Tuesday, January 15, 2013

ஆதித்யஹ்ருதயம் - பாகம் இரண்டு

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தின் முதல் ஐந்து சுலோகங்களை சென்ற பகுதியில் பார்த்தோம். இந்தப் பகுதியில் ஆறாவது சுலோகத்திலிருந்து பார்க்கலாம்.

ரஸ்மிமந்தம் ஸமுத்யந்தம் தேவாசுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் 6

rasmimantham samudyantham dEvAsura namaskrutham
puujayasva vivasvantham bhAskaram bhuvanEsvaram 6

ரஸ்மிமந்தம் - இதமான பொன்னிறக் கதிர்களை உடையவன். ரஸ்மி என்றால் பொன்னிறக் கதிர்கள். ரஸ்மிமந்தம் என்றால் பொன்னிறக் கதிர்களை உடையவன்.

ஸமுத்யந்தம் - தினந்தோறும் தவறாமல் உதிப்பவன்; எந்தவித வேறுபாடும் இல்லாமல் எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவன்.

தேவாசுர நமஸ்க்ருதம் - தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படுபவன். எல்லோருக்கும் சமமாக ஒளி தருவதால் தேவர்களும் அசுரர்களும் இவனை வணங்குகிறார்கள். (தேவர்களும் அசுரர்களும் இரு வேறு இனத்தவர்கள் என்றொரு கருத்தாக்கம் இப்போது வழங்கி வருகிறது. அந்தக் கருத்தாக்கம் உண்மையெனில் இந்த சொற்றொடர் இரு இனத்தவர்களும் சூரியனை வணங்கிவந்தார்கள் என்பதைச் சுட்டுகிறது. உலகில் எல்லா இனங்களும் பகலவனைப் போற்றியிருக்கிறார்கள் என்பது இப்போது தெரிவதும் அந்த எண்ணத்திற்குத் துணை செய்கிறது).

பூஜயஸ்வ - வணங்கத் தகுந்தவன். எல்லோருக்கும் சமமாக ஒளி தருபவன்; கடமைக்கு ஒரு நேரடி எடுத்துக்காட்டாக இருப்பவன். அதனால் எல்லோராலும் வணங்கப்படுபவன்; அப்படி வணங்கத் தகுந்தவன்.

விவஸ்வந்தம் - தன்னுடைய ஒளியால் சூரிய மண்டலத்தை வலம் வருபவன். பகலவனின் ஒளி வெகு தூரம் பாய்கிறது. அங்கெல்லாம் அவன் வலம் வருகிறான். அதனால் அவனுக்கு விவஸ்வான் என்று பெயர்.

பாஸ்கரம் - ஒளியை உண்டு பண்ணுபவன். உலகத்தில் தோன்றும் எல்லா சோதிகளும் இவனை அடிப்படையாகக் கொண்டவையே. பகலவனாகத் தானே ஒளிர்கிறான்; சந்திரனுக்குத் தன் ஒளியைத் தந்து ஒளிர வைக்கிறான். இவன் ஒளியால் தோன்றிய பொருட்களில் தீயை உண்டு பண்ணி தீயை ஒளிர வைக்கிறான்.அதனால் இவனே எல்லா ஒளிகளையும் உண்டுபண்ணுபவன். பாஸ்கரன்.

புவனேஸ்வரம் - இப்படி எல்லா இயக்கங்களுக்கும் காரணமாக இருப்பதால் இவனே உலகங்களுக்கெல்லாம் தலைவன்.

ஸர்வ தேவாத்மகோ ஹ்யேச தேஜஸ்வீ ரஸ்மிபாவன:
ஏச தேவாசுர கணான் லோகான் பாதி கபஸ்திபி: 7

sarva dEvAthmakO hyEsa tEjasvee rasmibhavana:
yEsa dEvAsura ganAn lOkAn pAti gabhastibhi: 7

ஸர்வ தேவாத்மகோ ஹ்யேச - இவனே எல்லா தேவர்களாகவும் இருக்கிறான். ஸர்வ தேவ ஆத்மக: என்றால் 'எல்லா தேவர்களின் உருவமாக' என்று பொருள். ஹி என்றால் 'உறுதியாக இருக்கிறான்' என்று பொருள். ஏச என்றால் இவன்; இந்த புருஷன் என்று பொருள்.

தேஜஸ்வீ - ஒளிமயமானவன்; வீரன்.

ரஸ்மிபாவன: - தன்னுடைய இதமானப் பொன்னிறக் கதிர்களால் எல்லாவற்றையும் பாதுகாப்பவன்.

ஏச - இவனே

தேவாசுர கணான் - தேவர்களின் கூட்டத்தையும் அசுரர்களின் கூட்டத்தையும்

லோகான் - எல்லா உலகங்களையும்

பாதி கபஸ்திபி: - தன்னுடைய கதிர்களால் பாதுகாக்கிறான்.

ஏச ப்ரஹ்மாச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:
மஹேந்த்ரோ தனத: காலோ யம: ஸோமோ ஹ்யபாம்பதி: 8

yEsa brahmAcha vishnusca siva: skanda: prajApathi:
mahEndrO dhanada: kAlO yama: sOmO hyapAmpati: 8

ஏச - இவனே

ப்ரஹ்மா ச - படைக்கும் கடவுளாகிய பிரம்மனும், பெரிதிலும் பெரிதானவனும் (ப்ரஹம என்றால் பெரியது என்று பொருள்)

விஷ்ணுச்ச - காக்கும் கடவுளாகிய விஷ்ணுவும், எங்கும் நிறைந்திருப்பவனும் (விஷ்ணு என்றால் எங்கும் நிறைந்தது என்று பொருள்)

சிவ: - அழிக்கும் கடவுளாகிய சிவனும், மங்கல உருவானவனும் (சிவ என்றால் மங்கலம் என்று பொருள்)

ஸ்கந்த: - தேவ சேனையின் தலைவனான முருகனும், அனைத்தையும் இணைப்பவனும் (ஸ்கந்த என்றால் இணைப்பு என்று ஒரு பொருள்), அன்பிற்கும் அறிவிற்கும் அனைத்திற்கும் ஊற்றாக இருப்பவனும் (ஸ்கந்த என்றால் ஊறவைப்பவன் என்றும் ஒரு பொருள்)

ப்ரஜாபதி: - மக்களின் தலைவனும்

மஹேந்த்ரோ - தலைவர்களுக்கெல்லாம் தலைவனான தேவேந்திரனும்

தனத: - செல்வத்தை அருளும் குபேரனும்

காலோ - காலமும்

யம: - யமனும், தண்டித்து நல்வழிப்படுத்துபவனும் (யம என்றால் தண்டிப்பவன், நல்வழிப்படுத்துபவன் என்று பொருள்)

ஸோமோ - சந்திரனும்

ஹி - உறுதியாக

அபாம்பதி: - நீரின் தலைவனான வருணனும்

முதலில் மும்மூர்த்திகளாக இருப்பவன் சூரியன் என்று சொல்லிவிட்டு பின்னர் மற்ற தெய்வங்களை எல்லாம் சொல்லி வருகிறார். மும்மூர்த்திகளுக்கு அடுத்து முருகனை முதலில் சொன்னதைப் பார்த்தால் வைதீக தெய்வங்களில் முருகனின் முதன்மை தெரியும். அகத்தியர் தன் குருவான முருகனை முதலில் சொன்னார் என்றாலும் சரியே.

பிரஜாபதி என்று பிரம்ம தேவரைத் தான் சொல்வார்கள். மும்மூர்த்திகளைச் சொல்லும் போதே பிரம்ம தேவரைச் சொல்லிவிட்டார் ஆகையால் மீண்டும் ப்ரஜாபதி என்று யாரைச் சொல்கிறார் என்று தெரியவில்லை. கணபதியை ப்ரம்மணஸ்பதி என்று தொடக்கக் கால மந்திரங்கள் சொல்வதால் இங்கே கணபதியைக் குறிக்கிறாரோ என்ற எண்ணம் உண்டு. ஸ்கந்தனைச் சொன்னவுடனே ப்ரஜாபதியைச் சொன்னதால் அது ப்ரம்மணஸ்பதியாகிய கணபதியாக இருக்கவும் வாய்ப்புண்டு.

அதற்கடுத்து முறையே தேவர்களில் முதன்மையானவர்களான இந்திரன், குபேரன், காலன், யமன், யமன், ஸோமன், வருணன் ஆகியோர் கூறப்படுகிறார்கள்.

பிதரோ வஸவ: சாத்யா ஹ்யஸ்வினௌ மருதோ மநு:
வாயு: வஹ்னி: ப்ரஜா ப்ராண: ருது கர்தா ப்ரபாகர: 9

pitarO vasava: sAdhyaa hyasvinau maruthO manu:
vAyu: vahni: prajA prAna: rutu karthA prabhAkara: 9

பிதரோ - பித்ரு தேவதைகளும், முன்னோர்களும்


வஸவ: - உலகத்தின் எல்லா இயற்கை செல்வங்களும் ஆன எட்டு வசுக்களும் (அபன், துருவன், சோமன், தரன், அனிலன், அனலன், ப்ரத்யுஷா, ப்ரபாசா என்ற இவர்களே எட்டு வசுக்கள்)


சாத்யா - என்றுமே கருமவசப்படாத நித்யர்களும் (அனந்தன், கருடன், விஸ்வக்சேனன், பாஞ்சஜன்யன், சுதர்சனன் போன்றவர்கள்)

ஹி - உறுதியாக


அஸ்வினௌ - தேவ மருத்துவர்களான அஸ்வினி தேவர்களும்

மருதோ - காற்றின் துணைவர்களான மருத் தேவர்களும்

மநு: - வைவஸ்வத மனுவும்


வாயு: - காற்று தேவனும்


அஹ்னி: - தீக்கடவுளும்


ப்ரஜா ப்ராண: - மக்களின் உயிர்க்காற்றும்


ருது கர்தா - பருவங்களை உண்டாக்குபவனும்


ப்ரபாகர: - ஒளியை உண்டாக்குபவனும், புகழைத்தருபவனும்

ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான்
ஸ்வர்ண சத்ருசோ பானு: ஹிரண்யரேதோ திவாகர: 10

Aditya: SavithA: Suurya: kaga: puushA gabhasthimAn
Suvarna sadrusO bAnu: hiranyarEtO divAkara: 10

ஆதித்ய: - அதிதியின் மகனும்

ஸவிதா - அறிவானவனும், அனைவருக்கும் தந்தையும்

ஸூர்ய: - புலன்களைச் செயலாற்றத் தூண்டுபவனும்



கக: - வானவெளியில் நடமாடுபவனும்



பூஷா - அனைவருக்கும் உணவளித்து வளர்ப்பவனும்



கபஸ்திமான் - ஒளிச்சுடர்களை உடையவனும்



ஸ்வர்ண சத்ருசோ - பொன்னிறத்தை உடையவனும்



பானு: - வட்டவடிவமானவனும்



ஹிரண்யரேதோ - அனைத்தையும் படைக்கும் திறன் கொண்டவனும்



திவாகர: - பகலொளியை உண்டாக்குபனும்

இவனே உறுதியாக பிரம்மனும், விஷ்ணுவும், சிவனும், ஸ்கந்தனும், பிரஜாபதியும், இந்திரனும், குபேரனும், காலமும், யமனும், ஸோமனும், வருணனும், பித்ரு தேவர்களும், வசுக்களும், சாத்யர்களும், அஸ்வினி தேவர்களும், மருத் தேவர்களும், மனுவும், வாயுவும், அக்னியும், பிராணனும் ஆக இருக்கிறான். இவனே பருவங்களையும், பகலொளியையும் உண்டாக்குபவன். இவன் பெயர்கள் ஆதித்யன், ஸவிதா, சூரியன், ககன், பூஷா, கபஸ்திமான், பானு என்று பலவாறானவை ஆதித்ய ஹ்ருதயம் - 3
ஆதித்ய ஹ்ருதயத்தின் முதல் பத்து சுலோகங்களை சென்ற இடுகைகளில் பார்த்தோம். இந்த இடுகையில் அடுத்த ஐந்து சுலோகங்களைப் பார்க்கலாம்.

ஹரித் அஸ்வ: சஹஸ்ரார்ச்சி: சப்த சப்திர் மரீசிமான்
திமிரோன்மதன: சம்பு: த்வஸ்டா மார்தாண்ட அம்சுமான்

harisdasva: sahasraarchi: sapta saptir mariichimaan
timironmadhana: sambu: tvaStaa maarthaanda amsumaan

ஹரித் அஸ்வ: - பச்சைக்குதிரையை உடையவன். உலகெங்கும் பசுமை நிறம் செழிக்க சூரியனின் கதிர்கள் தேவை. அந்த பச்சைப்பயிர்களை வளர்ப்பவன் ஆதலால் அவன் பச்சைக்குதிரையை உடையவன் ஆகிறான்.

சஹஸ்ரார்ச்சி: - ஆயிரக்கணக்கான கதிர்களை உடையவன். தன்னுடைய ஆயிரக்கணக்கான கதிர்களால் இந்த உலகத்தின் அனைத்துச் செயல்களையும் நடத்துகிறான்.

சப்த சப்தி: - ஏழு குதிரைகள் பூட்டிய தேரை உடையவன். இவனின் கதிர்கள் எல்லா வகையான நிறங்களும் உடையவை. அனைத்து நிறங்களும் சேர்ந்த இவன் கதிரே இவன் தேர். ஆனாலும் அந்த எல்லா நிறங்களிலும் ஏழு நிறங்கள் மட்டுமே வெளிப்பட்டு நிற்கின்றன. அந்த நிறங்களை வானவில்லில் காணலாம். அந்த ஏழு நிறங்களும் இங்கே ஏழு குதிரைகளாகச் சொல்லப்படுகின்றன.

ஒரு வாரம் என்பதை ஒரு தேர் என்று கொண்டால் அந்த வாரத்தின் நாட்களைக் குதிரைகளாகக் கொள்ளலாம். அப்படி ஏழு நாட்கள் கொண்ட ஒரு வாரத்தை ஏழு குதிரைகள் பூட்டிய ஒரு தேராக உடையவன் கதிரவன்.

மரீசிமான் - தன்னுடைய கதிர்களால் உலகனைத்தையும் நடத்துபவன். உலக இயக்கங்களுக்கெல்லாம் மூலகாரணம் இவனது கதிர்கள் தானே.

திமிரோன் மதன: - இருட்டையும் அறியாமையையும் அழிப்பவன். இவனது கதிர்கள் இருக்கும் இடத்தில் இருட்டு இருப்பதில்லை. இருட்டில் இருக்கும் வரை தன்னுடைய உடலே தெரியாமல் இருக்கின்றது; இவனது கதிர்கள் வந்தவுடன் அனைத்து இயக்கங்களும் நடைபெற்று உலக அறிவு, ஆன்மிக அறிவு என்ற எல்லா அறிவும் கிட்டும் வாய்ப்பு ஏற்படுகின்றது. அதனால் இவன் அறியாமை இருளையும் நீக்குபவன் ஆகிறான்.

சம்பு: - மகிழ்ச்சியைத் தருபவன். அறியாமை என்னும் இருளை நீக்குவதால் உயிர்கள் அறிவு பெறுகின்றன. அந்த அறிவால் நன்மையும் மகிழ்ச்சியும் அடைகின்றன.

த்வஸ்டா - அனைத்தையும் குறைப்பவன். எந்தப் பொருளும் இவனது கதிர்களில் நீண்ட நாட்கள் இருந்தால் தன்னுடைய உருவத்திலிருந்து சுருக்கமடைகின்றது. குறிப்பாக நீர். அனைத்தையும் குறைப்பதால் உலக சுழற்சிக்கு வழி வகுக்கிறார் சூரியன். நீரைக் குறைப்பதால் மேகங்களை உருவாக்குகிறான்; மழையாகப் பொழிய வைக்கிறான். அதே போல் இறந்த உடல்களையும் தாவரங்களையும் மங்கச் செய்வதன் மூலம் அடுத்த சுழற்சிக்கு வழி வகுக்கிறான்.

மார்தாண்ட - மிகுந்த வலிமை உடையவன். இவனிடமிருந்தே உலகத்தில் எல்லா பொருட்களும் உயிர்களும் வலிமையைப் பெறுகின்றன. அனைத்துப் பொருட்களுக்கும் வலிமையைத் தரும் இவன் எல்லாவற்றையும் விட வலிமை மிகுந்தவன்.

அம்சுமான் - எங்கும் பரவும் கதிர்களை உடையவன். மேகம் மறைத்து நிற்கும் போதும் தன் உருவத்தை உயிர்கள் பார்க்க இயலாத போதும் தன் கதிர்களால் எங்கும் பரவி உலக இயக்கத்தை நடத்துபவன்.

ஹிரண்யகர்ப்ப: சிசிர: தபனோ பாஸ்கரோ ரவி:
அக்னிகர்ப்போ அதிதேர்புத்ர: சங்க: சிசிரநாசன:

hiranyakarba: sisira: tapanO bhaaskarO ravi:
agnikarbO athithEr putra: sankha: sisira naasana:

ஹிரண்யகர்ப்ப: - பொன்மயமான கருப்பையை உடையவன். உலகங்களின் தோற்றத்திற்குக் காரணமானவன் என்பதால் இவன் பொன்மயமான கருப்பையை உடையவன் எனப்படுகிறான். உலகத் தோற்றம் ஹிரண்யகர்ப்பம் என்ற பொன்முட்டையிலிருந்து நிகழ்ந்ததாக சொல்வது மரபு.

சிசிர: - குளிரைத் தருபவன். இவனுடைய கதிர்கள் குறைவாக இருக்கும் நிலையே குளிர் நிலை. அதனால் இவனே குளிரைத் தருபவனாகவும் இருக்கிறான்.

தபனோ - நடுக்கத்தைத் தருபவன். இவன் தரும் குளிரால் உடல் நடுக்கம் தருபவன். இவனுடைய பெருமையைக் கண்டு உடலும் மனமும் நடுங்கச் செய்பவன்.

பாஸ்கர: - எல்லாவற்றையும் ஒளிவீசச் செய்பவன். இவனுடைய ஒளி பெற்று எல்லா உலகங்களும் அவற்றில் இருக்கும் பொருட்களும் ஒளி வீசுகின்றன. சந்திரனும் இவனுடைய ஒளியால் தான் ஒளிர்கிறான். உலகத்தில் இருக்கும் எல்லா பொருட்களும் ஒளிர்வது இவனது கதிர்களால் தான்.

ரவி: - எல்லாவற்றையும் உருவாக்குபவன். உலகத்தில் எந்தப் பொருள் உருவாக வேண்டுமென்றாலும் இவனது கதிர்களும் அதிலிருந்து கிடைத்த சக்தியும் தேவை.

அக்னிகர்ப்ப: - தீயை தன்னுடலாகக் கொண்டவன். அத்தீயிலிருந்தே உயிர்களைப் படைக்கவும் காக்கவும் அழிக்கவும் செய்யும் கதிர்களை உண்டாக்கி எல்லாத் திசைகளிலும் வீசுபவன்.

அதிதேர் புத்ர: - அதிதியின் மகன். தேவமாதாவான அதிதியின் முதன்மையான மக்களில் ஒருவன்.

சங்க: - ஆனந்தமயமானவன். இவனது கதிர்களால் உலகங்களுக்கெல்லாம் ஆனந்தத்தைத் தருபவன்.

சிசிரநாசன - குளிரை அழிப்பவன். இவனது கதிர்களின் குறைவினால் ஏற்பட்டக் குளிரை இவனது கதிர்களில் பெருக்கத்தால் நீக்குபவன்.

வ்யோமநாத: தமோபேதி ருக் யஜுஸ் சாம பாரக:
கன வ்ருஷ்டி: அபாம் மித்ரோ விந்த்யவீதி ப்லவங்கம:

vyOmanaatha: thamObhEdi rug yajuS saama paaraga:
ghanavrushti: apaam mithrO vindhyaviithi plavangama:

வ்யோமநாத: - வானத்தின் தலைவன். வானவீதியில் சூரிய குடும்பத்தின் தலைவன் இவனே. வானத்தில் கண்களுக்கு நேரடியாகத் தெரியும் பொருட்களில் மிகப்பெரியவன் இவனே.

தமோ பேதி - இருளை உடைப்பவன். சூரியனின் கதிர்கள் தோன்றும் வரை இருள் கனத்த இரும்புத் திரையைப் போல் சூழ்ந்திருக்கிறது. இவனது கதிர்கள் வந்தவுடனேயே பெரிய சம்மட்டியால் உடைக்கப்பட்டு சுக்கு நூறாகச் சிதறியதைப் போல் இருள் காணாமல் போகின்றது.

ருக் யஜுஸ் சாம பாரக: - ருக், யஜுர், சாமம் எனப்படும் மூன்று வேதங்களையும் கண்டு உலகிற்குச் சொன்னவன். வேதங்கள் யாராலும் உருவாக்கப்படவில்லை; அதனால் அதனை அபௌருஷேயம் என்று சொல்வார்கள். அவை என்றும் இருப்பவை. ரிஷிகள் அவற்றைக் கண்டு சொன்னார்கள். அதனால் அவர்களுக்கு மந்த்ர த்ரஷ்டா (மந்திரத்தைக் கண்டவர்கள்) என்று பெயர். இங்கே சூரியன் மூவேதங்களையும் கண்டு வெளிப்படுத்தியவனாகச் சொல்லப்படுகிறான்.

கன விருஷ்டி: - கடும் மழையைப் பெய்விப்பவன். இவனது கதிர்கள் ஏற்படுத்தும் வெப்ப நிலை மாற்றங்களாலேயே உலகில் மழை பொழிகின்றது. அதனால் இவனே மழையைப் பொழிவிப்பவன் ஆகின்றான்.

அபாம் மித்ர: - நீருக்குத் தோழன். சூரியனும் நீரும் தோழர்கள் என்பதாலேயே இவனது கதிர்கள் பட்டவுடன் நீர் தன் உரு மாறி இவனுடன் கலந்து கொள்ளச் செல்கிறது போலும்.

விந்த்ய வீதி ப்லவங்கம: - விந்திய மலையை ஒட்டிய வீதியில் விரைவாகச் செல்பவன். சூரியனை பூமி சுற்றும் போது பூமியிலிருந்து பார்ப்பவர்களுக்கு வானத்தில் அவன் வருடத்தில் ஆறு மாதம் வட பக்கத்திலும் ஆறு மாதம் தென் பக்கத்திலும் செல்வதாகத் தோன்றும். அதனையே உத்தராயணம் என்றும் தட்சினாயணம் என்றும் கூறுவார்கள். அந்த வடக்கு வீதியும் தெற்கு வீதியும் விந்திய மலைத்தொடரை ஒட்டி இருப்பதாகக் கூறுவதும் மரபு. அந்த வகையில் சூரியன் விந்திய மலை வீதியில் விரைவாகச் செல்பவனாகச் சொல்லப்படுகிறான்.

ஆதபி மண்டலி ம்ருத்யு: பிங்கல சர்வதாபன:
கவிர் விஷ்வோ மஹா தேஜ ரக்த சர்வ பவோத்பவ:

Athapi mandali mruthyu: pingala sarvathaapana:
kavir vishvO mahaathEja raktha sarva bhavOthbhava:

ஆதபி: - கொளுத்துபவன். இதற்கு விளக்கம் தேவையில்லை. எல்லோரும் அனுபவித்திருப்போம்.

மண்டலி - வட்டவடிவமானவன்.

ம்ருத்யு: - மரணவடிவானவன். உலகத்தில் எல்லாவற்றையும் படைத்தும், காத்தும், அழித்தும் அனைத்து செயல்களையும் நடத்துவிப்பவன் என்பதால் அவன் மரண வடிவாகவும் இருக்கிறான்.

பிங்கல: - மஞ்சள் வண்ணம் கொண்டவன். சூரியனை மரணம் என்று சொன்னவுடன் அவன் மறையும் போது தோன்றும் பொன்வண்ணம் நினைவிற்கு வருகின்றது போலும்.

சர்வ தாபன: - அனைத்தையும் தகிப்பவன்.

கவி: - அனைத்தையும் அறிந்தவன்.

விஷ்வோ - அண்ட வடிவானவன்.

மஹாதேஜ: - மிகப்பெரும் ஒளிவடிவானவன்.

ரக்த: - சிவந்த வண்ணம் கொண்டவன். பெரும் ஒளிவடிவானவன் என்றவுடன் காலையில் சூரியன் தோன்றும் போது தோன்றும் செவ்வண்ணம் நினைவிற்கு வருகிறது போலும்.

சர்வ பவோத்பவ: - எல்லா உயிர்களும் பொருட்களும் தோன்றுமிடமானவன்.

நக்ஷத்ர க்ரஹ தாரானாம் அதிபோ விஷ்வ பாவன:
தேஜசாம் அபி தேஜஸ்வி த்வாதசாத்மன் நமோஸ்துதே

nakshatra graha thaaraanaam adhibO vishva bhaavana:
tEjasaam api tEjasvi dvaadasaathman namOSthutE

நக்ஷத்ர க்ரஹ தாராணாம் அதிப: - விண்மீன்கள், கிரகங்கள் போன்ற வானில் ஒளிவீசும் பொருட்களுக்கெல்லாம் தலைவன்.

விஷ்வ பாவன: - அண்டத்தின் பிறப்பிடம்

தேஜசாம் அபி தேஜஸ்வி - ஒளிவீசுபவர்களுக்கெல்லாம் ஒளியானவன்

த்வாதசாத்மன் - பன்னிரு வடிவங்கள் கொண்டவன். வருடத்தின் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு வடிவம் கதிரவனுக்கு இருப்பதாகக் கூறுவது மரபு. பன்னிரு ஆதித்யர்கள் என்று அவர்களைச் சொல்வார்கள். அவர்கள் இந்திரன், தாதா, பர்ஜன்யன், த்வஸ்டா, பூஷா, அர்யமா, பகன், விவஸ்வந்தன், விஷ்ணு, அம்சுமான், வருணன், மித்ரன்

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தின் 16 முதல் 20 வரையிலான சுலோகங்கள்.

நம: பூர்வாய கிரயே பஸ்சிமாத்ரயே நம:
ஜ்யோதிர் கணானாம் பதயே தினாதி பதயே நம:

nama: puurvaaya girayE pascimaathrayE nama:
jyOthir ganaanaam pathayE dinaathi pathayE nama:

நம: - வணக்கங்கள்.

பூர்வாய கிரயே - கிழக்கு மலையில் உதிப்பவருக்கு. இந்த ஸ்தோத்ரம் ராம ராவண யுத்தத்திற்கு முன்னர் உபதேசிக்கப்பட்டதால் இலங்கையில் இந்த ஸ்தோத்ரம் தோன்றியதாகக் கூறலாம். தமிழகத்தில் சூரிய உதயம் கடலில் நடக்கும். இலங்கையில் கிழக்கு திசையில் ஏதேனும் மலை இருக்கிறதா; அந்த மலையைத் தான் இங்கே உதயசூரியனின் மலை என்று சொல்லியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

பஸ்சிமாத்ரயே - மேற்கு திசையில் மறைபவருக்கு

ஜ்யோதிர் கணானாம் பதயே - ஒளிக்கூட்டங்களின் தலைவருக்கு

தினாதி பதயே - நாளின் தலைவருக்கு

நம: - நமஸ்காரங்கள்

No comments: