Friday, May 17, 2013

2013 குரு பெயர்ச்சிப் பலன்கள் : துலாம்



துலாம்: சித்திரை 3, 4ம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்  மற்றும் ர, ரா, ரி, ரு, ரே ,ரோ, த , தா, தி, து  ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள். கடமையே கண்ணாக கொண்டு காரியத்தை முடிக்கும் துலாம் ராசி அன்பர்களே!

நீங்கள் நவக்கிரகங்களில் அசுரகுரு என்றழைக்கப்படும் தனகாரகனாகிய சுக்கிரனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் பட்டம் பதவிகள் பெறுவீர்கள். திறமைகள் பல கொண்டவர்கள்.இதுவரை உங்கள் ராசிக்கு தைரியவீர்யஸ்தானம் மற்றும் ரணருண ரோகஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய ஆயுள்ஸ்தனாத்தில் இருந்து பாக்கியஸ்தானராசிக்கு இடம் பெயர்கிறார். உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் இருந்து ராசியில் இருந்து உங்களுடைய ராசி, தைரிய வீர்ய இளைய சகோதரஸ்தானம், பூர்வபுண்ணிய பஞ்சமஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் ராசியில் சனி, ராகுவும், களத்திரஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள்.
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடமான மிதுனத்தில் குருபகவான் மிகுந்த அனுகூலத்துடன் உள்ளார். கடந்தகாலத்தில் இருந்த குருவின் அமர்வு வாழ்வில் பலவித கஷ்டங்களை தந்தது. இதனால் உங்கள் பலத்தை நீங்களே உணர்ந்து கொள்கிற புத்தியும், புதிய நம்பிக்கையும் ஏற்படும். ஓடிப்போகிறவருக்கு ஒன்பதாம் இடத்தில் குரு என்பது ஜோதிட சாஸ்திர மொழி. எங்கு போனாலும் உங்களுக்கு நன்மையே நடக்கும். அந்தளவுக்கு பாதுகாப்பை இந்த பெயர்ச்சி காலம் தரும். உங்கள் வாழ்வில் ஓடி ஓடி உழைத்து முன்னேற புதிய வாய்ப்பு வாசல்கதவைத் தட்டும்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்வதால், நன்மையும் தாராள வருமானமும் கிடைக்கும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். தம்பி, தங்கைகளுக்கு திட்டமிட்ட திருமண நிகழ்ச்சி நல்லபடியாக நடக்கும். வீடு, வாகன வகையில் செய்ய இருந்த மாற்றம் சிறப்பாக நிறைவேறும்.  பிள்ளைகள் செயல்திறனை வளர்த்து படிப்பு, பணி, தொழிலில் முன்னேற்றம் காண்பர். வேலையில்லாத குழந்தைகளுக்கு தகுந்த பணி கிடைக்கும்.  சொத்துவாங்க யோகம் உண்டு. பூர்வ சொத்தில் கிடைக்கிற வருமானம் உயரும். உடல்நலம் நன்றாக இருக்கும். ஆடம்பரச்செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். தம்பதியர் ஒற்றுமையாக நடந்து சமூகத்திலும் உறவினர்களிடமும் நன்மதிப்பு பெறுவர்.
வியாபாரம் செய்வோருக்கு அபரிமிதமான பணவரவு கிடைக்கும். ஏழரைச் சனிகாலம் என்பதால் அவ்வப்போது ஏற்படும் தடைகளைக் கடக்க வேண்டியிருக்கும். பணியாளர்களின் தேவைகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவீர்கள். சங்கங்களில் சிலருக்கு பதவி பொறுப்பு கிடைக்கும். சோம்பலைத் தவிர்த்து உழைத்தால் அனைத்து விதமான இனங்களிலும் வெற்றிகளைக் குவிப்பீர்கள். மின்னணு சாதனங்கள் சார்ந்த வியாபாரம் செய்பவர்கள் விற்பனையில் முன்னேற்றம் அடைவர். அதிக லாபம் கிடைக்கும். சேமிப்பு உயரும். புதிய நிறுவனங்களில் அதிக சரக்கு கொள்முதல் செய்வீர்கள். வெளிநாட்டு பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள் தங்களது பணிகளை எளிதாக நிறைவேற்றுவர். அதிகாரிகளின் பாராட்டு, நல்ல சம்பளம், பிற சலுகைகள் பெறுவர். அனுபவசாலிகள், தந்தையின் ஆலோசனையை ஏற்று நடப்பதால் பணியில் உயரிய பலன்களைபெறுவீர்கள். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை எளிதாக புரிந்து செயல்படுவர். பணி இலக்கு திட்டமிட்ட காலத்தைவிட சீக்கிரம் நிறைவேறும். பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும்.
குடும்பப் பெண்கள் கணவரை அனுசரித்து நடந்து நற்பெயர் பெறுவர். குடும்பச் செலவுக்கான பணவசதி தாராளமாகக் கிடைக்கும். மகிழ்ச்சிகர வாழ்வுமுறை தொடர்ந்திடும். புத்திரப்பேறு விரும்புபவர்களுக்கு அனுகூலம் உண்டு. ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் ஆர்டர் கிடைத்து உற்பத்தி, விற்பனையை உயர்த்துவர். உபரி பணவரவு உண்டு. இளம்பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.
மாணவர்கள்  தேர்ச்சி பெறுவர். ஆராய்ச்சி மாணவர்கள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சிக்கலாம். சக மாணவர்கள் படிப்பில் உதவுவர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும். சுற்றுலா பயணத்திட்டம் நல்லவிதமாக நிறைவேறும். அரசியல்வாதிகள் கடந்த காலத்தில் ஏற்பட்ட குளறுபடியை சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களிடம் எதிர்பார்த்த நன்மதிப்பு கிடைக்கும். புதிய பதவி தேடிவரும். உடன் உள்ளோர்கள் உங்கள் பணி சிறக்க உதவி புரிவர். எதிரியை வெல்லும் திறன் அறிவீர்கள். கூடுதல் சொத்து கிடைக்கும்.
அரசு அதிகாரிகளின் மதிப்பைப் பெற்று திட்டங்களை எளிதாக நிறைவேற்றுவீர்கள். அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு காண்பர். சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். தள்ளி தள்ளி போய்க் கொண்டிருந்த அனைத்து சுபகாரியங்களையும் குரு நடத்தி வைப்பார். தயாராக இருங்கள். எந்த காரியத்தை நினைத்தாலும், எடுத்தாலும் பயந்து கொண்டிருந்தீர்களே, இனி அந்த பயத்தை எல்லாம் தூக்கி தூர வையுங்கள். எந்த காரியத்தையும் துணிந்து செய்யுங்கள்.
இளைய ச்கோதரத்தின் உடல்நிலையில் கவனம் தேவை. தாயார் தாய்வழி உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீடு, வாகனம் யோகம் ஏற்படும். ரொம்ப நாளாக வசூலாகாமல் இருந்த கடன் வசூலாகும். உடல்நிலையில் கவனம் தேவை. இயந்திரங்களை கையாளும் மிகுந்த எச்சரிக்கை தேவை. டூவீலர் ஆகியவற்றிலும் கவனம் தேவை. கணவன் மனையின் உறவில் நல்ல முன்னேற்றம் உண்டு. கொஞ்சம் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.

பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனுக்கு நெய் விளக்கு ஏற்றி வணங்கி வரவும். முடிந்தவரை  கருட தரிசனம் செய்யவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.

No comments: