Monday, January 14, 2013

ஆதித்யஹ்ருதயம் - பாகம் ஒன்று

ஆதித்ய ஹ்ருதயம் - 1

உலகத்தின் எல்லா நிகழ்வுகளுக்கும் காரணமான சக்தியை சரியான தொலைவிலிருந்து வழங்கி வருகின்ற சூரியனை வணங்குவது தொன்று தொட்டு உலகமெங்கும் நடைபெற்று வந்திருக்கிறது. பெருமதங்கள் தோன்றிய போது முன்பிருந்த சூரிய வழிபாடான சௌரம் அந்தப் பெருமதங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றைக்கும் நேரடியாக சூரியனை மட்டும் வழிபடாமல் பெருமதங்களின் தெய்வ உருவில் கதிரவனை வணங்கிவருகிறார்கள்.


 
இந்திய சமயங்களில் பெருஞ்சமயங்களாக ஆதிசங்கரரால் முறைப்படுத்தப்பட்ட ஆறு சமயங்களான சௌரம், காணபத்யம், சாக்தம், கௌமாரம், சைவம், வைஷ்ணவம் என்பவற்றுள் பகலவன் வழிபாடான சௌரம் இன்றைக்கு சைவ வைணவங்களில் கலந்துவிட்டது. சிவசூரியன் என்றும் சூரியநாராயணன் என்றும் இன்றைக்கு சூரியன் வழிபடப்படுகிறான். சூரிய நமஸ்காரம் என்று ஒரு வழிபாட்டு முறை சேரலமாம் கேரளத்தில் இருக்கிறது. தமிழகத்தில் பலரும் அதிகாலையில் நீராடி விட்டு சூரியனை நோக்கி வணங்கும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

சூரிய பகவானுக்கான வடமொழிப் பனுவல் என்று எண்ணும் போது மனத்தில் முதன்மையாக வந்து நிற்பது 'ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்ரம்'. இது சூரிய குலத்தில் உதித்த இராமபிரானுக்கு தமிழ் முனிவர் அகத்தியர் உபதேசித்ததாக வால்மீகி இராமாயணத்தில் வரும் ஒரு பகுதி. இந்த ஸ்தோத்திரத்தை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து ஒன்பது முறை ஜபித்தால் எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும் என்பது ஓர் நம்பிக்கை. அடியேன் தினந்தோறும் காலையில் சொல்லிக் கொண்டிருந்த ஸ்தோத்திரம் இது. (இப்போதெல்லாம் ஒவ்வொரு நாளும் சொல்லாவிட்டாலும் நினைவிற்கு வரும் போதெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்). ஒன்பது முறை தொடர்ந்து சொல்லி நினைத்த காரியங்களில் வெற்றி பெற்றதும் உண்டு.

பகலவன் இராசிச் சக்கரத்தின் கடைசி இராசியான மீனராசியிலிருந்து (பங்குனி) முதல் இராசியான மேஷராசிக்குச் (சித்திரை) செல்லும் இந்த நேரத்தில், இராமபிரானின் திருவவதார நன்னாள் வருகின்ற இந்த நேரத்தில் இருவர் தொடர்பும் உடைய இந்த வடமொழிப் பனுவலைப் படிப்பது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

இந்த இடுகை தொடங்கி இனி வரும் இடுகைகளில் சூரிய தேவனை முழுமுதற்கடவுளாகப் போற்றும் இந்தப் பனுவலைப் பொருளுடன் பார்ப்போம்.

இராம இராவண யுத்தத்தின் தொடக்கத்தில் நடைபெறும் நிகழ்ச்சி இது. முதல் இரு சுலோகங்கள் சூழ்நிலையை விவரிக்கின்றன. மூன்றாவது சுலோகம் அகத்தியர் இராமபிரானை விளித்துக் கூறுவதாக அமைந்திருக்கிறது. நான்காவது சுலோகம் முதல் முப்பதாம் சுலோகம் வரை ஆதித்ய ஹ்ருதயம் என்னும் நூல். முப்பத்தி ஒன்றாம் சுலோகம் இந்தத் துதியால் மகிழ்ந்த சூரியன் இராமனை வாழ்த்துவதைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.

ததோ யுத்த பரிச்ராந்தம் சமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய சமுபஸ்திதம் 1

tatO yuddha parisrantam samarE chintayA Sthitam
rAvanam chAgratO drustvA yuddhAya samupasthitam 1

ததோ - அந்த இராமன்
யுத்த பரிச்ராந்தம் - போர்க்களத்தில்
சமரே சிந்தயா ஸ்திதம் - போர் செய்வதைப் பற்றிய சிந்தனைகளுடன் நிற்பதை
அக்ரதோ த்ருஷ்ட்வா - முதலில் பார்த்துவிட்டு (பின்னர்)
யுத்தாய சமுபஸ்திதம் - போர் செய்வதற்காக நெருங்கி வரும்
ராவணம் ச த்ருஷ்ட்வா - இராவணனையும் பார்த்தார் அகத்திய முனிவர்

போர்க்களத்தில் போருக்கு முனைப்பாக நிற்கும் இராமனையும் இராவணனையும் கண்டார் அகத்தியர். அகத்தியர் போர்க்களத்திற்கு ஏன் வந்தார் என்பதை அடுத்த சுலோகம் சொல்கிறது.

தைவதைஸ்ச சமாகம்ய த்ரஷ்டும் அப்யாகதோ ரணம்
உபாகம்ய அப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: 2

daivathaisca samAgamya drastum abhyAgatO ranam
upAkamya abraviid rAmam agastyO bhagavAn rshi: 2

த்ரஷ்டும் அப்யா கதோ ரணம் - போரைப் பார்ப்பதற்காக வந்திருக்கும்
தைவத ஏவ ச - தேவர்களுடனே
சம ஆகம்ய - வந்திருக்கும்
அகஸ்த்யோ பகவான் ருஷி: - ரிஷியான அகத்திய பகவான்
உபாகம்ய அப்ரவீத் ராமம் -அருகில் வந்து இராமனிடம் பேசத் தொடங்கினார்

தேவர்கள் எல்லாம் இராம இராவண யுத்தத்தைப் பார்ப்பதற்காகத் திரண்டு வந்திருக்கிறார்கள். அவர்களுடன் பல ரிஷிகளும் வந்திருக்கிறார்கள். அவர்களின் நடுவே அகத்தியரும் இருக்கிறார். போருக்கு முனைப்பாக இருக்கும் இராம இராவணர்களைப் பார்த்த பின்னர் அகத்தியர் இராமனை நெருங்கி வந்து பின்வருமாறு பேசத்தொடங்கினார்.

ராம ராம மஹாபாஹோ ச்ருணு குஹ்யம் சனாதனம்
யேன சர்வான் நரீன் வத்ஸ சமரே விஜயிஷ்யஸி 3

rAma rAma mahAbAhO srunu guhyam sanAtanam
yEna sarva nareen vatsa samarE vijayisyasi 3

ராம ராம மஹாபாஹோ - பெரும் தோள் வலிமை கொண்ட இராமா!
யேன சர்வான் நரீன் - எதன் மூலம் எல்லா மக்களும்
சமரே விஜயிஷ்யஸி - போர்க்களத்தில் வெல்கிறார்களோ
சனாதனம் - காலம் காலமாக அழிவில்லாத
குஹ்யம் - (அந்த) இரகசியத்தை
ச்ருணு - கேள்
வத்ஸ - குழந்தாய்

தோள் வலிமையில் சிறந்த இராமா! குழந்தாய்! என்றும் அழிவில்லாத எந்த இரகசியத்தால் மக்கள் போர்க்களங்களில் வெல்கிறார்களோ அந்த மறைபொருளை நான் இப்போது உனக்குச் சொல்கிறேன். கேள்.

ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேந்நித்யம் அக்ஷயம் பரமம் சிவம் 4

Aditya hrudhayam punyam sarva satru vinAsanam
jayAvaham japEnnithyam akshayam paramam sivam 4

ஆதித்ய ஹ்ருதயம் - (அந்த இரகசியத்திற்குப் பெயர்) ஆதித்ய ஹ்ருதயம்
புண்யம் - அது நல்வினைப்பயன்களைத் தருவது
ஸர்வ சத்ரு விநாசனம் - எல்லாவிதமான எதிரிகளையும் அழிப்பது (உட்பகை, வெளிப்பகை இரண்டையும்)
ஜய ஆவஹம் - வெற்றியைத் தருவது
ஜபேத் நித்யம் - நாள்தோறும் சொல்லக்கூடியது (ஜபிக்கக்கூடியது)
அக்ஷயம் - அழிவற்றது
பரமம் - மிகப்பெருமை கொண்டது
சிவம் - மங்களம் தருவது

புண்ணியத்தைத் தருவதும் எல்லா எதிர்ப்புகளையும் முறியடிப்பதும் வெற்றியைத் தருவதும் நாள்தோறும் பன்னிப் போற்றத் தகுந்ததும் அழிவற்றதும் பெருமை கொண்டதும் மங்களம் தருவதுமான அந்த இரகசியத்திற்குப் பெயர் ஆதித்ய ஹ்ருதயம்

ஸர்வ மங்கள் மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரசமனம் ஆயுர் வர்த்தனம் உத்தமம் 5

sarva mangala mAngkalyam sarva pApa pranAsanam
cintaa sOka prasamanam Ayurvardhanam utthamam 5

ஸர்வ மங்கள் மாங்கல்யம் - மங்களங்கள் எல்லாவற்றிலும் சிறந்த மங்களம் ஆனது.
ஸர்வ பாப ப்ரநாசனம் - எல்லா பாவங்களையும் அழிப்பது
சிந்தா சோக ப்ரசமனம் - கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது
ஆயுர் வர்த்தனம் - வாழ்நாளை வளர்ப்பது
உத்தமம் - சிறந்தது

இந்த அதித்ய ஹ்ருதயம் என்ற துதி மங்களங்களில் சிறந்தது, பாவங்களையும் கவலைகளையும் குழப்பங்களையும் நீக்குவது, வாழ்நாளை நீட்டிப்பது, மிகவும் சிறந்தது.

அடுத்த சுலோகத்திலிருந்து சூரியனைப் போற்றத் தொடங்குகிறார்.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...



"ஆதித்யஹ்ருதயம்
அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.


பொங்கும் மங்களம் என்றென்றும் தங்கிட இனிய பொங்கல் வாழ்த்துகள்..