துறையினருக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம். அரசியல்வாதிகள், சமூக சேவகர்கள் பிரதிபலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.

பரிகாரம்: சனிக்கிழமைதோறும் சனிஹோரையில் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.  (காலை 6 - 7)

-------------------------------------------------------------------------------------

மீனம்:
“மீனம் ஓட்டம்” என்பதற்கேற்ப வாழ்க்கையில்  கடுமையான உழைப்பிற்கு எப்போதுமே தயங்காத முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக செயல்படும் மீன ராசி அன்பர்களே எந்தத் துறையிலும் முத்திரையைப் பதிப்பீர்கள். இடம் விட்டு இடம் பெயரும் சூழ்நிலையை உருவாகும். உங்களின் தரத்தை விட தீயோரோடு சகவாசத்தை குறைக்க வேண்டும். எனினும் தெய்வ அனுகூலத்தால் விடுபட்டு முன்னேற்றம் வந்து சேரும். உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். அதீத உழைப்பின் மூலமே அனைத்து நற்பலன்களையும் பெற முடியும். எட்டாம் இடத்தில் இருக்கும் சனி ராகுவால் பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும்  முன்னேற்றங்களையும் பெறலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் அகலும். உங்கள் முயற்சிகளில் வெற்றியையும், பொருளாதார வளத்தையும் மூன்றாம் இடத்தில் இருக்கும் குரு அள்ளித் தருவார். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும். மிகவும் உதவிகரமாக இருப்பர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும். மாத பிற்பாதியில் புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால் அதற்காக சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் காண்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை தங்கு தடையின்றி கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவுடன் இருப்பர். வேலையின்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். வியாபாரிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய வியாபாரம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும். இருப்பதை சிறப்பாக நடத்துவதற்கு முயற்சி செய்யவும். அறிவைப் பயன்படுத்தி ஏற்றம் காணலாம். கலைஞர்கள், புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். புகழ் பாராட்டு கிடைக்கும். மாணவர்கள் தொடர்ந்து சிறப்பான நிலையில் இருப்பர். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். பலருக்கு வெற்றி நிச்சயம். பொதுநல சேவகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். அரசியல்வாதிகளுக்கு மாத முன்பகுதி நன்றாக இருக்கும். எதிர்பார்த்த பதவியை அடையலாம். பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். கணவர் மற்றும் அண்டை அயலாரின் அன்பும் பாசமும் கிடைக்கும். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். பித்தம், மயக்கம் தொடர்பான உபாதைகள் வரலாம்.

பரிகாரம்: அருகிலிருக்கும் ஏதேனும் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்.

No comments: