விருச்சிகம்: விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நக்ஷத்திரங்கள் பிறந்தவர்கள் மற்றும் தோ, நா, நீ, நே, நோ, ய, யி, யு, நு ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.
உழைப்பின் மூலமாக மட்டுமே புகழை அடையத் துடிக்கும் விருச்சிகம் ராசி அன்பர்களே! நீங்கள் நவக்கிரகங்களில் தைரியத்தை வழங்குபவன் என்றழைக்கப்படும் பூமிகாரகனாகிய செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். குறிக்கோளுடன் வாழ்ந்து வாழ்க்கையை எடுத்துக்காட்டாக வாழிபவர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு தனவாக்குஸ்தானம் மற்றும் பூர்வபுண்ணிய பஞ்சமஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய களத்திரஸ்தானத்தில் இருந்து ஆயுள்ஸ்தானராசிக்கு இடம் பெயர்கிறார். உங்கள் ராசிக்கு 8ம் இடத்தில் இருந்து ராசியில் இருந்து உங்களுடைய தனவாக்குஸ்தானம், சுகஸ்தானம், விரையமோக்ஷஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் ரணருணரோக ஸ்தானத்தில் கேதுவு, விரையஸ்தானத்தில் ராகுவும் இருக்கிறார்கள்.
குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடமான மிதுனத்தில் பெயர்ச்சியாகி அனுகூலக்குறைவான தன்மையில் உள்ளார். அஷ்டம ஸ்தான குரு வாழ்வில் சில கஷ்டங்களை எதிர்கொள்ள வைப்பார். ஏழரைச்சனியின் பிடியிலும் சிக்கியுள்ள நேரம் இது. மனதில் இனம் புரியாத தயக்கம், கலக்கம் போன்றவை தருவார். இருப்பினும் குருவின் பார்வை பதிகிற இடங்களின் வழியாக நல்ல பலன் வந்து சேரும். குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு 12ம் இடமான வெளியூர் பயணம், சுபச்செலவு, ராசிக்கு 2ம் இடமான பணவரவு, குடும்ப ஒற்றுமை, 4ம் இடமான வீடு, வாகனம் ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார்.
இந்த சமயத்தில் பேச்சு தான் உங்களுக்கு எதிரி. பணவரவு ஓரளவு நன்றாக இருக்கும் என்றாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டால் தான் இந்த நிலை. நடைமுறை செலவு அதிகரிக்கும். சிறு அளவில் கடன் வாங்க நேரிடலாம். தம்பி, தங்கைகள் அவர்களுடைய சுயலாபத்தையே பார்ப்பார்கள். வீடு, வாகன வகையில் எல்லாம் நல்லபடியாகவே இருக்கும். தாய்வழி உறவினர்கள் உங்கள் வாழ்வு சிறக்க உதவுவர். பிள்ளைகள் படிப்பில் தரத்தேர்ச்சி பெறுவர். அவர்களுக்கு கவுரவமான வேலை கிடைக்கும்.
உடல்நிலை பாதிக்கப்படலாம். உயரமான கட்டடங்களில் பணி செய்பவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். படி, லிப்டில் ஏறும் போது கவனம் தேவை. தண்ணீர் அதிகமாக உள்ள இடங்களிலும், நெருப்பு, மின்சார விஷயத்திலும் கவனம். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து குடும்ப மகிழ்ச்சி பாதுகாத்திடுவர். முக்கிய தருணங்களில் நண்பர்களின் உதவி கிடைக்கும். குழந்தைகளின் திருமணம், படிப்புச்செலவு உள்ளிட்ட சுபச்செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் புதிய அனுபவமும் நன்மையும் பெற்றுத்தரும். வாகன போக்குவரத்தில் மிதவேகமும் கூடுதல் கவனமும் அவசியம்.
தொழில் சார்ந்த வகையில் பணிச்சுமை அதிகரிக்கும். தளராத முயற்சியால் இலக்குகளை நிறைவேற்றுவீர்கள். தொழிலதிபர்கள் உற்பத்தி இலக்கை எட்டுவதில் தாமதம் அடைவர். மற்றவர்களுக்கும் இதே நிலையே. குறைந்த லாபம் பெறும் வகையிலான ஒப்பந்தங்களே கையெழுத்தாகும். தொழிற்சாலையில் பாதுகாப்பு நடைமுறைகளை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் சிலருக்கு தொழில் தாக்குப்பிடிக்கும்.
வியாபாரிகள் விற்பனை இலக்கை எட்ட கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். மற்றவர்களுக்கு போட்டி கடுமையாக இருக்கும். லாபம் ஓரளவு கிடைக்கும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். பிறருக்காக எந்த வகையிலும் ஜாமீன் தரக்கூடாது. சுயதொழில் துவங்க நினைப்பவர்களுக்கு இது உகந்த சூழ்நிலை அல்ல. இருந்த போதிலும் தக்க ஆலோசனைகளோடு புதிய தொழில் தொடங்கலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் சிரமம் குறுக்கிடும். நிர்வாகத்தின் கண்டிப்பினால் மனச்சோர்வு ஏற்படும். சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. கம்பெனி, அலுவலக நடைமுறைகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம். பணிபுரியும் பெண்கள் கவனக்குறைவால் பணியில் குளறுபடி உருவாகப்பெறுவர். ஒழுங்கு நடவடிக்கை இருக்கும். இரவல் பொருள் கொடுக்க, வாங்கக்கூடாது.
குடும்பப் பெண்கள் பணத்தட்டுப்பாடு காரணமாக, செலவுகளை கட்டுப்படுத்தும் விதம் குறித்து கவலைகொள்வர். கணவர், குடும்ப உறுப்பினர்களின் உதவி மனதுக்கு ஆறுதல் தரும். தாய்வழி சீர்முறை கிடைத்து மகிழ்வீர்கள். சுயதொழில் புரியும் பெண்கள் குறைந்த உற்பத்தி, சுமாரான விற்பனை காண்பர். நடைமுறைச்செலவு அதிகரிக்கும். இயன்றவரை ரொக்கத்திற்கு பொருள் விற்பது நல்லது.
மாணவர்களுக்கு உரிய பயிற்சியும், கூடுதல் அக்கறையுமே தரத்தேர்ச்சியை தக்கவைக்கும். வெளிவட்டார பழக்க வழக்கத்தையும், வாகனத்தில் செல்வதையும் பெருமளவில் குறைப்பது நல்லது. படிப்பிற்கான பணவசதி கிடைக்க தாமதமாகும். சாகச விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது.
அரசியல்வாதிகளுக்கு கடந்த காலத்தில் பெற்ற நற்பெயருக்கு களங்கம் வரும் வகையில் மாறுபட்ட நிகழ்வுகள் குறுக்கிடும். பொது விவகாரங்களில் ஒதுங்கிப் போவதால் சிரமம் தவிர்க்லகாம். ஆதரவாளர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம். மதிப்பு குறையும். அதிகாரிகளை அனுசரித்து சென்றால் தான், அரசுத்தொடர்பான காரியங்களை சாதிக்க முடியும். எதிரிகள் கலந்துகொள்கிற நிகழ்ச்சிகளை தவிர்ப்பதால் நன்னிலை பெறலாம்.
விவசாயிகளுக்கு கூடுதல் நேரம் உழைக்க வேண்டியிருக்கும். அளவான மகசூல், சுமாரான பணவரவு உண்டு. கால்நடை வளர்ப்பில் வருகிற லாபம் மனதுக்கு நம்பிக்கை தரும்.
பரிகாரம் : செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம். இலுப்பைஎண்ணையில் வீட்டில் விளக்கு ஏற்றவும்.
No comments:
Post a Comment