Friday, May 17, 2013

2013 குரு பெயர்ச்சிப் பலன்கள் : தனுசு



தனுசு: மூலம், பூராடம், உத்திராடம் 1, 2, 3ம் பாதங்கள் ஆகிய நக்ஷத்திரங்கள் பிறந்தவர்கள்  மற்றும் யே, யோ, ப, பி, பூ, த, ட, பே, ஜ, ஜா  ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

சராசரி மனிதனாய் பிறந்து தங்களது நற்செயல்களின் மூலமாக புகழும் பெருமையும் அடையும் தனுசு ராசி அன்பர்களே! நீங்கள் நவக்கிரகங்களில் சுபத்தை வழங்குபவர் என்றழைக்கப்படும் தேவகுருவாகிய குருவை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். சாதனையாளர்களாக வலம் வந்து மற்றவர்களுக்கு பயன் தருபவர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு மற்றும் சுகஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய ரணருண ரோகஸ்தானத்தில் இருந்து களத்திரஸ்தானராசிக்கு இடம் பெயர்கிறார். உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் இருந்து ராசியில் இருந்து உங்களுடைய ராசி, தைரியவீர்யஸ்தானம், லாபஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் பஞ்சம பூர்வபுண்ணியஸ்தானத்தில் கேதுவும், லாபஸ்தானத்தில் சனி, ராகுவும் இருக்கிறார்கள்.
குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு ஏழாம் இடமான மிதுனத்தில் மிகுந்த அனுகூலமாக உள்ளார். கடந்த ஒரு வருட காலமாக சில சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கும் நீங்கள், இந்த சமயத்தில் அவற்றில் இருந்து ஓரளவு விடுபடுவீர்கள். கடந்த காலத்தில் இருந்த செயல் சுணக்கம் மாறி சுறுசுறுப்பு பெறுவீர்கள். குருவின் 5ம் பார்வை ராசிக்கு 11ம் இடத்தில் பதிவதால் ஆதாய பணவரவு உண்டு. 7ம் பார்வை ராசியில் பதிவதால் மனத்துணிவு, தெளிவான சிந்தனைத்திறன் ஏற்படும்.
9ம் பார்வை ராசிக்கு 3ம் இடத்தில் பதிவதால் புகழ், அந்தஸ்து பெறுவீர்கள். அக்கம் பக்கத்தவருடன் அன்பு வளரும். தம்பி, தங்கைகள் வாழ்வில் முன்னேறி உங்களுக்கும் உதவிகரமாக செயல்படுவர். வீடு, வாகன வகையில் திருப்திகரமான நிலை உண்டு.  பிள்ளைகள் குடும்பத்தின் பாரம்பரிய பெருமையைக் காத்திடும் வகையில் நற்செயல்களைச் செய்வர். படிப்பில் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பிலும் கவுரவமான நிலையை அடைவர். பூர்வசொத்தில் பெறும் வருமானத்தின் அளவு உயரும். உடல்நலம் சிறந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். நிர்பந்தம் தரும் கடன்களை பெருமளவில் சரிசெய்வீர்கள்.
ஜெனன கால ஜாதக  சந்திரனுக்கு ஏழில் கோசார குரு அமர்ந்து கெஜகேசரி யோகத்தை உருவாக்குகிறது. இதனால் தொட்டது துலங்கும். புதிய பதவி, அளப்பரிய நற்பலன் எளிதாக வந்துசேரும். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து கொள்வதுடன், இணைந்து ஆலோசனை செய்து குடும்பவாழ்வு சிறக்க பாடுபடுவர். வாழ்க்கைத்துணையுடன் அமைதியை கடைபிடியுங்கள். உங்கள் முரட்டுதனத்தை விட்டுவிட்டு சற்று இறங்கி வாருங்கள். உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வாகனம், இயந்திரங்கள், நீர்நிலைகளில் கவனம் தேவை. சோம்பல் கூடவே கூடாது. தந்தையாருடன் நல்ல இணக்கமான சூழ்நிலை நிலவும். எவ்வளவு வேலை செய்து இவ்வளவு நாளும் நல்ல பெயர் கிடைக்கவில்லையே என ஏங்கியிருந்தீர்களே, இனி அந்த நிலை மாறும். உங்களுக்கு பணியிடத்தினில் அங்கீகாரம் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம்.
லாபகரமான முதலீடுகளில் முதலீடு செய்ய தகுதியானவர்களின் ஆலோசனைகளை பெற்று செய்யவும். தூங்கப்போகும் முன் வீண் கற்பனைகள், சந்தேகங்கள் கூடவே கூடாது. நண்பர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். நண்பர்களுடன் இணைந்து புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உபரி வருமானம் உண்டு. இளம் வயதினருக்கு திருமண முயற்சி நிறைவேறும். தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி அதிகரித்து தொழிலில் சிறப்பு ஏற்படும். மற்ற தொழில் செய்வோருக்கும் தாராள லாபம் உண்டு. தொழிலதிபர் சங்கங்களில் பதவி கிடைக்கும். மங்கல நிகழ்ச்சிகளுக்கு தலைமை வகிப்பீர்கள். புதிய சொத்து சேர்க்கை உண்டு. வெளிநாட்டு சுற்றுலா பயண வாய்ப்பு நிறைவேறும். புதிதாக தொழில் துவங்க முயற்சிப்பவர்கள் அளவான மூலதனத்துடன் துவங்கலாம்.
வியாபார சங்கங்களில் சிலருக்கு கவுரவமான பதவி வரும். உத்தொயோகஸ்தர்கள் திறமையாகச் செயல்படுவர். பணிகளை வேகமாக முடித்து பதவி உயர்வு, புதிய பொறுப்பு, சலுகைகளைப் பெறுவீர்கள். சக பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சமூகத்தில் நன்மதிப்பு கிடைக்கும். தொழில்நுட்பங்களை ஆர்வமுடன் கற்றுக்கொள்வீர்கள். பணிபுரியும் பெண்கள் திறமையைப் பயன்படுத்தி பணிக்கு பெருமை சேர்த்திடுவர். எதிர்பார்த்த பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும்.
குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு கிடைக்கப்பெறுவர். குடும்பசெலவுக்கான பணவசதி திருப்திகரமாக இருக்கும். உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் விற்பனையில் வியத்தகு இலக்கை அடைவர். உபரி வருமானம் அபிவிருத்தி பணிகளுக்கு பயன்படும். இளம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமண வாழ்வு கைகூடும்.
மாணவர்கள் ஞாபகத்திறன் சிறந்து உயர்ந்த தேர்ச்சி அடைவர். மற்ற துறை மாணவர்களுக்கும் பாராட்டும், பரிசும் கிடைக்கும். சக மாணவர்களும், ஆசிரியர்களும் தேவையான உதவி புரிவர். படிப்பை முடித்தவர்களுக்கு கவுரவமான வேலைவாய்ப்பு கிடைக்கும். அரசியல்வாதிகள் கடந்தகால குறைபாடுகளைச் சரிசெய்வீர்கள். ஆதரவாளர்களின் மனதில் நம்பிக்கை உருவாகும். எதிர்பார்த்த பதவி தானாக வந்துசேரும். அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை கவனமுடன் கேட்டு நிறைவேற்றித்தருவர். எதிரிகள் வியந்து போகிற அளவில் உங்கள் செயல்பாடுகளின் தரம் அமையும். 

பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும். கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும்.

No comments: