Tuesday, October 8, 2013

திருப்பதி புறப்பட்டது ஆண்டாள் சூடிய மாலை

ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதி பிரம்மோற்சவ விழாவின் கருடசேவையன்று, பெருமாளுக்கு சார்த்துவதற்கு, ஆண்டாள் சூடி களைந்த மாலை, நேற்று, ஸ்ரீவில்லித்தூரிலிருந்து சென்றது. 

திருவில்லிபுத்தூர் வடபத்ரசாயிக்கு, ஆண்டாள் சூடிய மாலை, தினமும் சார்த்தப்படுகிறது. இதேபோல், ஆண்டுதோறும், மதுரை சித்திரை திருவிழாவில், வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கும், ஸ்ரீரங்கத்தில், சித்திரை ரேவதி தேரோட்டத்தின் போது, ரங்கநாதருக்கும், ஆண்டாள் சூடிய மாலை சார்த்தப்படுகிறது. 


மேலும், திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவத்தின், ஐந்தாம் நாளான நாளை புதன்கிழமை 09-10-2013 அன்று மாலையில் நடக்கும் கருட சேவையில், ஆண்டாள் சூடி களைந்த மாலை பெருமாளுக்கு சார்த்தப்படும். 

இந்த ஆண்டு பிரம்மோற்சவத்திற்கு, மாலை அனுப்பும் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. காலையில் ஆண்டாளுக்கு பெரிய மாலை, கிளி, பரிவட்டம் ஆகியன சார்த்தப்பட்டு, சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடந்தன. பின், மாடவீதி, கந்தாடை வீதி வழியாக, ஆண்டாள் சூடிய மாலையையும், கிளியையும் ஊர்வலமாக எடுத்து வந்தனர். 


அவற்றை, கோயில் ஸ்தானிகம் ரமேஷ் மற்றும் ஊழியர்கள், திருப்பதிக்கு கொண்டு சென்றனர்.

No comments: