Friday, March 4, 2011

திருப்புவனம் சவுந்திரநாயகி

திருப்புவனம், புண்ணிய தலங்களில் பிரதானமானது. ஆன்மிக உலகில் காசி, ராமேஸ்வரத்தை சிறப்பாக குறிப்பிடுவர். அந்த வரிசையில் திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி கோயிலும் அடங்கும். இங்கு வழிபட்டால், காசியை விட வீசம் அளவு புண்ணியம் அதிகம் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, மோட்ச விளக்கு ஏற்றுவது பிரசித்தம். பங்குனி திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம், தேரோட்டம் சிறப்புற நடக்கும். சிவகங்கை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு வெளிமாநில பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.பிணி தீர்ப்பாய் அம்மா சிவனுக்கு விழா எடுக்கும் முன் காவல் தெய்வமான எல்லை அம்மன், மாரியம்மனுக்கு உற்சவம் எடுப்பது வழக்கம். பிணிகள் அண்டாமல் மக்களை காத்திடவும், நல்ல மழைபொழிந்திடவும் மாரியம்மனுக்கு விழா கொண்டாடப்படுகிறது. உற்சவம் ரேணுகாதேவி முத்துமாரியம்மன், எல்லை தெய்வமாக இருந்து அருள்பாலிக்கிறாள். மாசி மாதத்தில் 10 நாள் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கும். ஒன்பதாம் நாள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடக்கும். பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவர். மறுநாள் விழா நிறைவுபெறும். பிறகு புஷ்பவனேஸ்வரர் சவுந்திரநாயகி கோயிலில் உற்சவம் துவங்கும்.

திருப்புவனம் புதூர், நெல்முடிக்கரை, பழையூர், கோட்டை கிராமங்களுக்கு இந்த மாரியம்மன் காவல் தெய்வமாக விளங்குகிறாள். கொடியேற்றத்தின் போது, அக்னி சட்டி எடுப்போர் காப்புக்கட்டி விரதம் இருக்கின்றனர். அன்றிரவு கோயில் வளாகத்தில் அம்மன் பாடல்களை பாடி கும்மி அடித்து வேண்டுதல் செய்கின்றனர். தினமும், அம்மன் உற்சவராக வீதி உலா வந்து அருள்பாலிப்பர். வேண்டுதல் உடல்நலம் குன்றியோர், நலம் பெற வேண்டி அம்மனிடம் வேண்டுதல் செய்கின்றனர். நிவர்த்தியானால் அக்னிசட்டி, ஆயிரம் கண் பானை, பொம்மை, பாதத்துடன் நகர்வலம் வந்து காணிக்கை செலுத்துகின்றனர். சிறுவர்கள் கரும்புள்ளி, வெண்புள்ளி குத்தி வேப்பிலை அணிந்து கோயில் வளாகத்தில் உருண்டு (அங்க பிரதட்Œணம்) கொடுப்பர். குழந்தை பாக்கியம் இல்லாதோர், கரும்பு தொட்டில் கட்டி வேண்டுதல் செய்கின்றனர். பிறக்கும் பெண் குழந்தைக்கு, ரேணுகாதேவி என பெயரிட்டு நன்றி கடன் செலுத்துகின்றனர். திருமண தடை உள்ள கன்னிப் பெண்கள் உருண்டு கொடுத்து வேண்டினால், திருமணம் கைகூடும். பொங்கல், மாவிளக்கு கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு அம்மனுக்கு படைத்துவிட்டு, ஆடு, கோழிகளை பலியிடுகின்றனர். பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர். விழாவை முன்னிட்டு பொதுநல அமைப்புகள் சார்பில் நீர், மோர் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு வழங்குகின்றனர். பத்து நாள் விழாவும் மக்களின் ஒற்றுமையை வளர்ப்பதாக உள்ளது.

வேப்பிலை ஆடை கட்டுவது ஏன்?

ஜமதக்னி முனிவர் கார்த்தவீரியன் என்பவனால் கொல்லப்பட்டார். அவரது மனைவி ரேணுகா கணவருடன் உடன்கட்டை ஏற தீயில் விழுந்தாள். விதி விளையாடியது. பெருமழை கொட்டி, சிதை அணைந்தது. ரேணுகாவின் உடல் மழை வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. ஒரு வேப்பமரத்தின் அடியில் ஒதுங்கினாள். சிதையில் பட்ட தீயினால் உடலில் காயங்கள் இருந்தன. மயக்கம் தெளிந்த அவள், வேப்ப இலைகளை ஆடையாக்கிக் கொண்டாள். தீக்காயம் குணமாக மஞ்சளைப் பூசிக் கொண்டாள். குளிர்ச்சிக்காக கூழைப் பருகினாள். சிவபார்வதியை நோக்கி தியானத்தில் ஆழ்ந்தாள். தவத்திற்கு இணங்கிய அம்பிகை ரேணுகாவின் முன்தோன்றி, தன் அம்சத்தை அவளுக்கு வணங்கி அருள்புரிந்தாள். அன்றுமுதல் மாரியம்மனாக அருள்புரியத் தொடங்கினாள். இதன் காரணமாகவே, வெப்பு நோய்களான அம்மை, வயிற்றுவலி போன்றவற்றுக்கு, மாரியம்மனை வேண்டும் வழக்கம் ஏற்பட்டது. நோயில் இருந்து விடுபட்டவர்கள் வேப்பிலை ஆடை கட்டியும், கூழிட்டும், அக்னி மிதித்தும் அம்பிகையை வழிபட்டு வருகின்றனர். அவளுக்கு பல தலங்களிலும் கோயில் கட்டினர். இத்தலங்களில் அம்மனுக்கு பல பெயர்கள் உண்டு.

மாரியாய் மாறிய முனிவரின் மனைவி

சப்தரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர், யாகங்களை நடத்துவதில் வல்லவர். தினமும் யாக குண்டத்தில் அக்னி வளர்த்து தேவர்களை பூஜித்து வந்தார். இவருடைய மனைவி ரேணுகா. இவள் அம்பிகையின் அம்சமாக பூலோகத்தில் ரைவதன் என்பவரின் மகளாகப் பிறந்து வளர்ந்தாள். ஜமதக்னி முனிவரைக் கணவராக அடைந்தாள். இந்த தம்பதியருக்கு தன்னுவன், அனுவன், விச்வாவசு, பரசுராமன் என்னும் நான்கு பிள்ளைகள். கடைசிப்பிள்ளை பரசுராமன் திருமாலின் அவதாரம் ஆவார்.ரேணுகா கற்புத்திறன் மிக்கவள். கணவனே தெய்வமென வாழும் பதிவிரதை. இந்த திறம் காரணமாக, ஆற்றுமணலில் குடம் செய்யும் வல்லமை பெற்றிருந்தாள். அவள் தினமும் நதியில் நீராடி, மணல் எடுத்து குடமாக வனைவாள். அதில் தண்ணீர் எடுத்து வந்து யாக
பணிகளுக்கு உதவுவாள். ஒருநாள், அவள் நதியில் நீராடிக்கொண்டிருந்த போது, வானில் வலம் வந்து கொண்டிருந்த கந்தர்வன் ஒருவனின் பிம்பத்தை தண்ணீரில் கண்டாள். இப்படியும் உலகில் ஆணழகர்கள் இருப்பார்களா? என கணநேரம் மனதில் நினைத்தாள். இதனால், மண்ணில் குடம் செய்யும் விசேஷ சக்தியை இழந்தாள். ஜமதக்னிக்கோ ஞானதிருஷ்டியில் நடந்தது தெரிந்து, அதிர்ச்சி அடைந்தார். கோபம் தலைக்கேறியது. தவறுக்குத் தண்டனையாக மனைவியை வெட்டுவது என்று முடிவெடுத்தார். பிள்ளைகளை அழைத்து தண்டனையை நிறைவேற்றும்படி உத்தரவிட்டார். மற்ற பிள்ளைகள் மறுத்து விட்டனர். இளையமகன் பரசுராமன், தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்ற சொல்லுக்கேற்ப, அன்னையை வெட்டினார். ஜமதக்னி அவரைப் பாராட்டி, என்ன வரம் வேண்டும்? என்றார். தனது தாய் மீண்டும் உயிர் பிழைக்க வேண்டும், என்றார். ஜமதக்னியும் அவ்வாறே செய்தார். கலியுகத்தில் மாரியம்மனாக எங்கும் வீற்றிருந்து மக்களுக்கு மழை வளம் தரவும், நோயற்ற வாழ்வளிக்கவும் வரம் தந்தார். மழைக்கு மாரி என்ற சொல் உண்டு. இந்தப் பெயரால் அவள் கருணை உள்ளம் கொண்ட மாரியம்மனாக எங்கும் வீற்றிருக்கிறாள்.

கண்ணனின் தங்கை

யமுனை நதிக்கரையில் இருந்த மதுராபுரியை கம்சன் அரசாண்டு வந்தான். அவனது தங்கை தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் அழிவு ஏற்படும் என்று அசரீரி வாக்கு ஒலித்தது. இதனால், பயந்துபோன அவன் தங்கையையும், அவளது கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான். திருமால் அவர்களது எட்டாவது புத்திரன் கண்ணனாக அவதரித்தார். அதே சமயத்தில், யமுனையின் மறுகரையில் இருந்த கோகுலத்தில், வசுதேவரின் நண்பர் நந்தகோபனின் மனைவி யசோதைக்கு மாயாதேவி என்ற பெண் குழந்தை பிறந்தது. இவள் திருமாலால் உருவாக்கப்பட்டவள். அப்போது வானத்தில் அசரீரி ஒலித்தது. வசுதேவரே! கண்ணனை கோகுலத்தில் உள்ள உன் நண்பர் நந்தகோபனிடம் பத்திரமாகச் சேர்த்துவிடு! என்றது. ஒரு கூடையில், கண்ணனை எடுத்துக் கொண்டு வசுதேவர் கோகுலம் சென்று நந்தகோபன் வீட்டில் விட்டார். மாயாதேவியை அதே கூடையில் வைத்து சிறைக்கு கொண்டு வந்தார். கம்சன் தன் தங்கைக்கு குழந்தை பிறந்த விஷயத்தை அறிந்து, அதைக் கொல்ல சிறைக்கு வந்தான். பச்சிளங் குழந்தையை கையில் தூக்கிக் கொல்ல முயன்றான். ஆனால், அவன் பிடியிலிருந்து நழுவி மாயாசக்தி விண்ணை நோக்கிப் பறந்தாள். ஏ மூடனே! கம்சா! உன்னைக் கொல்லப் போகும் என் அண்ணன் கண்ணன் கோகுலத்தில் வளர்கிறான். நான் மாயாசக்தி! உலக உயிர்களை எல்லாம் காப்பதற்காகவே இப்பூமியில் அவதரித்திருக்கிறேன் என்று சூளுரைத்தாள். அந்த மாயா சக்தியே மாரி, காளி, பவானி, துர்க்கை என்று பல திருநாமங்களில் கோயிலில், அருட்காட்சி தருகிறாள்.


நன்றி: தினமலர்

No comments: