Wednesday, January 2, 2013

மிதுனம் - ராசிபலன்கள் - 2013

மிதுனம்: மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும், மரியாதை கொடுக்கும் மிதுன இராசி வாசகர்களே!
நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர். வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். எப்படி இருக்கப் போகிறது இந்த 2013ம் ஆண்டு?



கிரகநிலை:
இந்த 2013ம் புத்தாண்டில் உங்கள் ராசிக்கு ராகு 5-ம் இடத்திலும் கேது உங்கள் லாபஸ்தானராசியிலும் சனி உங்கள் ராசிக்கு 5-ம் இடத்திலும், குரு மே மாதம் 26-ம் தேதிவரை விரையஸ்தானத்திலும் மே மாதம் 27-ம் தேதி முதல் உங்கள் ராசியிலும் சஞ்சரிக்கப்போகிறார்கள். இனி பலன்களைப் பார்க்கலாம்.
இந்த ஆண்டு, உங்களின் அயன சயன மோட்ச ஸ்தானத்தில் இருக்கும் குரு பகவான். இதனால் உங்களின் பொருளாதார நிலை மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொது நலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும்.
ஸ்திர ராசியில் வலுப்பெற்று சஞ்சரிக்கும் குரு பகவானால் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். "பங்குச் சந்தை' முதலீடு போன்ற இனங்கள் மூலம் திடீர் பண வரவு உண்டாகும்.
இந்த ஆண்டு லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான், உங்களின் ஆன்மீக நாட்டத்தை அதிகப்படுத்துவார். குல தெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். சிலருக்கு நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும். இவை ஒருபுறமிருக்க, இந்த ராசி நேயர்கள் பலருக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும். இதனால் உடலில் அவ்வப்போது சோர்வு உண்டாகும்.
பூர்வபுண்ணிய பஞ்சமஸ்தானத்தில் ராகு பகவான் சனியுடன் சஞ்சரிப்பதால் தனித்து நின்று போட்டிகளைச் சமாளிக்க வேண்டிவரும். கடினமான காரியங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உங்களின் உடல் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். உங்கள் நடையில் ஒரு மிடுக்கு உண்டாகும். அவ்வப்போது சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். வசிக்கும் வீட்டை பழுது பார்ப்பதற்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை சாதுர்யமாகச் சமாளிக்க சனி பகவான் உதவுவார். சிலர் புதிய இல்லங்களுக்கு மாறுவார்கள்.
உங்களின் பூர்வபுண்ய புத்திர ஸ்தானத்தில் உச்சம் பெற்று, சஞ்சரிக்கிறார் சனி பகவான். இதனால் உங்களுக்கு பேராற்றல் உண்டாகும். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். "சாமர்த்தியசாலி' என்று பெயர் எடுப்பீர்கள். உற்றார், உறவினர்கள் உங்களுக்கு உதவிகரமாக நடந்து கொள்வார்கள். நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். இதனால் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள்.
உத்யோகஸ்தர்கள் இந்த ஆண்டு கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல் பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். இல்லையேல் கிடுக்கிப்பிடிதான்! எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும். இதற்குப் பயனும் உண்டு. உங்கள் உடல் உழைப்பிற்கு மேல் இரு மடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். லாப ஸ்தானத்தை சனி பகவான் பார்ப்பதால் சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்; பயணங்களும் பலன் தரும்.
வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் உங்கள் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய முதலீடுகளையும் துணிந்து செய்யலாம்.
விவசாயிகளின் திறமைகள் வீண் போகாது; அமோகமான விளைச்சலைக் காண்பீர்கள். புழு, பூச்சிகளின் பாதிப்பிலிருந்து பயிர்களைக் காப்பாற்ற செலவு செய்ய நேரிடும். சக விவசாயிகளுக்கும் சிறு உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உங்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் தொல்லை தர மாட்டார்கள். உப தொழில்களிலும் கவனம் செலுத்துவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். கட்சிப் பிரச்சாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அதேசமயம் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் செயலாற்றவும்.
கலைத்துறையினருக்கு திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள். சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும் என்பதால் சேமிப்பு விஷயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
பெண்மணிகளுக்குக் கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதே சமயம் குடும்பத்தில் உங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் நடந்து கொண்டு அமைதி காப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
மாணவமணிகள் புத்திசாலித்தனமாகச் செயல்படுவீர்கள். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பாராட்டைப் பெறுவீர்கள். உடற்பயிற்சிகளை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களின் அறிவுரைப்படி நடந்துகொண்டு மேலும் சிறப்படையுங்கள்.
பரிகாரம்: சங்கட சதுர்த்தி தினங்களில் விநாயகரை வழிபடவும். முடிந்தபோதெல்லாம் ஔவையார் அருளிய "விநாயகர் அகவல்' துதியை பாராயணம் செய்யவும். இதனால் பல சங்கடங்கள் தவிடுபொடியாகும். இயன்றவர்கள், குடந்தைக்கு அருகிலுள்ள "திருவலஞ்சுழி' தலத்துக்குச் சென்று ஸ்வேத விநாயகரையும், சிவபெருமானையும் தரிசித்துவிட்டு வரவும். அதனால் கிடைக்கும் புண்ணிய பலன்களை எண்ணி மாளாது!
இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுபலன்களே. இவை ஜாதகத்திற்கு ஜாதகம் திசை ரீதியாக மாறலாம்.

No comments: