Monday, December 10, 2012

கார்த்திகை கடைசி சோமவாரம் - சங்கடம் தீர்க்கும் சங்க(ர)னுக்கு சங்காபிஷேகம்

சங்கரனுக்கு சங்காபிஷேகம்
![இன்று கார்த்திகை கடைசி சோமவாரம்]
By - சிவ.அ. விஜய்பெரியசுவாமி



""கலங்கினேன் கலங்காமலே வந்து
காட்டினாய் கழுக்குன்றிலே''
என்கிறார் மாணிக்கவாசகர். எத்தகைய சோதனைகள்,வேதனைகள் என்றாலும் சரி, திருக்கழுக்குன்றம் வந்து, அங்கு அருள்பாலிக்கும் சிவபெருமானை வணங்கித் தொழுதால் நம் வினைகள் தவிடுபொடியாகும்.
மலை மேலுள்ள மலைக்கோயிலில் வேதகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். மூலவரின் பின்புறம் ஈசனின் திருமணக் கோலச் சிற்பம் உள்ளது. பார்வதி தேவி சொக்கநாயகி என்ற திருப்பெயரில் அருள்பாலிக்கிறாள். இங்கு நந்தி கிடையாது. மலைக்கோ யில் ஈசனை இந்திரன் "இடி வழிபாடு' செய்து வழிபடுகிறான். அதை நிரூபிக்கும் வகையில் ""இடி வழிபாடு' மறுநாள் ஆலயக் கருவறையில் கடுமையான அனல் இருக்குமாம்.
மார்கண்டேயர் இத்தல வேதகிரீஸ்வரரை வழிபட வந்தபோது அபிஷேகம் செய்ய விரும்பினார். அபிஷேகம் செய்ய தீர்த்தக் குளத்திலிருந்து நீர் எடுத்து வர முயன்றபோது மார்கண்டேயரிடம் பாத்திரம் இலலை. அப்போது மார்கண்டேயர் ஈசனை வேண்ட அந்த தீர்த்தக் குளத்தில் வலம்புரி சங்கு தோன்றியது. பிறகு மார்கண்டேயரும் வேதகிரீஸ்வரரை வலம்புரி சங்கால் அபிஷேகித்து வழிபட்டார். அன்று முதல் குளமும் சங்கு தீர்த்தக்குளம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தக் குளத்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வலம்புரி சங்கு தோன்றுகிறது. இந்த சங்குகள் இத்தலத்தில் "தாழக்கோயில்' என்று அழைக்கப்படும் ஸ்ரீதிரிபுரசுந்தரி சமேத ஸ்ரீபக்த வசலேஸ்வரர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. குளத்தின் தென்கிழக்கில் ஸ்ரீஅபிராமி அம்மன் சமேத ஸ்ரீருத்ரகோடீஸ்வரர் ஆலயம் உள்ளது. சங்கு தீர்த்தக் குளத்தின் மேற்கே மார்கண்டேயர் வழிபட்ட "தீர்த்தகிரீஸ்வரர்' ஆலயம் அமைந்துள்ளது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தில், கார்த்திகை மாத கடைசி திங்களன்று வேதகிரீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறும். அப்போது சங்கு தீர்த்தக் குளத்தில் கிடைத்த சங்குகளே முதன்மை பெறும். அவ்வகையில் வருகிற 10.12.12 அன்று ஈசனுக்கு 1008 சங்காபிஷேகம் நடைபெறுகிறது. சங்கரனுக்கு நிகழும் சங்காபிஷேகத்தை தரிசித்தால் சங்கடங்கள் தீருமன்றோ...!

No comments: